தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கும்போது, உலகம் முழுவதுமே கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று கூறி வணங்குவதுதான் வழக்கமாகும்.
‘அரோகரா’ என்பதில், ‘ரோகம்’என்றால் நோய், ‘அரோகம்’ என்றால் நோயில்லாமல் என்று அர்த்தமாகும்.
‘அரன்’ என்றால் காப்பவன், ‘ஹர’ என்றால் நீக்குபவன் என்று அர்த்தமாகும்.
முருகா, ‘நோய் நொடி மற்றும் துன்பங்களில் இருந்து எங்களை காப்பாற்றி காத்தருள வேண்டும் என்பதே இதன் முழுமையான அர்த்தமாக கருதப்படுகின்றது.
உலகில் சிறிது காலமே வாழ முடிகின்ற மனித வாழ்வில் எத்தகைய துன்பம், நோய் போன்று எதுவுமின்றி சிறப்பாக வாழ்வதற்கு துணையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே, முருகப்பெருமானை வணங்கும்போது அரோகரா என்று கூறி வழிபாடு செய்கிறார்கள்.
எப்படி வந்தது?
சிவபெருமானை வணங்கும்போது, ஹர ஹர மகாதேவா என்று கூறி வணங்குவது வழக்கமாகும்.
சமய குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, பல்லக்கை தூக்கிச் சென்றவர்கள் பயணக்களைப்பு தெரியாமல் இருப்பதற்காக ஏலே லோ ஐலசா... ஏலே லோ என்று பாடிக்கொண்டு சென்றார்கள்.
இதைக்கேட்ட திருஞானசம்பந்தர், அதற்கான அர்த்தத்தை கேட்டார். அதற்கான பொருள் யாருக்கும் தெரியவில்லை. அதையடுத்து பொருள் இல்லாத ஒன்றை சொல்வதை விட, அர ஹர ஹர என்று சொல்லுங்கள் என்று திருஞானசம்பந்தர், கற்றுக்கொடுத்தார்.
அதன்பிறகுதான் அர ஹரோ ஹர என்று கூறும் பழக்கம் தொடங்கியது. பின்னர், அதுவே காலப்போக்கில் சுருங்கி, அரோஹரா என்றாகி விட்டது. இவ்வாறாக முருகனுக்கு அரோகரா என்று கூறும் பழக்கம் திருஞானசம்பந்தர் மூலமாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை மாத பெரிய கிருத்திகை போன்ற திருவிழாக்களின் போது, முருகனுக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றி வேல் வீரவேல் என்று கூறி வணங்குகின்றனர்.
மேலும், சஷ்டி, கிருத்திகை தினங்களில் முருகனை வணங்கும்போது, வெற்றிவேலை கையில் ஏந்தியிருக்கும் முருகா, உன் வேலால் எங்கள் துன்பங்களை நீக்கி, எங்களை காத்தருள்வாயாக என்று கூறி வணங்குகின்றனர். மார்கழி வளர்பிறை சஷ்டி தினத்தில் முருகப்பெருமானை அரோகரா என்று கூறி வணங்கும்போது சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
அரோகரா என்ற சொல்லுக்கு போய்விட்டது என்று பொருள். ஹர ஓ ஹர என்ற சொல்லே தமிழில் அரோகரா என திரிந்துவிட்டது. சிவ நாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹர என்றால் பாவங்கள் போய்விட்டது என்று பொருளாகும்.
இதை தொடர்ந்து கூறினாள் பாவங்கள் அனைத்தும் ஒழிந்து விடும். அதனால் தான் அண்ணாமலையில் சிவபெருமானை வணங்கும்போதும் அண்ணாமலைக்கு அரோஹரா என்று கூறப்படுகின்றது.