அருள்மிகு சௌந்தர்யநாயகி தாயார் சமேத நாகநாதர் (கேது தலம்) திருக்கோவில், கீழப்பெரும்பள்ளம், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் தாலுகா.
நவகிரக ஸ்தலங்களில் கேது பகவானுக்கு உரிய ஸ்தலமாக கீழப்பெரும்பள்ளம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் இறைவன் நாகநாத சுவாமியாக அருள்பாலிக்கின்றார், அம்பாள் சௌந்தர்யநாயகியாக அருள்பாலிக்கின்றார்.
கேது பகவான் பிறப்பில் ஒரு அசுரன். விப்ரசித்து மற்றும் சிம்கிகைக்கு மகனாக பிறந்து வளர்ந்து வந்தான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்போது, அமிர்தம் வெளிப்பட்டது.
அப்போது மகாவிஷ்ணு மோகினியாக மாறி தேவர்களுக்கு அமிர்தத்தை பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது அசுரனாகிய கேது தானும் அமிர்தத்தை பருகவேண்டும் என்று நினைத்த கேது, உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு, மகாவிஷ்ணுவிடம் அமிர்தத்தை பெற்று பருகிவிட்டான்.
உண்மையை அறிந்த சூரியனும், சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் சொல்ல, மகாவிஷ்ணு தன் கையில் வைத்திருந்த அகப்பையால் கேதுவின் கழுத்தில் வீச, கேது தலை வேறாக, உடல் வேறாக விழுந்தான்.
இருப்பினும் அமிர்தத்தின் மகிமையால் அவனது உடலில் உயிர் இருந்து. இருப்பினும் தனது தவறை உணர்ந்த கேது, இறைவனிடம் வேண்டி நிற்க, இறைவன் அவனது உடலில் ஐந்து நாகத்தலையுடன் செந்நிறமாக மாற்றி அருள் செய்தார்.
மேலும் கேதுவை நிழல் கிரகமாகவும் ஆக்கினார். எனவே நவகிரகங்களில் ஒன்றான கேது வழிபட்ட ஸ்தலங்களில் கீழப்பெரும்பள்ளமும் ஒன்று.
தல வரலாறு:
அமிர்தம் பெற வேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி எனும் நாகத்தை கையிராகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது வலி தாங்காத வாசுகி நஞ்சைக் கக்கியது.
இந்த நஞ்சை உண்ட சிவபெருமான் நீலகண்டன் என்ற பெயர்பெற்றார். அப்போது அசுரர்கள் அமிர்தம் கிடைக்காததின் கோபத்தால் வாசுகி நாகத்தை தாக்கி வீசி எறிந்தனர், வீசி எறியப்பட்ட இந்த வாசுகி நாகம் பூம்புகார் அருகில் இருந்த மூங்கில் காட்டில் வந்து விழுந்தது வாசுகி நாகம், சிவபெருமான் நஞ்சு உண்ண, தான் காரணமாகிவிட்டோமே என்று வருந்தியது.
அதன் காரணமாக சிவனை நோக்கி தவம் செய்ய, சிவபெருமான் காட்சியளித்தார் அப்போது வாசுகி நாகம் தான் செய்த பாவத்தை மன்னித்து அருளும்படியும், தான் தவம் செய்த இந்த மூங்கில் காட்டிலேயே கோவில்கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று வாசுகி நாகம் கேட்டுக்கொண்டது.
அதன்படியே மூங்கில் காடான இத்தலத்தில் கோயில் கொண்டு, நாகநாதர் என்ற பெயரில் இறைவன் காட்சியளிக்கின்றார்.