சரஸ்வதி நதிக்கரையில் "குனி" என்ற முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரு கன்னிப்பெண் பணிவிடை செய்து வந்தாள். முனிவரின் காலத்திற்குப் பின் முதுமை அடைந்த அந்தப்பெண் தனக்கு முக்தி வேண்டி கடுந்தவம் செய்தாள்.
அதைக்கண்ட நாரதர் திருமண வாழ்வில் ஈடுபட்டு கன்னித்தன்மை நீங்கினால் தான் முக்தி அடைய முடியும் என்று அறிவுரை கூறினார்.
உடனே அப்பெண் வயது முதிர்ந்த காரணத்தால், தானாகவே வந்து யார் அவள் கரத்தைப் பற்றுகிறார்களோ, அவரையே திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்தாள்.
"காலவர்" என்ற முனிவர், அப்பெண் முதுமையானவள் என்றாலும் தெய்வீக அம்சம் கொண்டிருந்ததால் அவளையே திருமணம் செய்து கொண்டார்.
முனிவருக்கு, இறையருளால் ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு அவரது மனைவி முக்தி அடைந்தாள்.
அத்தனைப் பெண் குழந்தைகளை வைத்து காப்பாற்ற சிரமப்பட்ட முனிவர் இறுதியில் திருவிடந்தை வந்தார். இங்கு அருள்பாலிக்கும் அருள்மிகு வராக மூர்த்தியை வணங்கி கடுமையாகப் பிரார்த்தனை செய்தார்.
முனிவரின் பக்திக்கு மனமிறங்கிய பெருமாள் தானே மாப்பிள்ளையாக உருவெடுத்து தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களும் திருமணம் செய்து கொண்டார்.
பெருமாள் நித்தம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் "நித்ய கல்யாண பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார்.
தினந்தோறும் திருமணம் செய்து கொண்ட பெருமாள் கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒரே பெண்ணாக மாற்றி தன் இடதுபக்க திருத்தொடையில் வைத்துக் கொண்டு வராகப் பெருமாளாகவே இன்றளவும் காட்சி தருகிறார்.
அவ்வாறாக 360 பெண்களும் ஒருவராக மாறிய நங்கைக்கு "அகிலவல்லித்தாயார்" என்பது திருநாமம். 360 பெண்களில் முதல் பெண்ணிற்கு கோமளவல்லி என்ற பெயர் இருந்ததால், இத்தலத்தில் தனிச்சன்னதி கொண்டுள்ள தாயாருக்கு "கோமளவல்லித் தாயார்" என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீதேவியான மகாலட்சுமி வைகுண்ட வாசனின் இடப்பக்க மார்பில் வாசம் செய்யக்கூடிய ஒரே திவ்யதேசம்.
வருடத்தில் 365 நாட்களும் (ஆண்டில் எல்லா நாட்களும்) திருமணம் நடைபெறும் சிறப்பான திவ்யதேசம்.
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோவில் :-
திருவிடந்தை சென்னை