Breaking News :

Sunday, December 15
.

இரவில் வியர்க்கும் பழனி முருகன் சிலை?


அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.

போகர் சித்தர், தனது சீடர் புலிப்பாணி உட்பட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் இந்த நவபாஷண சிலை செய்யப் பட்டுள்ளது.

லிங்கம், குதிரைப் பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷணம், ரத்த பாஷணம், கம்பி நவரசம், கௌரி பாஷணம், சீதை பாஷணம் என ஒன்பது வகையான மிக ஆபூர்வமான மூலிகைகளைக் கொண்டு கடினப் பிரயாசையுடன் இந்த சிலையை உருவாக்கிய போகர், இந்த சிலையை வைக்க செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகத் தேடிய போது, அதற்கு பொருத்தமான இடம் இந்த பழனி மலை என்பதை தேர்வு செய்து, இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

நவபாஷணம் என்ற இந்த தண்டாயுதபாணி சிலையின் பிரதான அம்சம், இரவில் இந்த சிலைக்கு வியர்க்கும். அது தான் இந்த நவபாஷண சிலையின் சிறப்பம்சம்!

அந்த வியர்வை பெருக்கெடுக்கும். அந்த ஒவ்வொரு வியர்வைத் துளியிலும், அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை இருக்கிறது. அதனால் தான், இங்கு தினந்தோறும் ராக்கால பூஜையின் போது, இந்த சிலை முழுவதிலும் சந்தனம் பூசப்படும்.மேலும், சிலைக்கு அடியில் ஒரு பாத்திரமும் வைக்கப் படும்.

மறுநாள் அதிகாலை சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தனத்தில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கீழே வைக்கப் பட்ட பாத்திரத்திலும் வழிந்து வரும் வியர்வை நீரானது கேசகரிக்கப் படும். இதனைக் கௌபீனத் தீர்த்தம் என்று சொல்கிறார்கள்.  இது உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம். இந்த சந்தனமும், கௌபீன தீர்த்தமும், அரு மருந்தாகக் கருதப்படுகிறது. அதனால், இதைப் பிரசாதமாகப் பெறுவதற்காக, இந்த விபரம் தெரிந்தவர்கள் நூற்றுக் கணக்கில், காலை 4 மணிக்கு கோவிலில் குவிந்து விடுவார்கள். கி.மு. 500- லிருந்தே இம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.

தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.

மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன. விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.
இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.