தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில், பாபநாசத்தை அடுத்த நல்லூரில் உள்ளது கல்யாண சுந்தரர் திருக்கோயில் .இக் கோயிலில் அருள் பாலிக்கும் ஈசன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் 5 நிறங்களில் காட்சி தருகிறார். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் மலை அருள் பாலிக்கிறார் .இத் தல சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை கொண்டுள்ளது.
காலையில் சூரியன் உதிப்பதற்கும் மாலையில் சூரியன் மறைவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் 6 நாழிகைக்கு ஒரு முறை மூலவர் ஈசன் வண்ணம் மாறுகிறார் .இதனால் இத்தல இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.
காலை 6 முதல் 8 :15 வரை தாமிர வண்ணத்திலும் ,8 :15 முதல் 11 :30 மணி வரை இளஞ்சிவப்பு வண்ணத்திலும், 11:30 முதல் மதியம் 2:30 மணி வரை உருக்கிய தங்க வண்ணத்திலும் ,2:30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை வண்ணத்திலும், 5 முதல் 6 மணி வரை செம்மை வண்ணத்திலும் காட்சி தருவதாக தல புராணம் கூறுகின்றது.
மாடக்கோயில் வகையை சேர்ந்த இந்த ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டியது. யானை உள்ளே போக முடியாதவாறு கோயில் அமைந்திருக்கிறது. முதன்மையான வாயிலும் அதற்கு அடுத்த வாயிலும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்காமல் சில படிக்கட்டுகளை கடந்து ஏறிச் சென்று மூலவர் சன்னதியை அடைய முடியும்.
பாண்டவர்களில் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும் ,கர்ணனை ஆற்றில் விட்டதாலும் ,அவளுக்கு தோஷம் பற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி இறைவனிடம் முறையிட்டாள் .ஒரே நாளில் ஏழு கடலில் நீராடினால் மன நிம்மதி கிடைப்பதோடு செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள் .அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கிய போது ஏழு கடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலக்கும் சப்த சாகர தீர்த்தம் தென்னகத்தின் நல்லூர் எனப்படும் தலத்தில் உள்ளதை அறிந்தாள். இத்தலம் வந்து சிவபூஜை செய்து சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி மன நிம்மதி அடைந்தாள் .மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தனது தோஷம் நீங்க பெற்றாள் .இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.
பிரம்மதேவன் திருக்குளத்தின் கீழ் திசையில் ரிக் வேதத்தையும், தென் திசையில் யசூர் வேதத்தையும், மேற்கு திசையில் சாம வேதத்தையும், வடதிசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்த கோடி மகா மந்திரங்களையும், பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தல புராணம் கூறுகிறது.
பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவு கூறும் வகையில் சடாரியை தலையில் சூட்டுவது வழக்கம்.சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லையென்றாலும், நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை, தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் சிரசில் சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
நன்றி: ஆர்.ஜெயலட்சுமி.