Breaking News :

Saturday, December 21
.

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர்!


கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.
 
இங்கு அம்பாள் கோல் வளங்கையம்மையுடன் பதஞ்சலியீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் மதிப்பு மரியாதையும் பணிசெய்யும் இடத்தில் கிடைக்கும்.

மேலும் பதவிஉயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிராத்தனைகள் நிறைவேறியதும் சாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் செலுத்துகின்றனர்.

இங்குள்ள அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வளையல் அணிவித்து வழிபடுகிறார்கள்.

கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள இக்கோவிலுக்கு மதுகவனம் என்ற பெயர் உண்டு சிவன் இங்கு சிறிய லிங்கமாக காட்சி தருகிறார்.

நடராஜப் பெருமானின் திருநடனக் காட்சி

 சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலங்களுள் 32வது தேவாரப் பதியாகப் போற்றப்படுவது திருக்கானாட்டு முள்ளூர்.

மேற்கானாடு என்று அழைக்கப்பட்ட இந்த தலம் தற்போது கானாட்டாம்புலியூர் என்றழைக்கப்படுகிறது. ஆதியில் சூரியன் தனது பெயரால் இங்கு தீர்த்தம் ஏற்படுத்தி, இத்தல ஈசனை பன்னீர் இலைகளாலும், பன்னீர் புஷ்பங்களாலும் பூஜித்து, பேறு பெற்றுள்ளான்.

இந்திரனும் இங்கு ஈசனைப் பூஜித்துள்ளான்.பரந்தாமனின் பாம்பணையாய் இருந்த ஆதிசேஷன், பதஞ்சலியாய் உருக்கொண்டு, தில்லைக்கு வந்து, சிற்றம்பலவாணனை வணங்கி, வழிபட்டு, அவரது நாட்டியக் காட்சியினைக் கண்டுகளித்தபின், தலயாத்திரை புறப்பட்டார்.

பரம்பொருளான பரமேஸ்வரனிடம் கொண்ட தீராப்பற்றின் காரணமாக, கொள்ளிடக்கரை மீது பூமரங்களும், முட்காடுகளும் சூழ்ந்த இடந்தன்னில் தேவர்கள் பூஜித்த சிவலிங்கத்தைக் கண்டு பூசனைப் புரிந்தார்.

மீண்டும் இங்கு நடராஜப் பெருமானின் திருநடனக்காட்சி கண்டு ஆனந்தம் அடைந்தார்.

இவர் பூஜித்த காரணத்தால் இத்தல ஈசர் பதஞ்சலிநாதர் எனப் போற்றப்படுகின்றார்.

 ஆலயத்தின் எதிரே சூரிய புஷ்கரணி அகன்று காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஆலயம் அழகிய மூன்று நிலை சிறிய ராஜகோபுரத்துடன் திகழ்கிறது.

நேராக ஸ்வாமி சந்நதி. முன்மண்டபம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தின் இடப்புறம் அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியுள்ளது.

அம்பிகை இங்கு நின்றவண்ணம், மேலிரு கரங்களில் அக்கமாலை மற்றும் தாமரையுடனும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகவும் கொண்டு அற்புத தரிசனமளிக்கிறாள். கோல்வளைக்கையம்மை என்றும் கானார்க்குழலியென்றும் அழைக்கப்படுகின்றாள்.

மகாமண்டபத்தின் இடப்பக்கம் ஆலய உற்சவ விக்ரஹங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவகோட்டத்தில் முறையே தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு பார்த்தவாறு கணபதி சந்நதி அமைந்துள்ளது.

பதஞ்சலி முனிவரது கற்சிலையும் உள்ளது. இத்தலத்தின் விருட்சமாக வெள்ளருக்கஞ்செடி விளங்குகின்றது.

கடலூரில் இருந்து கானாட்டாம் புலியூர்ருக்கு பஸ்வசதி உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.