Breaking News :

Saturday, December 21
.

பெருமாள் கோயில்களில் நம் தலையில் சடாரி சாத்துவதன் ஏன்?


பெருமாள் கோயில்களில் ஸ்வாமியை வணங்கிய பின்பு பக்தர்களுக்கு துளசியும்,துளசி தீர்த்தமும் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு சடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். இதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் எதற்காக சடாரியை தலையில் வைக்கிறார்கள் என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா! அதற்கான விளக்கத்தை இந்தப் பதிவில் காண்போம்.

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரியை வைணவ கோயில்களில் காணலாம். இறை தரிசனத்திற்குப் பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. சடம் ஹரி (பாதம்) ஸ்ரீ சடாரி என்று அழைக்கப்படுகிறது.

சடாரி வைக்கும்பொழுது பணிந்து, புருவங்களுக்கு நடுவில் வலக்கையின் நடுவிரலை வைத்து மூக்கு மற்றும் வாயை பொத்தி, குனிந்து பெருமாளின் திருப்பாதத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சடாரியை தலையில் வைப்பதன் ரகசியம்: முன்பொரு சமயம் திருமால் வாமனனாக வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓங்கி உலகளந்த வேளையில் தனது வலது திருவடியால் மண்ணுலகையும், இடது திருவடியால் விண்ணுலகத்தையும் அளந்தார்.

அப்போது மண்ணுலகை அளந்த வலது திருவடியை உலகில் உள்ள அனைத்து உயிர்களின் தலையிலும் பதித்தார் திருமால். அந்த நேரத்தில் நாம் புல்லாகவோ, செடியாகவோ, எறும்பாகவோ இருந்திருப்போம். நம் தலைகளிலும் அவர் திருவடியைப் பதித்ததன் விளைவாகவே, மெல்ல மெல்ல அறிவு முதிர்ச்சி பெற்று இன்று மனிதர்களாகப் பிறந்துள்ளோம்.

அவ்வாறு இறைவன் நம் தலைகளில் திருவடியைப் பதித்ததன் நினைவாகவே இன்றும் கோயில்களில் இறைவனின் திருவடிகளுக்கும், திருவடி நிலைக்கும் பிரதிநிதியான சடாரியை நம் தலைகளில் வைக்கிறார்கள்.

சடாரி வைப்பதன் பலன்: சடாரியை தலையில் வைப்பதால் நம் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கும். அதற்கு இறைவனிடம் பக்தி கொள்ள வேண்டும், அறவழியில் நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன. அதன் மூலம் ஒருவரது மனதில் உள்ள அகந்தை அகன்று, மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. சம்பிரதாய ரீதியாக சடாரி வைக்கும்போது, குனிந்து புருவங்களுக்கு மத்தியில், வலதுகை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி ஏற்றுக்கொள்வது முறையாகும்.

சடாரியை நம் தலையில் வைக்கும்போது பரவச உணர்ச்சி ஏற்படுவதை அனைவரும் உணர்ந்திருப்போம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.