Breaking News :

Thursday, November 21
.

கேட்டதை கொடுக்கும் பிரான்மலை பைரவர் திருக்கோவில்!


பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோவில் உருவாக்கம் கொண்டுள்ளது.

வரலாற்றுப் புகழ் கொண்ட பறம்பு மலை, சங்க காலத்தில் வள்ளல் பாரி ஆட்சி செய்த பறம்பு நாட்டின் தலைமைப் பதியாக விளங்கியது.

புலவர் பெருமான் கபிலர், வள்ளல் பாரியின் உள்ளம் கவர்ந்த உயர் பண்பாளர்.

அவர் பறம்பு மலையில் பாரியோடு உடனிருந்து பல காலம் வாழ்ந்ததால், பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது.
அன்பால் தன்னை அர்ச்சிக்கும் எருக்க மலரையும், அரியதாக.. தனக்கு உரியதாக ஏற்றுக்கொண்ட பெருங்கருணைப் பேரருளாளன் எழுந்தருளியிருக்கும் மலை என்பதால், சிவமணம் கமழும் தெய்வ திருப்பதியாகவும் திகழ்ந்தது.

இப்படி தலைமைப் பதியாகவும், தமிழ்ப் பதியாகவும், தெய்வத்திருப்பதியாகவும் பெருமை பெற்ற பறம்பு மலை, 7-ம் நூற்றாண்டில் ‘திருக்கொடுங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டிருப்பதை திருஞானசம்பந்தர் சுவாமிகளின் திருவாக்கால் அறிய முடிகிறது.

திருஞானசம்பந்தப் பெருமான் சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டின் தலைமை இடமான மதுரை மாநகருக்குப் புறப்பட்டார்.
அப்போது அந்த நாட்டிற்குள் நுழைந்ததும் முதன் முதலாகக் திருக்கொடுங்குன்றத்தை பார்த்தார்.

அங்கே அருட்கருணைத் திருவாளை வழிபட்டு, பண்சுமந்த திருப்பதிகம் ஒன்றை திருஞானசம்பந்தர் அருளியுள்ளார்.
திருத்தலங்களில் மூவர் பாடிய தேவாரம் பெற்ற சிவதலங்கள் பெருமையும், அருமையும் கொண்ட பெருஞ்சிறப்புடையன.
திருநாவுக்கரசு சுவாமிகள், ‘கொடுங்குன்றன் காண், கொல்லை ஏற்றினான் காண்’ எனத் திருவாரூர்த் திருத்தாண்டத்தில், இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானைச் சிந்தித்து வந்தனை செய்துள்ளார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘கொடுக்கிலாதானைப் பாரியே கூறினும் கொடுப்பாரிலை’ என வள்ளல் பாரியைப் புகழ்வதன் மூலம் இத்திருத்தலத்தை நினைந்துள்ளார்.

மாணிக்கவாசக சுவாமிகளோ, ‘கொடுங்குன்றின் நீள்குடுமிமேல் தேன் விரும்பும் முடவனைப்போல..’ எனப்பாடுவதன் மூலம் இத்தலத்தை எண்ணியுள்ளார்.

நால்வர் பெருமக்கள் திருவுள்ளங்களும் நினைந்து நெகிழ்ந்து, மகிழ்ந்து போற்றிய திருத்தலம் திருக்கொடுங்குன்றம் ஆகும்.
இத்திருத்தலத்திற்குப் பதினைந்தாம் நூற்றாண்டில் வழிபட வருகை புரிந்த அருணகிரிநாதருக்கு இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் திருநடனம் செய்து காட்சி தந்தருளியதாக அருணகிரியாரின் திருவாக்கால் அறிய முடிகிறது.

தமிழ் உலகில் வள்ளல் பாரியை நினைவில் கொண்டு ‘பறம்புமலை’ என்றும், சமய உலகில் எழுந்தருளியுள்ள பரம்பொருளை மனதில் கொண்டு ‘திருக்கொடுங்குன்றம்’ என்றும் பேசப்பட்ட திருத்தலம், இன்று ‘பிரான்மலை’ என அழைக்கப்படுகிறது.

இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை, ‘திருக்கொடுங்குன்றநாதர்’ என்றே மக்கள் அழைத்து மகிழ்கின்றனர்.

இரண்டாயிரத்து ஐந்நூறு அடி உயரமுள்ள இந்த மலையைச் சங்க காலத்திலேயே, ‘ஈண்டு நின்றோர் க்கும் தோன்றும்.. சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்..’ எனப்புகழ்ந்தார் புலவர் பெருமான் கபிலர்.

பாதாளம், பூமி, கயிலாயம் ஆகிய முப்பெரும் பகுதிகளாக சிந்தரித்து அமைக்கப்பெற்றுள்ளது.

இந்தத் திருக்கோவில். மலையின் அடிவாரத்தைப் பாதாளமாகவும், அதற்கு மேல் உயரப் பகுதியை பூமியாகவும், அதன் மேல் உச்சிப் பகுதியைக் கயிலாயமாகவும் கொண்டுள்ள ஆலய அமைப்பு வித்தியாசமானது ஆகும்.

இம்மூன்று பகுதித் திருக்கோவில்களையும் உள்ளடக்கிக் கொண்டு, மிகப்பெரிய திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது. அது ‘சுந்தரபாண்டியன் திருமதில்’ என அழைக்கப்படுகின்றது.
மலையின் மூன்று பகுதிகளில் உள்ள கோவில்களிலும், மண்டபங்களிலும் உள்ள மூன்று கல்வெட்டுகளில் ‘பாரீசுவரம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாரீசுவரம்’ என்ற பெயர் 12 மற்றும் 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களில் தான் இடம்பெற்றுள்ளது.

மலையின் அடிவாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கித் தொடங்கும் பாதை தென்படும்.

ஆலயத்திற்குச் செல்லும் இந்த வழியில் மேற்கு முகமாகக் கட்டப்பட்டுள்ள துரைராஜா மண்டபத்தை அடைந்ததும், வடக்குபகுதி மதிலுக்கிடையே திருக்கோவிலின் பிரமாண்டமான பிரதானத் திருவாசல் உள்ளது.

திருவாசலைக் கடந்ததும் திருக்கோவிலின் தெற்கு மதிலுக்கும், வடக்குப் பகுதி மலையின் அடிவாரப் பாறைக்கும் இடையே கல்தளம் கொண்ட பாதையின் கிழக்குக்கோடியில் மதுபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது.

இது ‘தேனாடி தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தீர்த்தமாடி கொடுங்குன்றநாதரைத் தரிசித்தால், வாய்க்காத மகப்பேறு வாய்க்கும் என்பதும், தீராத நோய்கள் உடனடியாக அகலும் என்பதும், செல்வமும், செல்வாக்கும் சேர்ந்து வரும் என்பதும் ஐதீகம்.

முகமண்டபத்தில் நந்தி கம்பீரமாகக் காட்சி தருகிறது. மகா மண்டபத்துள் சன்னிதிக்கு நேராக மேற்கே நந்தி, பலிபீடம், சூரிய பிரபை ஆகியவை உள்ளன.

திருக்கொடுங் குன்ற நாதரின் பிம்பம் சூரிய பிரபையில் தெரியு மாறு அமைக்கப் பெற்றுள்ளது.

புகழார்ந்த பாரிவேள், முல்லைக் கொடிக்குத் தேரளித்த காட்சியைத் திருக்கோவிலின் பூமிப் பகுதியில் சுதைச் சிற்பமாகத் திகழ வைத்திருப்பது பொருத்தமாகவும், பொலிவூட்டுவதாகவும் இருக்கிறது.

அதற்கு மேற்கே பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோவில் உருவாக்கம் கொண்டுள்ளது.

தெற்கு முகமாக உள்ள பைரவர் சன்னிதியின் முன் மண்டபத்தில், மேற்கு தூணில் கிழக்கு முகமாகக் கருப்பர் சுவாமியும், கிழக்குத் தூணில் மேற்கு முகமாகச் சன்னாசிக் கருப்பர் சுவாமியும் பைரவ மூர்த்திக்கு முன்னோடிகள் போல் அமர்ந்துள்ளனர்.

கேட்டதை கிடைக்கச் செய்யும், நினைத்ததை நிறைவேற்றி வைக்கும் பைரவராக திகழ்வதால், இந்த பைரவர் பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

பைரவருக்கு பக்தர்களால், வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் விமரிசையாக செலுத்தப்படுகின்றன.
நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள பைரவர், வலது திருக்கரங்களில் சூலமும், உடுக்கையும், இடது திருக்கரங்களில் நாக பாசமும், கபாலமும் ஏந்தியிருக்கிறார்.

பைரவர் திருக்கோவிலுடன் இணைந்து, மேற்கே தனி விமானச் சிறப்புடன் விளங்குகிறது விஸ்வநாதர் திருக்கோவில்.
கிழக்கு நோக்கியுள்ள விஸ்வநாதப் பெருமானும், அந்த சன்னிதிக்கு தெற்கே விசாலாட்சி அம்மையாரும் உள்ளனர்.
பூமித்தளத்தில் இருந்து மேல்நோக்கி அமைக்கப் பெற்ற படிக்கட்டுகளில் வடக்கு முகமாக ஏறியவுடன், மேற்கே லட்சுமி மண்டபமும், கிழக்கே மங்கைபாகர் ஆறுகால் மண்டபமும் உள்ளன.

மங்கைபாகர் சுவாமியின் மங்கலத் திருமணக்கோலத்தை கண்டு மகிழ வருகை தந்த தேவர்கள், கூடி அமர்ந்திருந்த இடமாக ‘தேவசபா மண்டபம்’ கருதப்படுகிறது.

முகமண்டபத்திற்கு மேற்கே குடவரைக் கருவறை இருக்கிறது.
பாறையைக் குடைந்து நீண்ட சதுர வடிவில் தூண்களே இல்லாது அமைக்கப்பட்டுள்ளது, இந்தக் கருவறை.

குடவரையைச் செதுக்கும்போது, பாறையிலேயே செதுக்கி உருவாக்கிய திரு மேனிகளாக அம்மையும், அப்பனும் திருமணத் திருக் கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இதற்கு கற்பூர ஆரத்தி கிடையாது.

திருக்கயிலாயத்தில் அம்மையப்பர் வீற்றிருந்து அருள்பாலிப்பது போலவே, திருக் கொடுங்குன்றத்திலும் மங்கைப்பாகராகத் திருமணக் கோலத்துடன் எழுந்தருளி திருவருள் வழங்கி வருவதால் இத்திருத்தலம் ‘தென் கயிலாயம்’ எனப் பெயர்ப்பெற்று விளங்குகிறது.

மகாமண்டபத்தின் மேற்கே, கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ள ஓர் அபூர்வ மூர்த்தியின் தோற்றம் எல்லோரையும் ஈர்க்கிறது.
மூன்று திருமுகங்களும், நான்கு திருக்கரங்களும், மூன்று திருப்பாதங்களும் கொண்ட சிறப்புமிக்க அந்த சிலா ரூபத்தை ‘ஜ்வர பக்ந மூர்த்தி’ என்று கூறுகிறார்கள்.

இந்த மூர்த்தி குறிப்பிட்ட திருத்தலங்களில் மட்டுமே உள்ளதாம். கொடுமையான தீராத காய்ச்சல் உள்ளவர்கள், இம்மூர்த்தியை ஒரே ஒரு முறை வழிபட்டாலே போதுமாம்.

எத்தகைய காய்ச்சலும் சுகமடைவது உறுதி என்று சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் வாணாசுரன் என்ற சிவபக்தன் இருந்தான். அவன் மாவலிச் சக்கரவர்த்தியின் மைந்தன் ஆவான்.

ஒரு முறை தன்னுடைய பக்தனாக வாணாசுரனுக்காக, மகாவிஷ்ணுவோடு போர் செய்ய வேண்டிய சூழல் ஈசனுக்கு ஏற்பட்டது. அந்த போரின் போது மகாவிஷ்ணு, சீதள சுரத்தை சிவபெருமான் மீது ஏவினார்.

அந்த சீதள சுரத்தை அழிக்க, சிவபெருமான் அனுப்பிய வெப்பசுரம், மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழி, மூன்று கால்களுடன் அபூர்வத் தோற்றம் பெற்றுச் சென்றதாம்.
சீதள சுரமும் கணத்தில் அழிக்கப்பட்டதாம். இதனால் அபூர்வத்தோற்றம் பெற்ற அம்மூர்த்தி ‘ஜ்வர பக்ந மூர்த்தி’ எனப்பெயர் கொண்டதாம்.


மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேரடியாக பிரான்மலைக்கு பேருந்து உண்டு.  பிரான்மலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே கோவில் இருக்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.