Breaking News :

Friday, April 04
.

பூந்தமல்லி ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவில்


சென்னை பூந்தமல்லியிலுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவிலின் மஹிமை பலரும் அறியாதது. நூற்றுக்கணக்கான சித்தர்கள் இக்கோயிலின் தூண்களிலும், மாடங்களிலும், மேற்கூரைகளிலும் ஜீவ சமாதி பூண்டுள்ளனர். ஸ்ரீஆதிசங்கரர் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து அண்ட சராசரங்களிலும் காண இயலாத இரண்டு யந்திரங்களைத் (சக்கர வடிவில்) தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகிலுள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோயிலின் பூரண அம்சங்களைத் தாங்கி அதற்கு ஈடான முத்துக்குமார ஸ்வாமியாகத் திருமுருகன் அருள் பாலிக்கும் தலம் இது. அது மூல ஸ்தலம் என்றும் சென்னையில் உள்ளது பிம்ப ஸ்தலம் என்றும் சித்தர்கள் கூறுவார்கள். இங்குள்ள மூர்த்திகள் மூல வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ளவை போன்றே அமைந்து "இரண்டும் ஒன்றே" என்று சித்தர்களால் பெருமை பாடும் அற்புதச் சிறப்பைத் பெற்றுள்ளன.

இத்திருக்கோயிலில் பல ஆன்மீக ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஸ்ரீதையல் நாயகி அன்னையின் சன்னதிக்கெதிரில், ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி தரிசனம் தரும் தூணின் பின்புறன் "ஸ்ரீ அவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்" என்ற சித்தர் பெருமான் ஜீவ சமாதி கொண்டு அருள் பாலிக்கின்றார்.

இவருடைய விசேடத் தன்மை என்னவெனில் இவர் எந்த நோயிலிருந்தும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள அருள் புரியும் அற்புத சித்தர். உதாரணமாக ஒருவருக்கு அம்மை நோய் பற்றும் அறிகுறி தென்படின் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரரைத் தரிசித்து, இயன்ற அளவு நீர்மோர், இளநீர், குளிர்பானம், மிளகு சாதம் போன்றவற்றைத் தானமாக ஏழைகளுக்கு வழங்கி தன்னை அந்நோயினின்று தற்காத்துக் கொள்ளலாம்.

ஒரு குழந்தைக்குப் போலியோ தாக்கும் அறிகுறி ஏற்படின், இச்சித்தரைத் தரிசனம் செய்து இயன்ற அளவு ஊனமுற்றோர்க்குச் சக்கரப் பலகை, ஊன்று கோல், சக்கரவண்டி jaipur leg எனப்படும் செயற்கை கால் போன்றவற்றைத் தானமாக வழங்கி அக்குழந்தையைப் போலியோ நோயினின்று காத்துக் கொள்ளலாம்.

இவ்வாறாக எந்த நோய்க்கான அறிகுறி தென்பட்டாலும் அதற்குரிய தான் முறைகளுடன் கூடிய இந்தச் சித்தர் பெருமானின் தரிசனம் அந்த நோயினின்று எவரையும் தற்காக்கும். நோய் கண்டபின் அருள் பாலிக்கும் தெய்வங்கள், தெய்வ சன்னதிகள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் நோய் வரும்முன் காக்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரரின் அருள் தன்மை மருத்துவத் துறைக்கே ஒரு சவாலாகும்.
அம்மகானுக்கு இப்படிப்பட்ட சக்தி எப்படி வந்தது ?

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் "நோய்களைத் தீர்ப்பதற்கு ஈசனுடைய பல லிங்க வடிவங்கள் இருப்பினும் நோய்கள் வரும்முன் காக்கும் லிங்க வடிவைக் கண்டு அருள் பெற்று, பிறவிப்பிணி நீக்க உதவ வேண்டும்" என்று விருப்பம் கொண்டார் ஓர் உத்தமர். அவர் அத்தகைய லிங்கேஸ்வரரைத் தேடி பல யுகங்கள் அலைந்தவராய் முடிவில் இறையருளால் இமயமலைச் சாரலிலே "ரோகேஸ்வரர்" லிங்கத்தைக் கண்டார். அன்னாரே தாம் தேடிய பொக்கிஷம் என்பதை ஈசனுடைய அசரீரி ஒலியால் உணர்ந்தார். பிறகு அவ்விடத்தில் இருந்து கொண்டு பல திருப்பணிகள் இயற்றி நோய் தடுக்கும் ரகசியங்களை ஈசனருளால் உணர்ந்து கொண்டார். இறைவனிடம், "ஐயனே! அடியேன் எங்கிருந்து கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும்?" என்று கேட்க ஈசனும், "நீ எந்தத் தலத்தில் அவதூதாக மாறுகின்றனையோ அங்கு குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிப்பாயாக!" என்று அருளினான்.

அவ்வாக்கின்படியே அந்த உத்தமர் அனைத்து உத்தமத் தலங்களையும் தரிசித்தவராக முடிவில் பூவிருந்த வல்லியை அடைந்து வைதீஸ்வரனைத் தரிசித்த வேளையிலேயே அவதூதாக மாறினார் .... பின் ஈசனுடைய விருப்பப்படி அங்கேயே சமாதி கொண்டு விட்டார் . அந்த உத்தமர் தாம் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரர்.

"Prophylactic (prevention) is better than Cure" என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப வரு முன் காப்பது மருந்துகளை விடச் சாலச் சிறந்ததாகும். இம்முறையில் PROPHYLACTIC PROPHET ஆக விளங்கும் ஸ்ரீரோக நிவர்த்தீஸ்வரர் பூலோகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத, நோய் வராது காத்து அருளும் வரசித்த புருஷ்ராவார்.

லோக க்ஷேமத்திற்காக நற்செயல்கள் செய்து உண்மையாகப் பாடுபடும் சத்சங்கங்களில் நம்மைப் பிணைத்துக் கொண்டாலன்றோ, சத்சங்கத்தை மௌனமாக இயக்கும் சித்த புருஷர்களிடமிருந்து மேற்கண்ட ஆன்மீகப் பொக்கிஷங்களைப் பெற இயலும்...!!
நன்றி: - அகத்தியர் விஜயம் நூலில் இருந்து....

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.