Breaking News :

Thursday, November 21
.

சாயி அஷ்டகம்


1. அம்பிகை பெற்ற ஐங்கரனை துதித்தெழுதும் அடியேனின் அய்யன் சாயிநாதனே! அத்ரி அனுசுயா ஈன்ற மும்மூர்த்தி சேர் தத்த அவதாரமே! வாசுகியால் கடையப்பெற்று அமுது பொங்கிய தலம் ஷீர்டியில் எழுந்தருளிய பரப்ரஹ்மமே. கற்பகத்தருவே! கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே , ஸ்ரீ பாத வல்லபனே! நரசிம்ம சரஸ்வதியே அக்கல்கோட் ஸ்வாமி ஸமர்த்தனே! பக்தனின் இன்னல் போக்கும் அனாத ரட்சகனே. அல்லாவின் புதல்வனே! இடர் நீக்கி , துயர் துடைத்து நலம் நல்க விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதனே.

2. அனுதினமும் சாயிநாமமே பிரதானமென்று எனக்கு விதித்த கடமையும் மறந்து உன்னையே நினைத்து , உன் பாதமே பணிந்து , பலவித பூஜைகள் செய்தேன் உன் திருக்கத்தை படித்தேன் திருநாமம் ஜெபித்தேன். உன் சொற்படி அன்னதானமிட்டேன். பிறர் மனதை நோகடித்து அறியேன். இத்தனை செய்தும் இக்கணம் இன்னல் வந்திட யாம் செய்த பிழைதான் யாதென உணர்த்திடுவாய். பக்தி வேடம் பூண்டு போலி நாடகம் புரியும் அற்பனென்று என்னைப் புரிந்திட்டாயா? குழம்பித் தவிக்கும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்யநகர் ஷீர்டி வாச சாயிநாதனே

3. வசீகர அருளாலே பக்தரை உன் பக்கம் காணச் செய்தாயே. கோடானு கோடி பக்தர் உன் பாதம் பற்றியதால் , அடியேனுக்கு இறங்கிட உமக்கு நேரமில்லையா? மனமில்லையா? நொடிப் பொழுதும் உன்னை பிரியேன். இமைப்பொழுதும் உன்னை விலகிடேன். என் பக்தியில் நீ கண்ட பிழை அறியேன் சாயி! முன்வினையோ? தீவினையோ? நானறியேன். தீவினையை தீக்கிரையாக்க உன் தயவொன்று போதுமே. கருணா சாகரா! தாயிலும் மேலான தயை மனம் கொண்டவனே. செய் அழுதால் தாங்குமோ உன் மனமே? உன் நமமமே பிதற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதனே

4. கொடும் விட நஞ்சு கொண்ட அரவம் தீண்டியும் , ஷாமாவை காலனின் பிடியிலிருந்து காத்தாயே! ஸர்வேசா! சேஷசாயி! என்னைக் காத்தருள ஏனிந்த தயக்கம்? கண்கள் நீர் சொரிந்து காய்ந்தும் போனதே. நாவும் சாயிநாமம் பாடியே உலர்ந்தும் போனதே. என் மேல் நீ கொண்ட கோபம் அறியேனே. உன் நினைவின்றி வேறுஎதையும் நினைத்திடேனே. நீயே அடைக்கலம் என்று தஞ்சமும் அடைந்தேனே. என் பக்திகிறங்கி இக்கணமே என் கண் முன்னே தோன்றி வேண்டிய வரம் அளித்த்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதானே

5. தூய மனதில் நான் உன் மேல் கொண்டுள்ள பக்தி சத்தியமே. உன் திருக்கதை கேட்டு சாயி பக்தனாகி , சாயி பித்தனாயும் ஆனேனே. உன் பாத மலரில் பக்தியுடன் விழுந்து கிடந்தேனே. நீ என்னைப் பாராமல் போனால் அது நியாயமில்லையே. என் துயர் நீ போக்காவிடில் உலகம் நம்மை கேலி பேசுமே , சாயி உன்னிடம் இறங்கவில்லை உன் பக்தி ஒரு நாடகமே என்று என்னை தூற்றுமே. சாயி பக்தனுக்கா துயரம்? உலகம் உன்னையும் பழிக்குமே. உலகம் உன்னை பழித்தால் என் மனம் தாங்காதே. பழிச் சொல்லிலிருந்து காப்பாற்றி பக்தனை அருள விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதனே

6. ஏதுமறியா மூடனாய் , அறிவிலியாய் இறைவனை அறியாமல் திரிந்த என்னை உன் பாதம் காணச் செய்து பக்தனாக்கினாய். எம்மதமும் சம்மதம் என்ற சர்வதத்வ போதகனே. இக்கணம் எனக்கு வந்த துயர் நீ போக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த எக்காளமிடுமே. தெய்வம் பொய்யானதே என்று எள்ளி நகையாடுமே. பக்தி நம்பிக்கையை ஏசிடுமே. நீ பொய்யில்லை , நீ சத்தியமென்று நான் அறிவேனே. உண்மையாய் உலகம் முழுதில் வியாபிக்கின்றாய் என்று பெருமையுடன் பறை சாற்றும் எனக்கு விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதனே.

7. அக்னி ஹோத்ரியாய் துனியை எரிய விட்டு , அரும் உதியால் பக்தனின் பிணி , துயர் போக்கும் துவாரகாமாயி வாழ் ஆனந்த சாயி! பஞ்சபூதமும் உன் அசைவிலே விரல் சொடுக்கில் விதியையே மாற்றும் விஸ்வநாதனே , ப்ரம்ம ஸ்வரூபனே! உம்மை யன்றி யாரையும் அறியாத என் வேதனையைப் போக்கிடுவாய். துன்பக்கடலில் தத்தளிக்கும் எமக்கு தோணியாய் வந்திடுவாய். என் விண்ணப்பங்களை விருப்பமாய்க் கேட்டு என் இன்னல் களைந்து இன்பம் தருவாய். ஈடில்லா செல்வமும் , வெற்றியும் , பிணியில்லா வாழ்வும் , இறை அருளும் , நற்கதியும் பெற்றிட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதனே

8. யாமிருக்க பயமேன்! நம்பிக்கை பொறுமை மிக்க பக்தி கொள் என்றாய். எத்தனை காலம் பொறுமை காப்பேன். பொறுமைக்கொரு எல்லை உண்டே. நான் உயர் கடவுள் இல்லையே. ஜனன மரணம் எய்தும் அற்ப மானிடப் பிறவியே. காலம் கடந்து விட்டதே. என்னையும் தாண்டி பலர் முன் சென்று விட்டனரே. கவலையில் நெஞ்சும் கனக்கிறதே. தோல்வியில் துவண்டு , வேதனையில் மாண்டு தூண்டிலிட்ட , புழுபோல் துடிதுடிக்கும் பக்தனுக்கிரங்கி வேண்டிய பதினாறு செல்வமிக்க வளமான வாழ்வும் , சீரும் சிறப்பும் , ஆரோக்கியம் ஆயுளும் , புகழ் தரும் வெற்றியும் , தன தானம் அனைத்தும் இனிதே தந்திட விரைந்து வந்து அருள்வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதனே.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.