Breaking News :

Thursday, November 21
.

ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம்


இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சனி பகவான் பரிகாரத் தலம் ஆகும். ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம் இதுவாகும்

இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும்.

மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.

அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.

குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பொங்கு சனி

ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.

இருப்பிடம்

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ரெயில் சேவையும் உள்ளது.
திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.முகவரி

அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில்
இலத்தூர் - 627 803,
திருநெல்வேலி மாவட்டம்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.