முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுதல். முருகன் கோயில்களில் தீபமேற்றி, முருகப்பெருமானுக்கு விரதமிருந்து, செவ்வரளி மாலை சாத்தி வழிபடுதல்.
சஷ்டி திதி என்பது கந்தவேலனுக்கு உரிய நாள். இன்று சஷ்டி நாளில், காலையும் மாலையும் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவதும் முருகக் கடவுளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவதும் எதிர்ப்புகளையெல்லாம் விலக்கிவிடும். தடைப்பட்ட மங்கல காரியங்களை யெல்லாம் நடத்திக் கொடுப்பார் வள்ளி மணாளன்.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் .
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும் சுக்கிரன் தான்.
எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.
சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.சஷ்டி அன்று கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.
பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக`முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி அன்று சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. சஷ்டி அன்று சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சஷ்டி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.
சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.