கோயில் கருவறையில் சுவாமி சிலைகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் தல வரலாற்றை விளக்கும் கதை சொல்லும் கருவறை உள்ளது. குழந்தை வரம் பெற இங்குள்ள உஜ்ஜீவனவல்லி தாயாருக்கு மண் பொம்மைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
ஒரு சமயம் மது - கைடபர் என்னும் அசுரர்கள் தேவிகளான ஸ்ரீதேவி, பூதேவியை கடத்திச் செல்ல வந்தனர். அப்போது பெருமாள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்ப விரும்பாத பூதேவி பெருமாளின் திருவடி அருகிலும் ஸ்ரீதேவி அவரது மார்பிலும் ஒளிந்து கொண்டனர். பெருமாளுக்கு படுக்கையாக இருந்த ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் விஷ ஜுவாலையை கக்கி அசுரர்களை விரட்டியது.
இருப்பினும், பெருமாளை எழுப்பாமல் தானே முடிவெடுத்து அசுரர்களை விரட்டியதால் அவர் தன்னை திட்டுவாரோ என்ற பயத்தில் ஆதிசேஷன் பாம்பு தனது தலைகளை சுருக்கிக்கொண்டது. ஆனால், கண் விழித்த பெருமாள் ஆதிசேஷனை பாராட்டினர். இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இங்கு ஆதிசேஷன் தனது ஐந்து தலைகளையும் சுருக்கியபடி இருப்பதைக் காணலாம்.
இந்தத் தலத்தின் புராண பெயர் திருமெய்யம். பிற்காலத்தில் திருமயம் என மாறியது. கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் சுவாமிக்கு திருமெய்யர் என்று பெயர்.
கண்களை மூடியபடி நித்திரையில் உள்ள இவர், வலது கையால் ஆதிசேஷனை அணைத்தபடி இருக்கிறார். பெருமாளைச் சுற்றி தேவர்கள், ரிஷிகள், நாபிக்கமலத்தில் பிரம்மா, மார்பில் மகாலட்சுமி, மது - கைடப அசுரர்கள் ஆகியோரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரு கையில் பிரயோக சக்கரம் மற்றொரு கையில் சங்கு வைத்தபடி சத்யமூர்த்தி எனும் பெருமாள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இக்கோயிலை சத்திய க்ஷேத்திரம் என அழைக்கின்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர்கள் திருமெய்யர் மற்றும் சத்தியமூர்த்திக்கு தைலக்காப்பு செய்யப்படுகிறது. உத்தமர் அழகிய மெய்யர் எனப்படுகிறார். பல்லவர் காலத்தை சேர்ந்த இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள உஜ்ஜீவன தாயாரை வழிபட்டால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக 64 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமயம் திருத்தலம்.
இலவச வரன் பதிவுக்கு கணேசன் மேட்ரிமோனி ganesanmatrimony.com