சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.