திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மலையடிப்பட்டி கிராமம்.
மலையடிப்பட்டியில் சிவபெருமானுக்கும், விஷ்ணு பெருமானுக்கும் தனித்தனியே இரண்டு குகைக் கோயில்கள் உள்ளன.
இயற்கைச் சூழலில் இரண்டு கோயில்களும் அருகருகே ஒரே குன்றின் மீது தனித்தனியாக அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
மலையடிப்பட்டி சிவபெருமான் கோயில்
கி.பி 730-ல் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இங்குள்ள மலையைக் குடைந்து சிவனுக்குக் கோயிலெடுத்து வாகீஸ்வரர் என்ற பெயரிட்டான் என்ற செய்தியினைச் சிவன் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று குறிக்கிறது.
மலையின் கிழக்குப் பகுதியில் மலையைக் குடைந்து முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. பாறையைக் குடைந்து சிவலிங்கத் திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் தென்படுகிறது.
அர்த்தமண்டப சுவற்றில் ஏழு தாய்மார்கள், கணேசர், வீரபத்திரர், சிவன், விஷ்ணு சிற்பங்கள் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன. எருமையின் முகமும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரனுடன், அன்னை பராசக்தி சிங்கத்தின்மீது அமர்ந்து அரக்கனை அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
மகாபலிபுரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தொகுதியை போலவே இதுவும் கலையழகு மிக்கது என்கின்றனர்.
திருமால் குகைக் கோயில், கருவறையையும், முன்னாள் ஒரு மண்டபத்தையும் கொண்டது.
இங்குள்ள தூண்கள் சிவன் கோயிலின் தூண்களைவிட மிகவும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
தூணின் அடிப்பக்கம் சிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பது போன்றும், அதற்கும் மேல் தூண் உயர்ந்திருப்பதையும் காண்கிறோம். இது பல்லவ மாமல்லன் காலத்துக் கலை பாணியைக் கொண்டது என்கின்றனர்.
மண்டபத்தின் சுவற்றில் நரசிம்மர், வராகமூர்த்தி, தேவியருடன் திருமால் சிற்பங்கள் சுவற்றிலேயே செதுக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் திருமால் அனந்த சயன மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.
நாகராஜன் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும் குடைபோன்று விரிந்து திருமாலின் தலைக்கு நிழலளித்துக் கொண்டிருக்கினறன.
கருவறையின் பின் சுவற்றில் அரக்கர்களும், தேவர்களும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள அம்மன் சன்னதியும் காலத்தால் பிற்பட்டதாகக் கருதப்படுகிறது.
கி.பி 16-ம் நூற்றாண்டில் இப்பகுதி தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது, அச்சுதப்ப நாயக்கர் இக்கோயிலுக்கு கொடையளித்தச் செய்தியை இங்குள்ள கல்வெட்டு ஒன்று தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
சிறப்பம்சாக இந்த குகைக் கோயிலில் உள்ள ஓவியங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும்.
இங்குள்ள கண் நிறைந்த பெருமாள் என்றழைக்கப்படும் பெருமாள் திருவனந்தபுரத்திலுள்ள பத்ம நாபசுவாமிக்கு நிகரானவர். கண்பார்வை தொடர்பான எல்லா நோய்களையும் நீக்கி அருள்கிறார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்குகிறது என்கின்றனர்.
குடைவரைக் கோயில். பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மிக முக்கிய திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசை, வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோவிலுக்கு செல்லும் வழி:
திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ தொலைவிலும் இருக்கிறது மலையடிப்பட்டி கிராமம்.
திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த கிள்ளுக் கோட்டை பிரிவு சாலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள்.
இரண்டு கோயில்களும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து கிராமப் பேருந்து வசதிகளும் உண்டு.