Breaking News :

Friday, April 04
.

ஸ்ரீராமன் வனவாசம் செல்ல சரஸ்வதி தேவி காரணமா?


ஒருசமயம் இந்திரலோகமே வருத்தத்தில் உறைந்திருந்தது. தேவர்கள் அனைவரும் இந்திரனின் வருகைக்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் இந்திரன் அந்த அவைக்குள் பிரவேசித்தான். தேவர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதைக் கண்டு, “என்னவாயிற்று?” என்று விசாரித்தான்.

அதற்கு தேவர்கள், “அயோத்தி நகரம் முழுவதும் விழா கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அயோத்தி மக்களும் மிகுந்த சந்தோஷத்தில் மிதக்கின்றனர்” என்றனர் தேவர்கள்.

“அதற்கென்ன?” என்றான் இந்திரன்.

“தசரதன் மகன் ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேத்துக்கான நாள் குறித்து விட்டனர்” என்றனர் தேவர்கள்.

“சரி, அதற்கென்ன?” என்றான் தேவர் தலைவன்.

“ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியின் மன்னனாகி விட்டால், அரக்கன் ராவணனையும் மற்ற அரக்கர்களையும் வதைப்பது எப்படி? ஸ்ரீராமபிரானின் அவதார நோக்கம்தான் என்னாவது?” என்று வருத்தத்துடன் கேட்டனர் தேவர்கள்.

“சரி, இதற்கு நாம் என்ன செய்யலாம்?” என்று அதிர்ச்சியோடு கேட்டான் இந்திரன்.

பிறகு நெடுநேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவர்களாய், தேவர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்ம தேவரை சந்தித்து தங்கள் நிலையை அவரிடம் எடுத்துக் கூறி, அவரின் உதவியைக் கோரினர்.

பிரம்ம தேவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, அவர்கள் அனைவரையும் சரஸ்வதி தேவியை சந்தித்து வேண்டும்படியும், சரஸ்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசனையாகக் கூறினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியைச் சந்தித்து நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி தங்களுக்கு உதவும்படி வேண்டி நின்றனர்.

அதைக் கேட்ட சரஸ்வதி தேவி மிகவும் வருத்தத்துடன், “நீங்கள் சொல்லும்படி நான் நடந்தால் உலகமே என்னை தூற்றுமே” இதை என்னால் செய்ய முடியாது” என்று மறுத்துக் கூறினாள்.

ஆனாலும், “உலக நலனுக்காக இதை அவசியம் நீங்கள் செய்யத்தான் வேண்டும், தங்களை விட்டால் எங்களுக்காக இதை வேறு யாரும் செய்ய முடியாது” என தேவர்கள், சரஸ்வதி தேவியிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

“ஸ்ரீராமன் வனவாசம் செல்வதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன்” என்று சரஸ்வதி தேவி மீண்டும் மறுத்துக் கூற, தேவர்களோடு பிரம்மாவும் சரஸ்வதி தேவியிடம் வற்புறுத்தி வேண்டினர்.

அதன் பிறகு அன்னை சரஸ்வதி தேவி ஒருவாறு சமாதானமாகி தேவர்களின் கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டார். மேலும், ஸ்ரீராமன் வனவாசம் சென்றால் ராமாயணம் எனும் புனிதக் காவியம் இப்பூமிக்குக் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் தேவர்களின் கோரிக்கைக்கு சம்மதித்தாள்.

சாட்சாத் கலைமகளாம் சரஸ்வதி தேவிதான் மந்தரையின் ரூபத்தில் கைகேயின் மனதில், பரதன் நாடாள வேண்டும்; ஸ்ரீராமன் வனவாசம் செல்ல வேண்டும் எனும் நச்சு ஆலோசனை ஊட்டினாள் என்னும் புதிய கோணத்தில் விளக்கம் அளிக்கிறது துளசி தாசரின், 'ராம சரித மானஸம்.'

நன்றி: எம்.கோதண்டபாணி - (கல்கி)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.