Breaking News :

Wednesday, February 05
.

முக்தியை அருளும் சூல விரதம்!


தூய மனதுடன் சூல விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் விலகும். கொடிய நோய் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல மங்கலங்களும் உண்டாகும்.

#சிவபெருமான் தன்னுடைய கையில் ஏந்தியிருக்கும் திரிசூலம், மூன்று முனைகள் கொண்டது. அவை மூன்றும் சத்வ, ரஜஸ், தாமச குணங்களை குறிக்கின்றன. சிவபெருமான் இந்த மூன்று குணங்களையும் கடந்த, நிர்குண பிரம்மம் என்பதையே இந்த மூவிதழ் சூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பக்தர்களின் துன்பங்களை போக்குவதற்காக அம்மன் கரத்தில் இருப்பதும் திரிசூலம் தான். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய செயல்களையும் ஒழிக்க ஈசன் கரத்திலும், அம்மன் கரத்திலும் தவழ்கிறது இந்த சூலக்குழந்தை.

இத்தகைய சிறப்பு பெற்ற சூலத்திற்கு, தை மாதம் அமாவாசை அன்று ‘சூல விரதம்’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் எழுந்து நீராடி பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி திருநீறு அணிய வேண்டும். பின்னர் மனத் தூய்மையுடன் திரிசூலத்தை ஏந்தியிருக்கும் ஈஸ்வரனை நினைத்தபடி பார்வதியுடன் இருக்கும் ஈசனின் மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் சிவாலயத்திற்குச் சென்று சிவலிங்கத்தை தரிசிப்பதுடன், ஈசனின் அடியவர்களுக்கு தட்சணை அளித்து, அவர்களுடன் இணைந்து ஒரு வேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும்.

செல்வம் சேரும். இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் சுகமான இறைவனின் திருப்பாதங்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.

மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு இந்த விரதத்தைக் கடைப்பிடித்து தான், காலநேமி என்ற கொடிய அரக்கனை அழித்தார் என்கிறது புராணங்கள். ஒரு முறை மகா விஷ்ணுவுக்கு ஏற்பட்ட தலைவலியும் கூட, இந்த விரதத்தை அனுஷ்டித்த காரணத்தால் விலகியது. பிரம்மதேவரும் இந்த விரதத்தை மேற்கொண்டு, தனக்கு ஏற்பட்ட வயிற்றுவலியை தீர்த்துக் கொண்டார். பரசுராமர், இந்த விரதத்தை மேற்கொண்டுதான், ஆயிரம் கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜூனனை வெற்றி கொண்டார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சூல விரதம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தை அமாவாசை தினமும் இணைந்து வருவதால், கொண்டாட்டத்தின் அளவு கூடுதலாகவே இருக்கும். அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே கண்களுக்குத் தெரியும் வகையில் கோவிலில் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்.

தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் இருக்கிறது அலங்கார வல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில். இங்கு தை அமாவாசை அன்று சூல விரத வழிபாடு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றும் பெற்ற சிறப்பு மிக்க ஆலயமாகும்.

அஸ்திரதேவர் (சூல தேவர்), திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும், தான் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் பெற்ற தலம் இதுவாகும். சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்ட ஆலயம் இது. ஆலயத்தின் வெளிவாசலில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார்.

அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை சுத்தம் செய்து கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னதானம் வழங்குதல், தான தர்மங்கள் செய்தல், திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி போன்றவற்றை செய்து வந்தால், உலகத்தில் யாரும் செய்திராத தவப்பயனும், ஒப்பற்றயாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

கும்பகோணம் - தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்றுப் பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால், மிக அருகில் உள்ளது சூலமங்கலம் என்ற திருத்தலம். சூலமங்கை என்னும் இக்கோவிலின் திருப்பெயரே, இவ்வூரின் பெயராகவும் வழங்கலாயிற்று.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.