நடாதூராழ்வான் :
இவர் எம்பெருமானாரின் சகோதரியான கமலாவின் திருக்குமாரர். ஶ்ரீவத்ச கோத்திரத்தில் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள நடாதூர் என்னும் கிராமத்தில் அவதரித்தார். இயற்பெயர் வரதவிஷ்ணு . ஸகல சாஸ்திரங்க
ளையும் உடையவரிடமே கற்றார்.
கூரத்தாழ்வான் ஶ்ரீபாஷ்யத்தை பட்டோலை செய்ய இயலாத நாட்களில் அக்கைங்கர்யத்தை செய்தவர் இவரே. ஆழ்வானைப் போல உடையவருக்கு உதவியதால் நடாதூராழ்வான் என அழைக்கப்பட்டார் . தர்க்க சாஸ்த்திரத்தில் தேர்ச்சி பெற்றவர் ."மாநயாதாத்ம்ய நிர்ணயம் " என்ற க்ரந்தத்தை அருளினார் .ஆனால் அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை . ஆனால் அதிலுள்ள சில பகுதிகளை வேதாந்த தேசிகர் தமது ந்யாய ஸித்தாஞ்சனம் என்ற நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
உடையவருடைய விக்ரஹத்தை காஞ்சியில் ஸ்தாபித்து அங்கே ஸித்தாந்த ப்ரவசனம் செய்து வாழ்ந்தார். உடையவருடைய நான்கு ஶ்ரீபாஷ்ய சிம்மாசனாதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார் .
எங்களாழ்வான் :
எங்களாழ்வான் திருவெள்ளறையில் சித்திரை ரோஹிணி யில் அவதரித்தவர் .
கூரத்தாழ்வான் கண் இழந்த பின்பு மேல் நாட்டிலிருந்து ஶ்ரீரங்கத்திற்கு திரும்பிய யதிராஜர் ஶ்ரீபாஷ்யத்தில் எஞ்சிய பகுதியை கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவரை துணையாகக் கொண்டு எழுதுவித்தார் என்றும் . அப்போது அவருடைய மேதா விலாசத்தைக் கண்டு "எங்கள் ஆழ்வானோ? " என்று அபிமானித்தாராம். ஶ்ரீ விஷ்ணுபுராணத்திற்கு " விஷ்ணு சித்தீயம்" என்னும் வியாக்கியானத்தையும் , ஸித்தாந்த ப்ரமேயங்களைச் சுருக்கி "ப்ரமேய ஸங்ரஹம் " என்னும் க்ரந்தத்தையும் . கத்ய வ்யாக்யானம் ஒன்றையும் வடமொழியில் அருளிச் செய்துள்ளார். இவற்றில் விஷ்ணு புராண வ்யாக்யானம் ஒன்றே இப்போது உள்ளது.
இவர் மணிப்ரவாள நடையில் அருளிய " ஸாரார்த்த சதுஷ்டயம்" என்னும் ரஹஸ்யம் வார்த்தாமாலையில் ஒரு வார்த்தையாக உள்ளது. அதில் நம்பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை முதலானோர் நிலைநாட்டிய தென்னாச்சார்ய ஸ்ம்ப்ரதாய கொள்கைகளையே இவரும் நிலை நாட்டியுள்ளார் .
நடாதூராழ்வானுடைய பேரனான " வாத்ஸ்ய வரதாச்சாரியர்" என்னும் நடாதூரம்மாள் இவருடைய சிஷ்யர்களில் முதன்மையானவர் .
நடாதூரம்மாளுக்கு அவரது தாத்தா நடாதூராழ்வான் ஒருமுறை ஶ்ரீபாஷ்ய காலக்ஷேபம் செய்யத் துவங்கும் போதே , அற்புதமான சந்தேகங்களை கேட்க , முதியவரான நாம் வாலிபரான தம் பேரனுக்கு காலக்ஷேபம் சொல்வது இயலாது என்று உணர்ந்து , " தினவு கெடச் சொல்லுவன் திருவெள்ளறை சோழியன்" நீ திரு வெள்ளறை சென்று எங்களாழ்வானிடம் கற்றுக் கொள் என்று அனுப்பினார்.
திருவெள்ளறைக்கு விடியற்காலையில் வந்து திருமாளிகைக் கதவை தட்ட , உள்ளிருந்து எங்களாழ்வான் யார் என் வினவ , நான் தான் என்றார் . நான் செத்த பிறகு வா என்று கூறி கதவைத் திறக்காமலே அனுப்பிவிட்டார் எங்களாழ்வான்
மாமி என்ன இது ? நான் செத்த பிறகு என்றால் எப்படி புரியவில்லையே .
" நான் என்னும் அஹங்காரம் செத்த பிறகு வா " என்பதே அவ்வாக்கியத்தின் அர்த்தம் . காஞ்சி சென்று பாட்டனாரிடம் இந்த விஷயத்தை கூற ," அடியேன்" என்று சொல்ல வேண்டியிருக்க ," நான் தான்" என்று கூறிவிட்டாயே.
அடியேன் என்று ஸ்வரூபத்துக்கு பொருத்தமாக வார்த்தை கூறி அவரை ப்ரார்தித்து ஶ்ரீபாஷ்ய காலக்ஷேபம் கேட்டு வருவாய் என்று சொல்லி மறுபடியும் திருவெள்ளறைக்கு அனுப்பினார். அவரும் அவ்வாறே கூறி எங்களாழ்வான் அன்பைப் பெற்று அனைத்தையும் கசடறக் கற்றார் .
ஒரு சுவாரசியமான குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் .
நஞ்சீயர் என்று ஒரு ஆசார்யர் . அவருடைய திருவாராதனப் பெருமாளுக்கு , ஆசையோடு " ஆயர்தேவு "(ஆயர்பாடி யாதவர்களுக்கு தேவன்) என்று பெயர் வைத்திருந்தார். அக்காலத்தில் தமிழ் பெயர்கள் வெகு அழகாக இலக்கண சுத்தமாக இருக்கும்.
ஒரு நாள் எங்களாழ்வான் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர் கனவில் வந்து இந்த ஆயர்தேவு , " ஐயா நான் நஞ்சீயர் மகன் ஆயர்தேவு , எனக்கு வெண்ணெய் நாவல் பழம் எல்லாம் வேண்டுமே தருவீர்களா? '' என்று கேட்டானாம்.
எங்களாழ்வான் , நஞ்சீயரிடம் சென்று ''நஞ்சீயரே, உமது மகன் ஆயுர்தேவி என்னிடம் வந்து அதைக் கொடு இதைக் கொடு என்று தூங்கவிடாமல் படுத்துகிறான்'' என்றார். அதைக்கேட்ட நஞ்சீயர் . " யாருமறியாதபடி நமது திருவாராதனப் பெருமாளுக்கு ஆயர்தேவு என்று பெயர் வைத்திருக்க , அதை உலகமறிய செயவதற்காக எம்பெருமான் இப்படி செய்திருக்கிறான் " என வியந்து வணங்கினார்.
மேற்கூறிய எங்களாழ்வான் மற்றும் நடாதூரம்மாள் வரலாறு இணையத்தில் இருந்து எடுத்தேன். இப்பொழுது இடர்தீர்த்த ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் வரலாற்றை படிக்கவும். கோவில் வளாகத்தில் இருந்த தட்டியில் இருந்து எழுதியுள்ளேன்.
இடர் தீர்த்த ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில்.
( கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டில் நடந்த சரித்திரம்)
இத்தலத்தின் சிறப்பு:
கொல்லங்கொண்டான் என்னும் கிராமம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு முக்கியமான திருத்தலமாகும். இந்த கிராமத்திலே அமைந்துள்ள அருள்மிகு இடர்தீர்த்த சுந்தரராஜபெருமாள் ஸந்நிதி வளாகத்தில் தான் இளமையிலேயே ஸ்ரீராமாநுஜரின் இன்னருளைப் பெற்ற ஸ்ரீஎங்களாழ்வான் (ஸ்ரீஅம்மாளாச்சாரியன்) தனது சீடரான ஸ்ரீநடதூர் அம்மாளுக்கு ஸ்ரீ ராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம் மற்றும் ஸ்ரீராமாநுஜர் நியமனப்படி அவருடைய சீடரும் தமது நேர் ஆச்சாரியருமான பிள்ளான் திருவாய்மொழிக்கு அருளிய வியாக்யானமான பகவத் விஷயத்தையும் கற்பித்தருளினார். பிறகு உரிய காலத்திலே ஸ்ரீஎங்களாழ்வான் இந்த கிராமத்திலே தான் திருநாட்டுக்கு(வைகுந்தம்) எழுந்தருளினார்.
அவருடைய சரம கைங்கரியங்களான புத்ரக்ருத்யங்களையும் ஸ்ரீநடாதூர் அம்மாளே அனுஷ்டித்தார். இந்த திருக்கோவிலை ஒட்டிப் செல்லும் சிற்றாரு உண்டு. அதன் கரையில் ஸ்ரீஎங்களாழ்வான் திருவரசு என்று அரசமரமும் உள்ளது. இந்த கிராமத்திலே ஸ்ரீஎங்களாழ்வான் தமக்கு கற்பித்தருளிய நுட்பங்களை காஞ்சிபுரத்தில் ஸ்ரீநடாதூர் அம்மாள் பலருக்கு கற்பித்தருளினார். அவ்வாறு கற்றுக் கொண்டவர்களில் ஒருவரான ஸ்ரீவேதவியாசபட்டர் அந்நுட்பங்களை எல்லாம் ஏற்படுத்தி ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்துக்கு இரண்டு அரிய விளக்கவுரைகளை தொகுத்தளித்தார்.
மற்றொரு சீடரான அப்புள்ளரிடம் பயின்ற ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீராமாநுஜரின் கீதாபாஷ்யத்துக்கு விரிவுரையை அமைத்தருளினார். இப்படி ஸ்ரீராமாநுஜரின் அரிய நூல்களை இன்று நாம் கூட புரிந்துகொள்ளும் விதமான நூல்கள் எழ விதையிட்ட இடம் புண்ணியபூமியான கொல்லங்கொண்டான் என்னும் கிராமம்.
இத்திருத்தலத்தில் உள்ள திருக்கோவில் ஸ்ரீஎங்களாழ்வான் அவதார ஸ்தலமாகிய திருவெள்ளரை திவ்யதேசத்திலே அமைந்திருப்பது போல திருவடிவாரத்திலே ஸ்ரீநடாதூர் அம்மாள் திகழ இருக்கும் ஸ்ரீஎங்களாழ்வானின் திவ்ய மங்கள விக்ரகம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும், எம்பெருமான் சங்கல்பித்து அருளியபடி கல்விக் கடவுளான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரின் அவதாரங்களாகவே திகழ்ந்தவர்கள் ஸ்ரீஎங்களாழ்வானும் ஸ்ரீநடாதூர் அம்மாளும்.
ஸ்ரீ எங்களாழ்வான் லட்சுமி ஹயக்ரீவ பெருமாளை வழிபட்டுவிட்டே தமது விஷ்ணுபுராண வியாக்யானத்தை அருளினார். எனவே இந்த ஆச்சாரியர்களுடைய திருமேனியுடன் ப்ரதமாச்சாரியர்களான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரின் திவ்ய மங்கள விக்ரகமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இத்திருத்தலத்தில் அருமையான தரிசனம் கிடைத்தது. கோவிலை சுற்றிலும் அழகான நந்தவனம். எங்களாழ்வான் மண்டபத்தில் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். லட்சுமி ஹயக்ரீவர் சுந்தரராஜ பெருமாள் திருவடி அருகில் இருக்கிறார். கல்விக் கடவுளான இவரை வணங்க மாணவ மாணவிகள் வியாழன் தோறும் வருகின்றனர்.
ஸ்ரீஎங்களாழ்வான் திருவரசு கோவிலுக்கு அருகில் உள்ளது. பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்து விளக்கேற்றுகிறார்கள்.
கோவில் பிரகாரத்தில் ஆழ்வார்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது. கோவில் மேற்கூரையில் மட்டை தேங்காய் கட்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். ஸ்ரீ பிரசன்ன காரிய சித்தி ஆஞ்சனேயர் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். கோவிலுக்கு முன்புறம் சரியான பராமரிப்பின்றி ஒரு மண்டபம் உள்ளது. இங்குள்ள தூண்களில் பகவானின் பத்து அவதார காட்சிகள் மற்றும் நரசிம்மர் சிற்பங்கள் வெகு அழகாக உள்ளது. அவசியம் அனைவரும் தரிசிக்க வேண்டிய திருத்தலம்.
வழி : இராஜபாளையத்திலிருந்து (தென்காசி சாலை) தளவாய்புரம் செல்லும் வழியில் இடப்பக்கம் ஒரு பாதை பிரிகிறது. (கோவிலுக்கு செல்லும் வழியை தெரிவிக்க இருக்கும் போர்டை மறைத்து பல போர்டுகள் மாட்டி இருக்கிறார்கள்) அங்கிருந்து இரண்டு கிலோமிட்டர் தூரம்.