Breaking News :

Thursday, November 21
.

சுவாமியின் பல்லக்குக்கு 'தோளுக்கினியான்' என்ற பெயர்


 பல்லக்குத் தூக்கிகளுக்கு 
'ஸ்ரீபாதம் தாங்கிகள்' என்று பெயர்.

பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படி புறப்படும்

அப்பாங்கை கருடகதிஎன அழைப்பார்கள்.

அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும், வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி, ஏதாவது அபாயம் உண்டா எனப்பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோளுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது #சிம்மகதி

இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது, பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டு மூன்று அடியெடுத்து வைத்துப் போவதை #வியாக்ரகதி என்கிறார்கள்.

அதையடுத்து  காளைமாடு போல மணியோசையுடன் நடப்பதை #ரிஷபகதி என்றும் ஆண்யானைபோல நடப்பதை #கஜகதி என்றும் சொல்கிறார்கள். 

புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு பாம்பு தன் புற்றுக்குள் நுழையும் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை #சர்பகதி என்கிறார்கள். 

கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர வைப்பதை #ஹம்சகதி என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் 
அறிந்து மகிழ்ந்தேன்

 'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட, 
சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்து சாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்!! 

ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே!!' 

என்று பலநாள் நினைத்ததுண்டு. 

அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்! 

பெருமாள் பாரத்தை ஒரு  பாரமாக நினைப்பது தவறாம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் ,
பாடிக் கொண்டும் செல்ல, 

தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும் 

அதேகதியில் ஆடிக்கொண்டு செல்லவேண்டுமாம்! 

அது என்ன 
ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா? 

பெருமாளுக்கு விசிறி வீசுபவர்! 

தவிர, பெருமாள்

 சேஷவாகனம்
 
கற்பகவிருட்ச வாகனம்
 
யானை பசுவையாளிவாகம் ஆகியவற்றில் பயணிக்கும்பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும்  மாற்றப்படுமாம்.

உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது 

அதாவது குதிரை வாகனத்தின்பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டு,

 பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு

 அடுத்து ஒருமுறை வலப்பக்கமாக சுற்றிவிட்டு மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம். 

இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்து விடமாட்டார்களாம். 

முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து,

 அதன்பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் சொல்வார்களாம். 

அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம்தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம். 

ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபியைப் போல வந்துகொண்டே இருக்கின்றன.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.