ஏழரை வருடம் என்று சொன்னதுமே நம் நினைவுக்கு வருவது சனிபகவான் தான். வாழ்க்கையில் நாம் செய்த நல்லது கெட்டதற்கெல்லாம், பலனை அனுபவிக்க கூடிய காலமும் இந்த ஏழரை வருடம் தான். ஒருவருக்கு ஏழரை சனி துவங்கி விட்டது என்றால், அவருடைய வாழ்க்கையில் பிரச்சனை தொடர போகிறது என்று தான் நாம் நினைக்கின்றோம். ஆனால் அப்படி கிடையாது.
நாம் செய்த நல்லது கெட்டதற்கு ஏற்ப, நமக்கு பரீட்சை நடத்தப்படும் காலம் தான் இந்த ஏழரை சனிக்காலம். சனி பகவானே சொல்லியிருக்கிறார், தைப்பூச திருநாளன்று முருகப்பெருமானை எவர் ஒருவர் பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடை மேற்கொள்கிறாரோ, அவர்களை நான் அதிகமாக சோதிக்க மாட்டேன் என்று. சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தைப்பூசம் அன்று முருகப்பெருமானை எப்படி வழிபடுவது, அந்த எளிமையான வழிபாட்டை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஏழரை சனி காலத்தில் முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் எளிமை. ஆடம்பரத்தை விட்டுவிட்டு எளிமையாக இருந்து, இயலாதவர்களுக்கு உதவி செய்தாலே போதும். சனிபகவானால் நமக்கு பிரச்சனை வராது. முருகப்பெருமானின் நட்சத்திரமான பூசம் நட்சத்திரத்தில், தை மாதத்தில் வரக்கூடிய பூசம் நட்சத்திரத்தில், முருகப்பெருமானை நினைத்து எவர் ஒருவர் எளிமையாக வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ, அவர்களை நான் எதுவும் செய்யமாட்டேன் என்று சனிபகவானே வாக்கு கொடுத்திருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தைப்பூசத் அன்று முருகப்பெருமானை எளிமையான முறையில் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும். தலைக்கனம் அகங்காரம் கர்வம் இவைகளை எல்லாம் எடுத்து மண்ணில் போட்டு புதைத்து விட்டு, எளிமையான சாதாரண மனிதராக முருகன் கோவிலுக்கு சென்று, வரிசையில் நின்று முருகனுக்கு உகந்த பாடல்களை பாடி, முருகனை மனம் உருகி வழிபாடு செய்துவிட்டு, தைப்பூச திருநாளன்று மதியம் உங்களால் முடிந்த அன்னதானத்தை சாதுக்களுக்கு முதியவர்களுக்கு செய்தாலே போதும். சனி பகவானால் உங்களுக்கு எந்த தோஷமும் பிரச்சனையும் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.
அந்த பழனி முருகனுக்கு தான் தைப்பூச திருநாள் ரொம்ப ரொம்ப விசேஷம். எல்லா முருகன் கோவில்களிலும் தைப்பூசத் திருநாள், திருவிழாவாக கொண்டாடப்பட்டாலும், அந்த பழனியில் இந்த விசேஷம் மிக விமர்சையாக நடைபெறும். காரணம் என்ன தெரியுமா. அந்த இடத்தில் தான் முருகன் ஆண்டி கோலத்தில் இருக்கின்றான். (எளிமை என்ற வார்த்தைக்கு உண்டான அர்த்தமே அந்த ஆண்டிக் கோலம் தான்.) அரச கோலத்திலும் இருக்கின்றான், சாது கோலத்திலும் காட்சி தருகின்றான்.
நேற்று இருப்பது இன்று இல்லை. இந்த மாயையான, போலியான வாழ்வில், எதுவுமே இல்லாமல் இந்த பூமிக்கு வந்து, எதுவுமே இல்லாமல் பூமியிலிருந்து செல்கின்றோம். இதுவே முருகன் உணர்த்தும் தத்துவம். இதை தான் பழனி மலையிலும் சொல்லப்படுகிறது.
எதுவுமே நிலை இல்லை. இந்த மாய உலகத்தில். தேவைக்கு ஏற்ப மட்டும் வைத்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக இருப்பதை இல்லாதவர்களுக்கு உதவி செய் என்று சொல்கிறது முருகன் வழிபாடு.
நீங்களும் வரவிருக்கும் தைப்பூசத் திருநாளன்று மிக மிக எளிமையான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்து உங்களால் இயன்ற அளவுக்கு அடுத்தவர்களுக்கு அன்னதானத்தையும், உதவியும் செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஏழரை சனிக்காலம் நிச்சயமாக கரடு முரடாக இருக்காது. முருகனின் ஆசியால் வாழ்க்கை சுகமான பயணத்தை கொடுக்கும்.
எல்லோராலும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாட்டை மேற்கொள்ள முடியாது. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகப்பெருமான் கோவிலிலேயே மேல் சொன்ன முறைப்படி எளிமையான முறையில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.