Breaking News :

Thursday, November 21
.

பசுபதீஸ்வரர் சிவன் கோயில் , நன்னிலம்!


சிவஸ்தலம் பெயர்:
திருக்கொண்டீச்சரம் (மக்கள் வழக்கில் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்குகிறது)

இறைவன் பெயர்: பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்: சாந்தநாயகி

தேவாரப் பாடல்கள்
அப்பர்
1. வரைகிலேன் புலன்க ளைந்தும்
2. கண்ட பேச்சினிற் காளையர்


நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி நிறுத்தம்"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

தற்போது மக்களால் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்கப்படுகிறது.
உமை, பசுவின் வடிவில், தன்கொம்பால் பூமியைக் கிளறியவாறே இறைவனைத் தேடிவந்தபோது, கொம்புப்பட்டுக் குருதி பெருகி இறைவன் வெளிப்பட்டார். உமை (பசு) தன் பாலையே பெருமான்மீது (சிவலிங்க மூர்த்தம்) சொரிந்து புண்ணை ஆற்றினாள் என்பது வரலாறு. மூலத்திருமேனியின் மீது வெட்டுப்பட்டது போன்ற - பசுவின் கொம்பு பதிந்த ஆழமான வடு உள்ளது.

ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள்.

அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள்.

பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார்.

இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கத்தின் பாணத்தில் உள்ள வெட்டுப் பகுதியைக் காட்டுவார்.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோயில். இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.

முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து 2-ம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். கருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன.

 சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன.

வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சாந்தநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக அமைந்துள்ளது. இம் மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷியின் உருவமும் உள்ளது.

சிறப்புகள்

வெளவால் நெத்தி மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷி உருவமும்; ஒருபுறத்தில் மூன்று திருவடிகளுடன் கூடிய ஜ்வரஹரேசன் உருவமுள்ளது.

சுரநோயால் வாடுபவர்கள் இம்மூர்த்திக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்து, புழுங்கலரிசி நிவேதனம் செய்தால் சுரம் நீங்குவது இன்றும் கண்கண்ட பிரார்த்தனையாக உள்ளது.

கார்த்திகை வியாழன் எமகண்டத்தில் ஒவ்வொரு வருடமும் விழா எடுக்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெருகிறது.

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில்
திருக்கண்டீஸ்வரம்
தூத்துக்குடி அஞ்சல்
வழி சன்னாநல்லூர்
நன்னிலம் R.M.S.
திருவாரூர் மாவட்டம்
PIN - 609504
தொடர்புக்கு: 04366 - 228 033

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.