Breaking News :

Friday, April 04
.

திருநள்ளாறுக்கு மட்டும் அனைவரும் செல்வது?


மனிதனைப் பாதிக்கும் நவகிரகங்களில் சனியும் ஒன்று.  சகல துக்கங்களைப் போக்கி அருள் பவர்; உத்தமோத்தமர்; வில், அம்பு, கத்தி, வரதம் ஏந்தியவர். கோரைப் பல், கருமை யான தேகம் கொண்டவர். நீல ஆடை, நீலமணி, நீலோற்பலம் ஆகியவற்றை அணியாகக் கொண்டு விளங்குபவர் என்று தியான சுலோகம் வர்ணிக்கிறது.

சில்ப ரத்னம், தத்துவ நீதி போன்ற நூல் களும் சனி பகவானை வர்ணிக்கின்றன.
சூரியன் மனைவியான சம்ஞா கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள்.

இந்த சாயாதேவியிடம் சூரியனுக்கு சனி பகவான் பிறந்தார். சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்க, அவன் கால் ஊனமாகியது. மெதுவாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் "சனைச்சரன்' (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயர் ஏற்பட்டது.

சனி பகவானைப் பற்றி தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே நூல்கள் விளம்புகின்றன. பெருமழை பெய்து வெள்ளம் வர கோள்கள் எப்படி அமைந்தன என்பதைப் பரிபாடல் விளம்புகிறது. புறநானூறு மழை பெய்யாதிருக்க கோள்கள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் கோள்கள் பற்றி வருகிறது.

இது சங்க காலக் கதை. பின்னால் எட்டாம் நூற்றாண்டில் வந்த நாயன்மார்களும் கிரகங்களின் பாதிப்பைப் பற்றி பேசியுள்ளனர். "மகர ராசியில் புகுந்த சனி, மனைவியும் பரிகசிக்கும் நிலையை ஏற்படுத்து வான்' என்கிறார் சுந்தரர்.

ஞானசம்பந்தரோ கோள்களின் பிடியிலிருந்து தப்பிக்கும் மார்க் கத்தை விளக்குகிறார். இப்படி சனி பகவான் ஒருவர்தான் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமாக நம்மை ஆட்டி வைக்கிறார்.

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.
ஜென்ம ராசிக்கு முதல் ராசி, சுயராசி, பின் ராசி ஆகிய மூன்று ராசிகளிலும் சஞ்சரிப்பதை ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். எட்டாவது ராசியை அஷ்டமத்துச் சனி என்பார்கள்.

நளமகராசன் சனியை வழிபட்டுக் கலி நீங்கிய கதை யாவர்க்கும் தெரியும்.  அந்தத் தலம் நளேச்சுரம், நள்ளாறு என வழங்கப் படுகிறது. சாதாரணமாக நடு இரவை நள்ளிரவு என்றும்; நடுப்பகலை நண்பகல் என்றும் கூறுவதுபோல, ஆறுகளுக்கு நடுவில் இத்தலம் இருப்பதால் நள்ளாறு எனப்பட்டது என்றும் கூறுவார்கள்.

காரைக்காலிலிருந்து எட்டு மைல் தொலைவிலுள்ள இத்தலம், மயிலாடுதுறை, கும்பகோணம் முதலிய இடங்களிலிருந்து ஊர்திகள் மூலம் எளிதாய் அடையும்படி உள்ளது.

அரண் போன்ற உயர் மதில்கள் வளைக்க, ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் நுழைவாயிலாக, நகவிடங்கர் போகமார்த்த பூண்முலையாளுடன் எழுந்தருளியுள்ளார். சனி பகவானுக்கு இங்கு தனிச் சந்நிதி இருக்கிறது.
சனி பகவான் திருஷ்டிக்குத் தப்பியவர்கள் கிடையாது என்பதற்குப் பல கதைகள் உண்டு.

ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு, ""நான் தேவர்களுக்கெல் லாம் தலைவன்; என்னை எப்படி நீ பிடிக்க லாம்?'' என்று கேட்க, ""என் பார்வையிலிருந்து எவருமே தப்ப முடியாது'' எனப் பதிலளித்தார் சனி பகவான். ""அப்படியானால் நீ என்னைப் பிடிக்கும் நேரத்தைச் சொல்லிவிடு'' என்று தேவேந்திரன் வேண்ட, சனி பகவான் அதைக் கூறினார்.

அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச் சாளி உருக்கொண்டு சாக்கடையில் ஒளிந்து கொண்டான்.
சனி அந்த இடத்தில் தேட மாட்டார் என்ற நினைப்பு அவனுக்கு! அந் நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்து விட்ட பெருமையை அளக்க, சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே, ""நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால்தான்!'' என்றார்.

இராவணன் தன் பராக்கிரமத்தால் நவ கிரகங்களைப் பிடித்துத் தன் சிம்மாசனத்துப் படிகளாகப் போட்டுவிட்டான்.
அவர்கள் முதுகில் கால் வைத்து அரியணை ஏறுவது அவன் வழக்கம். அதை ஒரு நாள் நாரதர் கண்டு, ""சனி பகவானே! எல்லாரையும் நீர் பிடிப்பீர்.  இப்பொழுது இராவணன் உம்மைப் பிடித்து விட்டானே?'' என்று பரிகசித்ததும் சனீஸ்வரன்,
""என்ன செய்வது? என்னைக் குப்பு றப் போட்டு விட்டான். அதனால் அவனைப் பார்த்துப் பிடிக்க முடியவில்லை'' என்றார். அவ்வளவுதான்.
நாரதர் நேராக இராவணனிடம் சென்று, ""இராவணா! உன்னுடைய கீர்த்திக்கு சனியைக் குப்புறப் போட்டு முதுகிலா
மிதிப்பது? மார்பின் மீதல்லவா அடிவைக்க வேண்டும்?'' எனக் கூற, உடனே இராவணன் அப்படியே மாற்றி விட்டான். அவன் படிகளில் ஏறும்பொழுது சனி திருஷ்டி ஏற்பட்டு விட்டது. பலன் யாவர்க்கும் தெரியும்!

எல்லா சிவாலயங்களிலும் சனி சந்நிதி உண்டுதான். இருந்தும் பிரத்தியேகமாக வழி படப்படுவது திருநள்ளாறில்தான்.
சனிப் பெயர்ச்சி நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடி, அகலில் நல்லெண்ணெய் வார்த்து தீபமேற்றி வழிபடுவது அங்கு கண்கொள்ளாக் காட்சியாகும்!

சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.