கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி என்ற பெயரில் சுவாமி உள்ளார். இவரை வணங்கினால் தீராத குறையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தர்களின் தீராத குறை தீர்க்கும் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்ம நாப சுவாமி.
பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷ மதிப்பைப்போல சோமநாதர் கோயிலில் ஆறு மடங்கு மதிப்பு வாய்ந்த ஆபரணங்களும் விளக்கு முதலானபூஜைப் பொருட்களும் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்தியப்பேரரசில் மிகவும் புகழ்பெற்றவர்கள் சுத்தோதனர், அசோகர், சந்திரகுப்தமெளஜீயர், சமுத்திரகுப்தமெளஜீயர்,ஹர்ஷவர்த்தனர் போன்ற மன்னர்கள். அவர்கள் தம்முடைய ஆஸ்திகளையும் பலப் பல கோயில்களுக்கு தானமாக தந்தனர்.
எதிரிகளிடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும் அந்த அரும் பெரும் சொத்துக்களைக் காக்க, கோயில் நிர்வாகிகள், சுரங்கத்தை வெட்டி உள்ளே அவற்றை பத்திரப்படுத்தினர்.
எகிப்தில் மிகப் பிரசித்தமான ரூபிகாமன் பிரமிடில் உள்ள திரவியங்கள் உலகப் பிரசித்திபெற்றவை. ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வண்ணம், தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சை பெரிய கோயில், குற்றாலம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவானைக்கா, ராமேஸ்வரம், திருவாரூர், பழனி, திருச்செந்தூர், அழகர்கோயில் போன்ற எண்ணற்ற கோயில்களில் பாதுகாப்பாக இருக்கும் பொக்கிஷங்களைக் கணக்கிட முடியாது என்கிறது நாடி.
‘குபேரனுக்குதனத்தினும் மிகுத்து கிடக்கு அம்பலத்தடியதனிலே” என்கிறார் அகத்தியர்.
கேரளத்தில் உள்ள ஏழு பரசுராமசேஷத்திரங்களில் சித்தர்களாலும் ரிஷிகளாலும் போற்றப்படுவது பத்மநாப சுவாமிகோயில். இங்குள்ள தீர்த்தம் பத்மநாப தீர்த்தம், பிற்காலத்தில் பத்ம தீர்த்தமாகியது.
பன்னிரண்டாயிரம் சாளக்ராம கற்களால் உருவாக்கப்பட்டவர் மூலவர். ‘கட்டுச்சக்கர யோகம்” என்ற ஒன்பதாயிரமூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு மருந்தை மூலவருக்கு பூசி உள்ளனர் நம் முனிவர்கள். ஆதலால் மூலவருக்கு சாத்தப்படும், அர்ச்சிக்கப்படும் மலர்களை மயிலிறகினால்தான் அகற்றுவார்கள். ‘மூன்று வாயிலில் என்னைதரிசனம் செய்” என்று திவாகர முனிவருக்கு பத்மநாபர் ஆணையிட, மூன்று வாயில்களை நிர்மாணம் செய்தனர்.
இலுப்பை மரத்தடியில் யோக நித்திரை செய்யும் பத்மநாப சுவாமியின் முதல் வாயிலில் அவரது சிரத்தையும் சிவபெருமானுக்கு அருள்பாவிக்கும் பாவனையில் உள்ள வலது கரத்தையும் தரிசிக்கலாம்.
சிவனும், ஹரியும் நானே என்ற தத்துவம். இரண்டாம் வயிலில் பூமிதேவியும் திருமகளும் கூடியபத்மநாபர், உற்சவர் தரிசனம். மூன்றாவது வாயிலில் திருவடி தரிசனம்.
சந்நதிக்கு முன் ஒற்றைக்கால் மண்டபம் இருக்கிறது. இங்கே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்பவரின் சொத்து முழுவதும் பத்மநாபனையேசேரும் என்பதினால், மன்னர் மார்த்தாண்டவர்மாவைத்தவிர வேறு யாருக்கும் அவ்வாறு சாஷ்டங்க நமஸ்காரம் செய்ய அனுமதி இல்லை. அதனாலேயே மன்னரின் சொத்து முழுவதும் பத்மநாபரையே சேர்ந்ததாக இருக்கிறது.
பத்மாநாப சுவாமி கருவறையில், அவரது தலைக்கு நேர்கீழாக சுரங்கம் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கரமும் சுதர்னை சக்கரமும் தங்கபாளத்தில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள்.
சுரங்கத்தில் கிடைத்தபொக்கிஷமே பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. ஆனால் மூலவரின் தலைக்கு நேர் அடியில் இதனினும் அதிகமான மதிப்புடைய தங்க, வைர நகைகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. நரசிம்மமூர்த்தி இந்த ஆபரணங்களுக்கு காவலாக இருக்கிறார் என்பது பெரியோர் வாக்கு.
சுரங்க அறைகளை திறந்து ஆபரணங்களை எடுப்பது என்பது தெய்வ குற்றம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்களைக் கண்டுஉலகமே வியப்படைந்தது. ஆனால் இதைக்கண்டு சித்தர்களும் ரிஷிகளும் இறைவனும் வருத்தமுற்றனர் என்கிறது நாடி சாஸ்திரம்.
‘இலுப்பையடி யோக நித்திரை கொளும் அனந்த பத்மநாபனடி ஆஸ்தி கண்டார் வியக்கவே இது தனை கண்டு ரிஷியரெலாம் நோவசித்தருஞ் சினங் கொண்டனரே” என்றும்.
‘காவலாய் இருக்கும் சிங்கமுக ஈசனும் (நரசிங்கர்) பசுபதி நாதனொரு (நேபாள பசுபதி நாதர்) காடுறை நாகராசனும் மங்கள பேய்ச்சி முலையுண்டானும் கோடனந்த புரமய்யனுமாதி கேசவனும் வாடி நிற்ப” என்றும் சொல்கிறது விசுவாமித்திரர் நாடி..
பொக்கிஷத்தை எடுத்ததினால் நரசிங்கபெருமாளும் அனந்தங்காடு நாகராஜ சுவாமியும் வில்ல மங்களத்திலிருக்கும் கிருஷ்ணபரமாத்மாவும் காசர்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அனந்தபுரத்து பெருமாளும் நேபாளத்திலிருக்கும் பசுபதிநாதரும் வருத்தம் கொண்டனராம்.
அகத்தியர் இக்கோயிலைப் பற்றி, தேவர்கள் கொண்டாடும் கோயில், திருமகள் நித்ய வாசம் செய்யும் கோயில், தீராத குறை தீர்க்கும் கோயில், தவறு செய்பவரை தண்டிக்கும் கோயில் என்கிறார்.
அமைவிடம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல பஸ்வசதி உள்ளது.