சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி
காசியில் நீராடினால் முக்தி
திருவண்ணாமலை என்று நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும். இந்த திருவண்ணாமலையை காந்தமலை என்றும் கூறலாம்.
“சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை” -என்றும் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம்,
அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை எல்ல. பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.
வரலாறு:
ஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.
பிரம்மா அன்னப் பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்தார்.
சினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாய் உள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும் என்று அருள் பாலித்தார்.
சிறப்புகள்:
பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே லிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமமாகும்.
பௌர்ணமி தோறும் பல லட்சம் பக்தர்கள் இங்குள்ள மலையை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம்ம்.
“தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யாந்கி மரணான் முக்த்தி
ஸ்மரணாத் அருணாசலே:”
“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.”
உலகின் பல இடங்களில் இருந்தும் யோகியர்களும், சித்தர்களும், மகான்களும் இங்கே வந்து தவம் புரியும் பெருமை மிக்க மலை. காந்தம் இரும்பை இழுப்பது போல தன் பேரொளியால் ஞான வேட்கை உடையோர்களை தன்னகத்தே இழுக்கும் மலை.
கவுரி நகர், தேகநகர்,அண்ணாமலை, அண்ணாநாடு, அண்ணாவூர், அருணாசலம், சிவலோக நகர், வாயு நகர், அறிவு நகர், தூய்மை நகர், தென்கயிலாயம், சோணமலை, அருணகிரி, முக்தி புரி, மோட்ச புரி என இம்மலைக்கு பல பெயர்கள் உண்டு.
திருவண்ணாமலை கோயில் 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. ஆறாம் பிரகாரம் என்று அழைக்கப்படும் வெளிப்பிரகாரத்தில் மிக உயர்ந்த கருங்கல்லினால் கோயில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. நான்கு திசையிலும் வானை முட்டும் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தென்னிந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் இது தான். இதன் அடிநிலை நீளம் 135 அடி. அகலம் 98 அடி.
ஆலயத்தின் உள்ளே அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். தனிச்சன்னதியில் உண்ணாமுலை அம்மன் காட்சி தருகிறார். அண்ணாமலை சன்னதியின் பின்புறத்தே வேணுகோலன் புல்லாங்குழலுடன் காட்சி தருகிறார். லட்சுமி, சரஸ்வதி, ஷண்முகநாதரும் தனிதனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி
-என்ற பாடல் அண்ணாமலையாரின் சிறப்பை விளக்குவதாகும்.
எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.
புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு.
சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.