Breaking News :

Saturday, December 21
.

திருச்செந்தூர் செந்திலாண்டவன் கடன் அடைத்த திருவிளையாடல்!


இன்று கை நீட்டிக் கடன் வாங்கும் பலர் பணத்தைத் திருப்பி கொடுப்பதில்லை, ஆனால் தான் வாங்காத  கடனை வட்டியுடன் அடைத்தவர் முருகப்பெருமான்.

அன்றைய நெல்லை மாவட்டத்திலும், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலும் வங்கக் கடலோரம் கலை ரசனையுடன் அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருச்செந்தூர்.

இது, முருகப்பெருமானின்  ஆறுபடை வீடுகளில் ஒன்று. இதன் அற்புதங்களோ ஏராளம்!

திருச்செந்தூருக்குத் தென்மேற்கே உள்ள ஊர் உடன்குடி. அதன் ஒரு பகுதி காலன் குடியிருப்பு. அங்கு ஒரு இஸ்லாமியப் புலவர் வாழ்ந்து வந்தார்.

அவர் பனை ஓலையைக் கொண்டு பாய் முடைந்து அவற்றை மதுரைக்கு அனுப்பி செட்டியார் ஒருவர் மூலம் விற்று வந்தார். தனது அவசரத் தேவைக்கு செட்டியாரிடம் கடன் வாங்கினார்.

வறுமை வாட்டியதால் அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை. வட்டியே கட்ட இயலவில்லை, அசலை எப்படிக் கொடுப்பார்? ஆண்டுகள் கடந்தன.

செட்டியார் பணத்தைக் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அமீனாவை அனுப்பி மீராக்கண்ணுப் புலவரை அழைத்து வரச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமீனா, காலங்குடியிருப்புக்குச் சென்றார். கோர்ட்டு உத்தரவைக் கூறி அழைத்தார். மறுநாள் காலையில் வருவதாக மீராக்கண்ணு சொன்னார்.

அன்று இரவு முழுவதும் செந்தில் ஆண்டவனை நினைத்து அவர் மனம் உருக பாடிக் கொண்டிருந்தார்.

"முருகனே முதல்வா முக்கண் மூர்த்திதன் மைந்தா வேலா
உருகிய உள்ளத்தோடும்  ஒரு தரம் முருகா என்றால்
முருகிநின்று உருத்தும் போகூல் முரண் அழிந்து ஆகூழாகி
மருவிடும் என்ற வாய்மை மறைந்ததோ என்பால் ஐயா"
என்ற பாடலைப் பாடியபடியே தூங்கி விட்டார்.

கந்தனை நினைத்தால் கைமேல் பலன் கிட்டுமே!  செந்தில் ஆண்டவன் அன்றிரவே அவரது கனவில் தோன்றினார். "விடிந்தவுடன் அமீனாவுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வா. என் முன்பு உள்ள சண்முக விலாச மண்டப உண்டியலில் உனக்கான பணம் காத்திருக்கும்"  என்று சொல்லி மறைந்தார். மனம் நெகிழ்ந்தார், மீராக்கண்ணு.

திருச்செந்தூருக்குத் தெற்கே சுமார் 15. கி.மீ. தூரத்தில் குலசேகரன் பட்டிணம் என்னும் ஊர் உள்ளது. மீராக்கண்ணுப் புலவர் வாழ்ந்த காலத்தில், அங்கே செந்தில் காத்த மூப்பனார் என்னும் ஜமீன்தார் அரசாண்டு வந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள் தடையின்றி நடக்கப் பொருள் உதவிகள் செய்ததால் அவர் 'செந்தில் காத்த'  மூப்பனார் என அழைக்கப்பட்டார்.

அன்றிரவு மூப்பனார் கண்ட கனவிலும் செந்தில் ஆண்டவன் தோன்றினார். "நாளை காலையில் என் முன் உள்ள சண்முக விலாசத்திற்கு வா. அங்கே அழுது புலம்பும் புலவரைக் கண்டு, அங்குள்ள உண்டியலைத் திறந்து அதிலுள்ள பணத்தை எடுத்துப் புலவரிடம் கொடும்"  என்றார்.

பொழுது விடிந்தது. அமீனாவுடன் சண்முக விலாசம் சென்றார். 'தன் கடன் நெருக்கடியை நினைத்து, மனம் நொந்து அழுது புலம்பினார். அப்போது செந்தில் காத்த மூப்பனாரும் அங்கு வந்து சேர்ந்தார்.

"புலவரே!  செந்தில் ஆண்டவன் கட்டளைப்படி உண்டியலில் உள்ள பணத்தைப் பெற்றுக் கொள்ளும்" என்று கூறி உண்டியலைத் திறந்து பணத்தை எடுத்து புலவரிடம் கொடுத்தார்.
 
என்ன ஆச்சரியம்!  மதுரைச் செட்டியாருக்கு  புலவர் கொடுக்க வேண்டிய பணம் அசலும், வட்டியுமாக சரியாக அதில் இருந்தது. இஸ்லாமியப் புலவரின் கடனை கந்தன் தீர்த்த லீலை.

*சிவசிவ*
*ஸ்ரீ முருகன் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*
*ஆதித்யா*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.