Breaking News :

Friday, April 04
.

திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றுவது யார்?


திருநாளில் ஜோதி ஏற்றுவது யார்? அந்த உரிமை அவர்களுக்கு எப்படி கிடைத்தது? தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.

ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை அண்ணாமலையில் ஏற்றுவதுதான் எத்தனை பாக்கியம்! நினைத்தாலே மெய் சிலிர்க்க செய்யும் இத்திருப்பணியை, தொன்றுதொட்டு நிறைவேற்றும் பெருமையை பெற்றிருப்போர் பருவத ராஜகுலத்தினர்.

திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள் அவர்கள். திருவண்ணாமலை நகரில் மட்டும் அவர்களின் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களில், ஐந்து வம்சாவழிகளாக உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தீபம் ஏற்றும் உரிமையை நிறைவேற்றுகின்றனர்.

இறைஜோதியை ஏற்றும் உரிமை இவர்களுக்கு எப்படி கிடைத்தது?

பருவத ராஜகுல வம்சத்தின் வழிவந்த, பருவதராஜனின் அருந்தவப் புதல்வியாக அவதரித்தார் பார்வதி தேவி. பருவத ராஜகுலத்தினர் மீன் பிடி தொழிலை மேற்கொள்வதால் மீனவர்கள் என்றும், செம்பொன்னால் செய்யப்பட்ட படகில் சென்று மீன் பிடித்ததால் செம்படவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்தவர்கள்தான், தொன்றுதொட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

முன்னொரு காலத்தில், பிரம்ம ரிஷிகளின் தியானத்தை கலைக்கும் வேலையில் அசுரர்கள் ஈடுபட்டனர். பிரம்ம ரிஷிகள் கோபப்படும்போது, அவர்கள் மீன் உருவாக மாறி, கடலுக்குள் சென்று மறைந்துகொள்வார்கள். அசுரர்களை அழித்து, தம் தவம் சிறக்கச் செய்யுமாறு சிவபெருமானிடம் ரிஷிகள் முறையிட்டனர். அடியார்களின் இன்னலை உணர்ந்த சிவபெருமான், பருவதராஜனை அழைத்தார். கடலுக்குள் மீன் வடிவில் மறைந்துள்ள அசுரர்களை அழிக்குமாறு கட்டளையிட்டார். அதற்கு உதவியாக ஞான வலையையும், தேவதச்சனான விஸ்வகர்மா உருவாக்கிய செம்பொன் படகையும் அளித்தார்.

கடலுக்குள் விரைந்து சென்ற பருவதராஜன், மீன் வடிவிலான அசுரர்களை பிடித்து கரையில் போட்டார். அசராத அசகாய சூரர்களான அசுரர்கள், மீண்டும் மீண்டும் கடலுக்குள் துள்ளி குதித்து மறைந்தனர். சோர்வடைந்த பருவதராஜா, மகள் பார்வதியிடம் உதவி கேட்டார். மனம் இறங்கிய பார்வதிதேவி, கடல் நடுவே அகோர உருவில் வாய் திறந்து நின்று மீன்களை எல்லாம் விழுங்கி அழித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசுரர்களுக்கு விரித்த வலையில், கடலுக்கு அடியில் தவம் புரிந்த மீனமகரிஷி சிக்கி கரைக்கு வந்தார்.

தவம் கலைந்த கோபத்தில், ‘‘உமது ராஜவம்சம் அழிந்து, மீன் பிடித்துதான் வாழ வேண்டும்,” என்று பருவத ராஜாவுக்கு சாபமிட்டார். இதனால் அதிர்ந்த பருவதராஜா, ஓடோடிச்சென்று சிவனிடம் முறையிட்டார். கருணை கொண்ட சிவன், கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஜோதி பிழம்பாக காட்சித் தருவேன், அந்த ஜோதியை ஏற்றும் பணியை பருவதராஜ வம்சத்தினர்தான் நிறைவேற்ற வேண்டும். ஜோதியை தரிசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா எனும் முழக்கத்தின் புண்ணியமெல்லாம் பருவதகுலத்திற்கே சென்று சேரும் என வரம் அருளினார். அதன்படியே, காலம் காலமாக பருவத ராஜகுலத்தினர் திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றும் பணியை நிறைவேற்றி வருகின்றனர்.

3500 கிலோ சுத்தமான பசு நெய், 1500 கிலோ எடையும், 1000 மீட்டர் காடா தூணியால் திரிக்கப்பட்ட திரியும் இதற்காக உபயோகிக்கப்படுகிறது. இவைகள் மலைமேல் தலைச் சுமையாகவே இவர்களால் கொண்டு செல்லப்படுகிறது.

தீபம் ஏற்றுவதற்காக தேர்வு செய்யப்படும் 5 பேர், ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருக்கிறார்கள். தீபம் ஏற்றும் அடியார்க்கு அண்ணாமலையார் கோயிலில் பரிவட்டம் கட்டப்படும். பின்னர், அண்ணாமலையார் சந்நதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தில் இருந்து, மகா தீபம் ஏற்றுவதற்கான தீபச்சுடரை ஒரு மண் சட்டியில் வைத்து சிவாச்சாரியார்கள் இவர்களிடம் வழங்குவார்கள்.

மேளதாளம் முழங்க இவர்களை மலைமீது வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறும். மண்சட்டியில் ஏந்திச்செல்லும் தீபச்சுடரை, அணையாமல் 2,668 அடி உயர மலை உச்சிக்கு கொண்டுசெல்வார்கள். மலை மீது வைக்கப்பட்டுள்ள மகா தீப கொப்பரையில் நெய்யும், திரியும் இட்டு. அதன் மீது, கற்பூர கட்டிகளை குவிக்கிறார்கள்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் மாலை 5.58 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சிதருவார். அப்போது, கோயில் கொடிமரம் எதிரே இவர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் அகண்ட தீபம் ஏற்றுவார்கள். அதைத்தொடர்ந்து, அண்ணாமலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றுகிறார்கள்.

மகா தீபத்தை ஏற்றும் அந்த நொடிப்பொழுது, நாங்கள் இறைவனின் திருவடியை பற்றியிருப்பதைப்போல உணர்வதாய் சொல்கின்றனர்.. மகா தீபத்தை ஏற்றும் சுடரை, சிவாச்சாரியார்களிடமிருந்து பெற்றுச்செல்லும் இவர்கள்கள், மலை மீது ஏறுவதற்கு முன்பு பாவ பிராயச்சித்தம் வேண்டுதல் நடத்துவது வழக்கம்.

திருவண்ணாமலையே இறைவன். எனவே, மலை மீது கால் வைத்து ஏறிச்செல்வது பெரிய பாவம். ஆகவே, மலையடிவாரத்தில் உள்ள குகை நமசிவாயர் கோயில் அருகில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருப்பாதத்தின் முன்பு ‘மூவுலகை காக்கும் ஈசனே, உமது திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது பயணிக்கிறோம். எங்களை மலை மீது அனுமதியும்’ என்று உளமாற பிரார்த்தித்துக்கொண்ட பிறகே இவர்கள் பயணம் தொடரும்.

தீபம் ஏற்றும் போது, இவர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் சிவபுராணம் பாடிக்கொண்டிருப்பர்.சிவனுக்கு உகந்ததான சங்கொலி முழங்குவர். மகா தீபம் மலை மீது தொடர்ந்து 11 நாட்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு நாளும், அண்ணாமலையார் கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான கற்பூரம் மற்றும் திரியை இவர்களே பெற்றுச்செல்வர்.

மகா தீபத்திலிருந்து வழியும் நெய்யை பறவைகளோ எறும்போ அண்டுவதில்லை என்பது ஆச்சரியம்.
அண்ணாமலையாருக்கு அரோகரா!.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.