Breaking News :

Friday, April 04
.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசி என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான திருவிழாவாகும்.🙏 குறிப்பாக வைணவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த நாளில், விஷ்ணு பகவானின் பரமபதமான வைகுண்டத்தின் வாயில் திறக்கப்படுவதால் இது சிறப்பாக கருதப்படுகிறது.

''வைகுண்டம்'' என்ற சொல்லுக்கு விஷ்ணுவின் இருப்பிடம் என்று பொருள். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் ஆகும்.

இந்த நாளில், வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் அன்று திறக்கப்படுவதால் அதை சிறப்பாக கருதுகின்றனர்.

திருமங்கையாழ்வார் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உண்மையான உபவாசம் ஆகும்.

இத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லப்படுகின்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும்.

சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.

2025-ல் வைகுண்ட ஏகாதசி

ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இருப்பதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகள் வருகின்றன. அதேபோல, ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருகிறது.

ஆனால், மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதிக்கு தான் வைகுண்ட ஏகாதசி என்று பெயர்.

2025ஆம் ஆண்டில் இரண்டு வைகுண்ட ஏகாதசிகள் வருகின்றன.

முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 9-ம் தேதி துவங்கி 10-ம் தேதி முடிகிறது. 🗓️ இது கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதால் கூடுதல் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 31-ம் தேதி வருகிறது.

வரலாறு:

விஷ்ணு பகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள்.😠 அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள்.

இந்த அசுர சகோதரர்களை அடக்க விஷ்ணு பகவான் ஒருவரே என்ற முடிவில் தேவர்கள் முறையிட, பெருமாள் அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். விஷ்ணுவிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

பகவானே! தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள் தான் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள்.

இந்த அசுர சகோதரர்கள், தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.

எம்பெருமானே! தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், அவர்கள் செய்த பாவங்கள் யாவும் நீக்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் சேரும். மேலும் செல்வாக்கு உயரும்.

பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை ''பெருமாள்'' என்று அழைக்கின்றோம்.🙏 பெருமாளை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை அனுபவத்தில் காணலாம்.

வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும்.

மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ''முக்கோடி ஏகாதசி'' என்றும் அழைக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்களுக்கு, மறுபிறப்பே இல்லை என்று பக்தர்கள் கருதுகின்றனர். ஏகாதசி விரதம் இருந்தால் வைகுண்டத்திற்கே வழி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வைகுண்ட ஏகாதசியின் முக்கியத்துவம்:

திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல கோவில்களில் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது மிகவும் பிரசித்தி பெற்றது.

இதன் மூலம் பக்தர்கள் சொர்க்கத்தை அடைவது போன்ற அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த நாளில் பக்தர்கள் உணவு உண்ணாமல் இருந்து விரதம் இருப்பார்கள்.

இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை.

விரதம் இருப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் கிடைக்கும்.

இறைவனை நினைத்து மன ஒருமைப்பாட்டுடன் இருப்பதால் மன அமைதி கிடைக்கும்.

இந்த நாளில் பக்தி பாடல்கள் பாடி இறைவனை வழிபடுவார்கள்.

விரத முறை:

முழு நாள் உணவு உண்ணாமல் இருப்பது வழக்கம். ஆனால், பழங்கள், பால் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

விஷ்ணு சகஸ்ரநாமம், நாராயண மந்திரம் போன்ற மந்திரங்களை ஜெபிப்பது நல்லது.

பெருமாள் கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்றி, பூஜை செய்து வழிபடலாம்.

வைகுண்ட ஏகாதசி விரத பலன்கள்:

இந்த வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் பெருமாளின் அருளுடன், சுக்கிரனின் அருளும் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்,

திருமணம் விரைவில் கைகூடும்,

வேலைவாய்ப்பில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து சென்று வழிபடுவர்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி:

ஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுவதும் எத்தனையோ சிறப்பு வைபவங்கள் நடந்தாலும், வெகு விமர்சையான விசேஷமாக நடத்தப்படுவது வைகுண்ட ஏகாதசி விழா தான்.

மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பாக ஸ்ரீரங்கத்தில் மட்டுமே வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது.👑 இந்த உற்சவத்தில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தியான நம்பெருமான் வலம் வருவதை பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும்.

அப்பொழுது பக்தர்களின் கரகோசத்துடனும், கோவிந்தா.. கோவிந்தா என்ற முழக்கத்துடனும் நம்பெருமான் மிக அழகாக காட்சி தந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து, ராப்பத்து எனும் உற்சவங்கள் நடைபெறும்.

சொர்க்கவாசல் திறப்பிற்கு முன்னர், பகல்பத்து என்ற பத்து நாள் உற்சவம் நடைபெறும்.🌸 இந்த பத்து நாட்களும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

சொர்க்கவாசல் திறந்த பிறகு, ராப்பத்து என்ற பத்து நாள் உற்சவம் நடைபெறும்.🎶 இந்த நாட்களிலும் பல்வேறு வகையான உற்சவங்கள் நடைபெறும்.

பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவங்களில் திருவாய்மொழி பாட்டுக்கள் முக்கிய இடம் பெறும்.

ஏன் ஸ்ரீரங்கம் விசேஷம்?

ஸ்ரீரங்கம் கோவில் தான் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.👑 இங்குள்ள ரங்கநாதர் பெருமாள், திருமால் அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

பெரும்பாலான கோவில்களில் வைகுண்ட ஏகாதசி ஒரு நாள் விழாவாகக் கொண்டாடப்படும் போது, ஸ்ரீரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாடப்படுவது சிறப்பானது.

இந்த 21 நாட்கள் பகல் பத்து மற்றும் ராப்பத்து என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.🌸 ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளுவார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வு சொர்க்கவாசல் திறப்பு ஆகும். இந்த நாளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசிப்பார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் இங்கு கூடுவர்.

பல சிறப்புகள் பெற்ற வைகுண்ட ஏகாதசியில் பெருமாளை மனதார வழிபட்டு. நிறைவான அருள் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள்.🌺

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.