Breaking News :

Wednesday, February 05
.

கர்மம் தொலைய நாய்களுக்கு உணவிடுவோம்!


வளர்பிறை அஷ்டமி (05.02.25) பைரவ பூஜை தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை மகத்துவம் பெற்றுள்ளது போல் வளர்பிறை அஷ்டமி திதியிலும் பைரவ பூஜை மகத்துவம் நிறைந்தது.

வளர் பிறை அஷ்டமி திதியில் நிறைவேற்றும் பைரவ பூஜை நமது சஞ்சித கர்மங்களை களையும் தன்மை கொண்டது.வளர்பிறை அஷ்டமி பூஜைகளை சமீப காலத்தில் நிறைவேற்றி மக்களுக்கு அருந் தொண்டாற்றியவரே ஷீரடி சாய்பாபா ஆவார்கள்.

ஒவ்வொரு வளர் அஷ்டமி திதி அன்றும் பைரவ பூஜையை நிறைவேற்றும்போது பக்தர்கள் ஷீரடி சாய்பாபாவிற்கும் அவருடன் வரும் அடியார்களுக்கும், நாய்களுக்கும் விருந்தளிப்பது வழக்கம். அவ்விருந்தில் நாய்களுக்கும் மனிதர்களைப் போல இலை போடப்பட்டு பதார்த்தங்கள் படைக்கப்படும். கால பைரவ மூர்த்தி நாயை வாகனமாகப் பெற்று உள்ளார்.நாய்கள் நன்றி மறவாத பிராணிகள் என்பதோடு மட்டும் அல்லாமல் விதியை முன் கூட்டி உரைக்கும் வல்லமையும் ஈசன் அருளால் படைத்துள்ளன. நமக்கு வரக் கூடிய ஆபத்துக்களையும் பிரச்னைகளையும் மூன்கூட்டியே அறிந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வழிகாட்டுவதே கால பைரவர் வழிபாடாகும்.

சிவபெருமான் நான்கு நாய்களுடன் காசித்தல கங்கைக் கரையில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தார்.சமீப காலத்தில் கால பைரவ வழிபாட்டை முறையாக நிறைவேற்றி மக்களுக்கு நல்வாழ்வு அளித்த மகானே பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். சித்த மரபில் வந்த இப்பெருமான் நாய்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காணாதவர். நாம் மனிதர்களுக்கு உணவிடுவதைப் போலவே இவர் நாய்களுக்கு முழு வாழை இலையைப் போட்டு சாதம், சாம்பார், ஸ்வீட், அப்பளம், பாயசம் என அனைத்து உணவு வகைகளையும் அன்புடன் பரிமாறி அனைத்து நாய்களையும் அழைப்பார்.

அவருடைய வழிபாட்டில் நிகழ்ந்த அதிசயம் என்னவென்றால் இவர் உணவு பரிமாறும் வரை எந்த நாயும் அன்னதானம் நிகழும் இடத்தில் தென்படாது. வாழை இலையில் உணவு பரிமாறி முடிந்தவுடன் இவர் கால பைரவரை பிரார்த்தித்த பின் ஒவ்வொரு நாயாக வந்து மனிதர்களைப் போலவே இலையின் முன் அமர்ந்து கொள்ளும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 300 நாய்களுக்குக் குறையாமல் அன்னதானம் அளிப்பது வழக்கம்.

இவ்வாறு அனைத்து இலைகள் முன்பும் நாய்கள் அமர்ந்த பின் பாடகச்சேரிசுவாமிகள் அன்புடன் உணவை ஏற்குமாறு அந்த நாய்களை வேண்டுவார்.அதன் பின்னரே இவர் அழைத்த பைரவ மூர்த்திகள் உணவை அமைதியாக ஏற்பர். அதன் பின்னர், வரும்போது வரிசையாக வந்த அதே பாணியில் வரிசையாக ஒவ்வொரு நாயாக வெளியே சென்று விடும். எங்கிருந்து அத்தனை நாய்கள் வந்தன, மீண்டும் அந்த நாய்கள் எங்கு சென்றன என்பது இன்று வரை எவருக்கும் புரியாத ஆன்மீக ரகசியம். மேலும் ஓரிடத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்தாலே அவை ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டு அங்கு கூச்சலும் சண்டையும் வந்து விடும். ஆனால், பாடகச்சேரிராமலிங்க சுவாமிகளின் பைரவ பூஜையில் குறைந்தது 300 நாய்கள் இருந்தாலும் ஒரு சிறு சப்தம் கூட எழாது என்பதே பேரதிசயமாகும்.இவ்வாறு மகான்கள் பைரவ மூர்த்தியின்வாகனமான நாய்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதிலிருந்து நாய்கள் மனித குலத்திற்கு எத்தகைய அற்புத பாடங்களை போதிக்க வல்லவை என்பது தெளிவாகின்றது அல்லவா?

இதை மக்களுக்கு மௌனமாக எடுத்துரைக்கவே பைரவ மூர்த்திகள் நாய் வாகனத்தில் எழுந்தருளி உள்ளனர் என்பது அவர்களுடைய பற்பல அவதார ரகசியங்களுள் ஒன்றாகும்.பைரவ மூர்த்தங்கள் அஷ்ட பைரவ மூர்த்திகள் என எட்டு வடிவங்களில் திகழ்கிறார்கள் அல்லவா? சீர்காழி, திருக்குற்றாலம் சித்திரசபை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இத்தகைய அஷ்ட பைரவ மூர்த்திகளின் திருஉருவங்களைத் தரிசிக்கலாம்.

இதனை வளர்பிறை அஷ்டமியின் மகிமையை திருவண்ணாமலை அகத்தியர் நாடி மூலமாக சித்தர்கள் கூறி உள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.