துயர் தீர்க்கும் வாமன ஏகாதசி... விரதமிருந்து உலகளந்த பெருமாளை வழிபட வேண்டிய நன்னாள்! சைலபதி
வாமன ஏகாதசி பண்டிகை
ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசிக்கு பரிவர்த்தினி ஏகாதசி என்றும் வாமன ஏகாதசி என்றும் பெயர். வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத ஏகாதசி நாளில் என்பதால் இந்த ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்னும் பெயர் வாய்த்தது.
பொதுவாகவே ஏகாதசி திதி மிகவும் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது. அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
தசாவதாரத்தில் தனிச்சிறப்பு மிக்க அவதாரம் வாமன அவதாரம். முழு மனித வடிவில் பகவான் எடுத்த முதல் அவதாரம் இது. குள்ள உருவில் பிரம்மச்சாரியாகத் தோன்றி, தோன்றிய நாளிலேயே வேதங்கள் அனைத்தும் பயின்று மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார் என்கிறது புராணம். மேலும் இந்த அவதாரத்தில் அவர் மகாபலியை சம்ஹாரம் செய்யவில்லை. மாறாக பாதாள லோகத்துக்கே அனுப்பினார் என்பது சிறப்பு. பாதாள லோகத்தில் வாழும் காலம் முழுமையும் மகாபலியோடு விக்ர ரூபமாக எழுந்தருளியிருப்பதாகவும் வாக்குத் தந்த வண்ணமே இருந்தார் என்பதும் இந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு. அவ்வாறு மகாபலி பகவானின் திருவுருவைப் பாதாள லோகத் தில் பிரதிஷ்டை செய்த நாள்.
திருவடியின் மகிமையைச் சொல்வது இந்த அவதாரம். பகவான் ஓங்கி உலகளந்தபோது அவரின் இடுப்பு ஸ்வர்க்க லோகத்திலும் வயிறு மஹர்லோகத்திலும் மார்பு ஜனலோகத்திலும் கழுத்து தபோலோகத்திலும் தலை சத்ய லோகத்திலும் இருந்தன என்கிறது புராணம். அத்தகைய மாபெரும் உருவெடுத்த அந்தப் பெருமாளின் திருவடிவே உலகளந்த பெருமாளாக ஆலயங்கள் தோறும் வணங்கப்படுகின்றன.
திருப்பாவை
ஆலயங்களில் நாம் தரிசிக்கும் பெருமாள் திருமேனியின் சிறிய திருவடிதான் அந்நாளில் மூவுலகங்களையும் அளந்தது என்று அறிந்து தெளிந்து பணிவதன் மூலம் மெய்ஞ்ஞானத்தை அடையலாம் என்பதை அறிந்துதான் ஆழ்வார்கள் அந்தத் திருவடியைப் போற்றிப் பாடினார்கள்.
வாமன ஏகாதசி அன்று செய்ய வேண்டியவை:
1. பகவானை வாமனராகவும் ஓங்கி உலகளந்த பெருமாளாகவும் தியானம் செய்து வழிபட வேண்டும்.
2. இந்த நாளில் பகவான் தன் சயனக்கோலத்தில் இருக்கும் பெருமாளையும் பூஜை செய்வது சிறப்பு.
3. வழக்கமாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள், தசமி திதி அன்றே (5.9.22) இரவு உணவைத் தவிர்த்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.
4. பெருமாளுக்கு உகந்த பாசுரங்களைப் பாராயணம் செய்வது மிகவும் சிறந்தது. ஆண்டாள் மூன்று திருப்பாவைப் பாசுரங்களில் வாமன அவதாரத்தைப் போற்றுகிறாள். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்னும் 3 வதுபாசுரம், அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும் என்று தொடங்கும் 17வது பாசுரம், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்று தொடங்கும் 24 வது பாசுரம் ஆகியவற்றைக் கட்டாயம் பாராயணம் செய்ய வேண்டும். இவற்றைப் பாராயணம் செய்வதன் மூலம் நம்மைப் பிடித்திருக்கும் மனபயமும் நோயும் அகன்று அமைதியான உள்ளமும் ஆரோக்கியமான உடலும் வாய்க்கும் என்கின்றனர் அடியார்கள்.
5. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது.
6. இந்த நாளில் தானம் செய்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக பசித்தவர்களுக்குத் தயிர்சாதம் தானம் செய்ய, சகல நன்மைகளும் உண்டாகும்.
7. இந்த நாளில் இரவு உறக்கம் நீக்கி விழித்திருந்து பகவானின் நாமத்தை ஜபம் செய்கிறவர்கள் பூவுலகிலேயே சுவர்க்கத்தில் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கப்பெற்று வாழ்வார்கள் என்கிறது புராணம்.
8. இந்த நாளில் முழுமையாக விரதம் அனுசரிப்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று ஏகாதசி மஹாத்மியம் தெரிவிக்கிறது.
9. துவாதசி அன்று காலை பாரணை முடித்து ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். துவாதசி நாளிலும் சாத்விகமான உணவுகளை உண்டு பெருமாளை சேவித்து ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் நிறைவு செய்ய வேண்டும்.