இதன் புராணப் பெயர் வேள்வி மலை என்பதாகும்.
முருகப் பெருமான்–வள்ளியம்மனுக்கு திருமணம் நடந்த போது,அதற்காக வேள்வி நடைபெற்ற மலை இது என்று கூறப்படுகிறது. எனவே, இந்தத் தலம் வேள்வி மலை என்றானதாக தல புராணம் தெரிவிக்கிறது.
வேள்வி மலையே,தற்போது மருவி "வேளி மலை"என்று அழைக்கப்படுகிறது.
"வேளி"என்றால் திருமணம் என்று பொருள் உண்டு.இந்த ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும்.
முருகப் பெருமான் புள்ளி மானைத் தேடி வந்து, விநாயகர் அருளால் வள்ளியைக் கானகத்தில் கரம் பற்றியத் தலம் இது.
மலைக் கோவிலான இந்த ஆலயத்திற்குச் செல்ல 38 திருப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள முருகப் பெருமானின் வலது திருக்கரம் வரத ஹஸ்த முத்திரையுடன் அருள, இடது திருக்கரம் தொங்க விட்டவாறு காட்சி தருகிறது.
வேடனாய் வந்த முருகப்பெருமான்,வள்ளியை கவர்ந்து சென்ற போது, அவருடன் போரிட்ட மலைக் குறவர்களுக்கு முருகன் வேடன் உருவிலேயே காட்சி கொடுத்தார்.நமக்கும் அதே கோலத்திலேயே வள்ளி மணாளனாக, காண்போரை கவரும் கந்தசுவாமியாக காட்சியளித்து அருள்புரிகிறார்.
மூலவர் முருகப்பெருமான் குமாரசுவாமி என்னும் திருப்பெயரில்,ஒன்பது அடி உயரத்தில் தென் கிழக்குப் பக்கமாக வீற்றிருக்கிறார்.அருகில் வள்ளியம்மை காட்சி தருகிறார்.இந்த மூலவர் சுதையால் ஆனவர்.
உற்சவர் முருகப் பெருமானுக்கு,மணவாள குமரன் என்று பெயர்.ஆலயத்தின் வலது புறம் ஆலயத் திருக்குளமும்,அதன் முன் புறம் விநாயகர் சன்னிதியும் உள்ளன.
மூலவரின் சன்னிதியை அடுத்ததாக,சிவபெருமான் நந்தியோடு காட்சி தருகிறார். ஆறுமுக நயினார் மற்றும் நடராஜ பெருமானும் தெற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக் கிறார்கள்.
முருகன்,வள்ளியைக் காதலித்த காலத்தில்,மலைக் குறவர் கூட்டம் முருகனைத் துரத்தியது. அப்போது முருகப்பெருமான் வேங்கை மரமாக மாறி திருவிளையாடல் புரிந்தார்.
எனவே, ஆலயத்தில் உள்ள தல மரமாக வேங்கை மரம், முருகப்பெருமானாகவே பாவிக்கப்படுகிறது. தல மரத்திற்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டு,தினமும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இக்கோவிலில் தட்சனுக்கு தனி சன்னிதி உள்ளது. சிவபெருமானை அழைக்காமல் தட்சன் யாகம் செய்தான்.அவனது ஆணவத்தால் யாகம் அழிந்ததும்,தட்சனும் அழிந்து ஆட்டுத் தலையுடன் விமோசனம் அடைந்தான்.
ஆட்டுத் தலையுடன் உள்ள தட்சனே இந்த சன்னிதியில் காட்சி தரு கிறார்.