வறுமை, பிணி, பாவம் அகற்றி, நலம் பல அருளும் வடபழனி ஸ்ரீ வேங்கீஸ்வரர்.
வடபழனி 100 அடி சாலை (சிக்னல்) பேருந்து நிறுத்தத்தின் அருகில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் ஆலயம்.
மத்தியந்தினர் என்னும் ஒரு பெரும் முனிவருக்கு தவப்புதல்வரான மழ முனிவர் என்பவர் கல்வியின் பயன் கடவுளை வழிபடுதலும், இறைவன் அருளைப் பெறுதலும் என உணர்ந்தார்.
அவர் இறைவனிடம் அடியேன் நுமக்கு ஏற்ற இனிய எழில் மலர்களைப் பறித்துப் பூஜை செய்வதற்கு பயன்படும் வகையில் அடியேனுடைய கையும் காலும் புலியைப் போல வலிமையான நகங்களைப் பெறவும், அவைகளில் காணும் திறன்மிக்க சிறந்த கண்கள் அமைய பெறவும் திருவருள் சுரந்தருள்க எனப் பணிந்து வேண்டினர்.
இறைவனும் அதற்கு இசைந்து அவ்வாறே அளித்து அருளினார். இங்ஙனம் மலர் பறித்துச் சாத்தி இறைவனை வழிபடுதற்பொருட்டுத் தம் கை கால்களில் புலியைப் போன்ற வலிமை மிக்க நகங்களைப் பெற்றதனால் இவருக்கு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் தோன்றியது.
இவ்வாறு புலிக்கால் முனிவர் என்னும் பெயர் பெற்ற (வியாக்கிரபாத) முனிவர், பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்து, தாம் தில்லை என்னும் சிதம்பரத்திற்குச் சென்று நடராசப் பெருமாளை வழிப்பட்டு அருள் பெறுதற்கு முன்னர், இங்கு நெடுநாள் தங்கித் தம் பெயரால் ஒரு சிவலிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வாழ்ந்து வந்தார்.
புலிக்கால் முனிவர் தங்கி வழிபடப் பெற்று ஊராதலின் இதற்கு புலியூர் என்றும், இங்குள்ள சிவபெருமானுக்கு புலியூருடையார் என்றும் பெயர்கள் தோன்றின.
மேலும், புலியூர் என்பது வியாக்கிரபுரி எனவும் ஆதலால் இங்குள்ள இறைவரின் பெயர் வியாக்கிரபுரீசன் எனவும், புலிக்கு வேங்கை எனவும் மற்றும் புலியூர்க்கு வேங்கைபுரம் எனவும் உள்ளதால் அங்குள்ள இறைவனுக்கு வேங்கீஸ்வரர் என்ற பெயர்கள் அமைந்தன.
எனவே, புலியூருடையார் வியாக்கிரபுரீசுவரர் வேங்கீசுவரர் என்னும் பெயர்கள் அனைத்தும், இங்குள்ள சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களாகும்.
ஒருசமயம் திருமால் திருப்பாற்கடலில் அரகர சிவசிவ என்னும் திருப்பெயர்களைச் சொல்லி, கைகளைத் தலைமேல் குவித்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பத்மாசனம் என்னும் நிலையில் எழுந்தருளிருந்தார்.
இதனை கண்ட ஆதிசேடனும், பிரமதேவனும் காரணம் கேட்க அதற்கு திருமால் சிவபிரானின் திருநடங்களில் திறத்தைப்பற்றி விவரித்து உரைக்கக் கேட்டு வியந்து மகிழ்ந்த ஆதிசேடன் பக்தியுணர்வால் பரவசப்பட்டு நின்றார்.
ஆதிசேடனின் பக்தியுணர்வைக் கண்டு மகிழ்ந்த திருமால் இத்தகைய சிறந்த பக்தனகிய நீ சிவபிரானின் திருநடனத்தைக் கண்டுகளிக்க விரும்பினால், அவரை நோக்கி தவம் செய்து அருள் பெறுக என்று வாழ்த்தி சென்றார்.
அதன்படி ஆதிசேடன், புத்திரப்பேறு விரும்பித் தவங்கிடந்த அத்திரி முனிவரின் மனைவி ஆகிய அனுசூயை கைகளில் ஐந்து தலைகள் கொண்ட ஒரு சிறு பாம்பாக வந்து பொருந்தினார்.
அவள் அஞ்சிக் கைகளை உதறினாள். அப்போது அச்சிறு பாம்பாகிய ஆதிசேடன் அவளது கால்களின் மேல் விழுந்தான்.
இங்ஙனம் பாதத்தில் விழுந்ததனால், ஆதிசேடன் பதஞ்சலி எனப் பெயர் பெற்று, அத்திரி முனிவருக்கு மைந்தராக வளர்ந்து வந்தார்.
பெருமானின் திருநடனம் காண விரும்பிய உணர்ச்சி ஒற்றுமையின் காரணமாக, வியாக்கிரபாதரும், பதஞ்சலி முனிவரும் இணையற்ற இனிய நண்பர்கள் ஆனார்கள்.
இறுதியாக இருவரும் தில்லைக்கு சென்று திருப்புலீச்சுரம் திருஅனந்தேச்சரம் என்னும் திருக்கோயிலை அமைத்து தில்லை கூத்து பெருமானின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர்.
இதன் சான்றாக இன்றும் புலியூர் வேங்கீஸ்வரர் திருக்கோயிலில் இரு முனிவரின் சிலைகளும் இத்திருக்கோயில் அமைந்துள்ளன.
தரிசித்து புண்ணியம் பெற வேண்டிய தலங்களில் வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.
சீராரும் சதுர் மறையும் தில்லைவாழ் அந்தணரும்..
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த...
வாராரும் கடல்புடைசூழ் வையமெலாம் ஈடேற..
ஏராரும் மணி மன்று கொடுத்த திருவடி போற்றி!"
அமைவிடம்:-
வடபழனி முருகன்
கோயிலுக்கு அருகே. வடபழனி பேருந்து
நிலையத்தில் இருந்து ஐந்தே நிமிட நடை தூரம்.