Breaking News :

Friday, April 04
.

வில்வவனேசுவரர் கோவில், திருவைகாவூர்


திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 48வது சிவத்தலமாகும். மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தலச் சிறப்பு :

சோழர் காலப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று, உயர்ந்து நீண்ட மதில் சுவர், அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம் உள்ளது.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாசிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.

தல பெருமை :

முன்பு தவநிதி என்ற முனிவர் திருவைகாவூர் ஆலயத்தில் தங்கி வழிபாடுகளை நடத்திக் கொண்டிருந்தார். ஆலயத்தை சுற்றி பெரும் காடாக இருந்தது. அந்த காட்டில் ஒரு வேடன் குடும்பம், வசித்து வந்தார்கள். அவன் உணவுக்காக வேட்டைக்கு சென்றபோது இருட்டும் நேரத்தில் ஒரு மானைக் கண்டான். அதைத் துரத்தினான். மான் பயந்து ஓடி ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது.

முனிவர் மானுக்கு அபயமளித்தார். அதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் இறைவனை வேண்ட இறைவன் புலி உருக்கொண்டு வேடனைத் துரத்த பயம் கொண்ட வேடன் ஆலய பிரகாரத்தில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் வேடன் இறங்கட்டும் என்று மரத்தடியிலேயே காத்திருந்தது. புலி போகட்டும் என்று காத்திருந்த வேடனுக்கு பசியும், பயமும் வாட்ட, புலிக்கு அஞ்சிய வேடன் தான் ஏறி இருந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட அது புலி உருவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தது.

விதிப்படி அன்று இரவு வேடனின் ஆயுள் முடியவேண்டும். எனவே எமன் வேடனின் உயிரைப் பறிக்க ஆலயத்தினுள் நுழைந்தார். அன்றைய தினம் மகாசிவராத்திரி நாள். உண்ணாமல், உறங்காமல் இரவு நான்கு காலமும் இருந்த வேடன் அறியாமல் அவன் கிள்ளிப்போட்ட வில்வ இலைகளால் அவனுக்கு மகா சிவபூஜை செய்த பலன் கிடைத்தது. அதனால் வேடனை சிவபெருமான் தன் அடியாராக ஏற்றுக்கொண்டார். எனவே எமனை தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோலுடன் தோன்றி வெளியே விரட்டினார். அதன்பின் விழித்துக்கொண்ட நந்தி தேவர் வாசற்படி நோக்கி ஓடி வந்த எமனை தன் சுவாசத்தால் கட்டி நிறுத்திவிட்டார். சிவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக எமன் சிவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் எமனை மன்னித்தருளினார். அதன்பின் எமன் தன் பெயரில் குளம் அமைத்து அதில் மூழ்கி இறைவனை வழிபட்டு சென்றார்.

பிரார்த்தனை :

குழந்தை இல்லாத தம்பதிகள் இத்தல இறைவனை வேண்டி வணங்குவதால் மழலைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.  கல்யாண வரம் வேண்டுவோர், தொழில் விருத்தியடைய, வேலை கிடைக்க, உத்யோகத்தில் உயர்வு பெற இத்தலத்து இறைவனை வேண்டினால் நிச்சயம் நிறைவேற்றுவார்.  வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.