Breaking News :

Thursday, November 21
.

யாத்ரா தானம் என்றால் என்ன?


ஒரு யாத்திரை வெளியூர் பயணமோ அல்லது ஷேத்திராடனமோ/கல்யாண மண்டபமோ/செல்லும் முன் செய்யும் தானம் தான் யாத்ராதானம் என்பது

யாத்ரா தானம் எப்படி வந்தது?

வால்மீகியின் இராமாயண காவியத்தில் ஒரு அருமையான சம்பவம் ஒன்று விளக்கப் பட்டிருக்கும். அது வெறும் சம்பவம் மட்டுமல்ல அது பல துன்பங்களிருந்து விடுபட சிறந்த பரிகாரமாகவும் உள்ள ஒன்று. அதுதான் யாத்ரா தானம் என்பது.

அதாவது ஸ்ரீ ராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம் செல்ல தயாராகி விட்டார். தான் சேர்த்த பொருளை எல்லாம் யாத்ரா தானமாக கொடுக்க முடிவு செய்தார். அது முதல் வந்தது தான் யாத்ராதானம்

யாத்ரா தானம் மேற்கொள்வதால் என்ன நன்மை?

ஸ்ரீ ராமபிரான் அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் தான் அணிந்திருந்த உடை உட்பட சேர்த்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர்.

தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும் ஒரு அந்தணன் வந்தான். அவன் பெயர் திரிசடன். வயது முதிர்ந்தவன். அவனுக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம் வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை பொருக்கி அதிலே ஜீவனம் செய்து வந்தான்.

கொடிய வறுமை.

இவன் இவ்வாறு வறுமையில் வாடிக் கொண்டிருக்க ராமபிரான் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்வி பட்ட அவனது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று அன்பரே எவ்வளவு நாள்தான் இந்த
வறுமையை சகித்துக் கொள்வது.

ராமர் கானகம் ஏகும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார், நீங்களும் இந்த மண்வெட்டி கோடாலியை எல்லாம் அப்பாலில் வைத்து விட்டு அவரை சென்றடைந்து நமது நிலையை எடுத்து சொல்லி ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள் நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார் ஆகவே சென்று வாருங்கள் என்றாள்.

அதற்கு அந்தணனும் ஒப்புக் கொண்டு தன்னுடைய கந்தல் ஆடையால் உடலை ஓரளவு மறைத்துக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான்.

அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த ராமபிரானை கண்டார். ராமரை பணிந்து, ஹே அரசகுமாரரே ! தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது.

நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறோம். உண்ண உணவில்லை, உடுக்க உடை இல்லை. வயல் வரப்பில் தானே விழும் நெல்லை பொறுக்கி அதைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். என்பால் கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான்.

ராமபிரான், "அன்பரே சற்று முன் வந்திருக்க கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக்கும் கொடுத்து விட்டேனே! இனி கொடுக்க என்னிடம் ஏதும் இல்லை என்றார் ராமர்.

அந்தணன் நொந்து கொண்டான்.நாம் முன்பே வந்திருக்கலாமே என்று. ராமரிடம் கெஞ்சினான் என் வறுமை தீர வழி கூறுங்கள் என மன்றாடினான்.

பின் ராமர், தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என கேட்டார்.

நூறா இருநூறா அல்லது அதற்கும் மேலும் கேட்பதா என அந்தணன் திகைத்தான். பிறகு ஒரு வழியாக புத்திசாலிதனமாக என் வறுமை தீரும் அளவிற்கு வேண்டும் என்று ராமபிரானின் விருப்பத்திற்கு விட்டு விட்டான்.

அண்ணலும் "அந்தணரே உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள் அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது வரை உள்ள பசுக்களை உமதாக்கிக் கொள்ளலாம்" என்றார்.

இதை கேட்ட அந்தணன் விழிகள் மலர்ந்தன.

நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான்.

தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான்.

தனது முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது.

உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார்.

அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான்.யாத்திரை இனிதே முடிய வாழ்த்தினான்.

அவரிடம் விடை பெற்றுக்கொண்டு ராமபிரான் வழங்கிய பசு கூட்டங்களுடன் தனது வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் வறுமையின்றி சுகமாக வாழ்ந்தான்.

இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் வெளியூர் பயணமோ,ஷேத்திராடனமோ,
கல்யாண மண்டபமோ, அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை, பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை மேற்கொள்வார்கள்.

அதனால் யாதொரு கஷ்டமும் இன்றி பயணம் இனிதே முடிந்து ஊர் திரும்புவர்.

நாமும் நல்ல காரியங்களுக்கு வெளியூர் பயணங்களுக்கு செல்லும் முன் யாத்ரா தானம் செய்து விட்டு செல்வோம்

திரிசடயன் நீதி :

நாம் சோதிக்கப்படுவோம் ஆனால் கைவிட பட மாட்டோம். நமக்கானது நம்மை வந்து அடைந்தே தீரும். படைத்தவனுக்கு தெரியாதா நமக்கு எது தேவை, தேவையில்லை என.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.