Breaking News :

Friday, April 04
.

யோகி ராம்சுரத்குமார் வாழ்க்கை வரலாறு!


கடவுளின் குழந்தை’ எனப் போற்றப்பட்டவர் யோகி ராம்சுரத்குமார். வடநாட்டில் பிறந்திருந்தாலும் திருவண்ணாமலையையே இறுதிவரை தனது வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர்.

ஒருவரைப் பார்த்ததுமே அவர் எப்படிப்பட்டவர், அவரது ஆன்மா எத்தகைய தன்மை உடையது, அவரது அருள் நோக்கம் எவ்வாறு உள்ளது என எல்லாவற்றையுமே யாருமே கூறாமல் உணரும் திறன் பெற்ற மகா யோகி. பலரது கர்மவினைகளைத் தாம் ஏற்று அவர்களது ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவியவர்.

ஒரு முறை தெ.பொ.மீ. என அன்பர்களால் அழைக்கப்படும் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் யோகியாரைப் பார்க்க வந்திருந்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான தெ.பொ.மீ., அமெரிக்காவின் புகழ்பெற்ற மகரிஷி மகேஷ் யோகியின் மாணவர். அவரிடமிருந்து பல யோக முறைகளையும், ரகசிய தியான முறைகளையும் கற்றறிந்தவர். அளவற்ற ஆன்மீக நாட்டமுடையவர். தன் மாணவரான தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் மூலம் தெ.பொ.மீ.க்கு யோகி ராம்சுரத்குமாரின் தரிசனம் கிட்டியது. தெ.பொ.மீயைக் கண்டதுமே அவர் ஓர் உயர்ந்த ஆத்மா என்பதையும், தத்துவ அறிஞர் என்பதையும் உணர்ந்து கொண்ட யோகியார், அவரது இரு கைகளையும் அன்புடன் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தார். அது முதல் அடிக்கடி யோகியாரைப் பார்க்க வந்து செல்லத் தொடங்கினார் தெ.பொ.மீ.

தெ.பொ.மீ. சில காலம் மூல வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அதனால் அதிகக் காரம், புளிப்பு உள்ள உணவுகளை அவர் உண்ணக் கூடாது என்பது மருத்துவர்களின் கட்டளையாக இருந்தது. ஒருமுறை அவர் யோகியாருடன் உணவு உட்கொள்ள நேரிட்டது. அது அதிகக் காரம் கொண்டதாக இருந்ததால் தெ.போ.மீயின் உறவினர்கள் அதனை அவர் உட்கொள்ளக் கூடாது என்றும், அது அவர் உடம்புக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தடுத்தனர். ஆனால் யோகியாரோ அதனை உண்ணுமாறும், தெ.பொ.மீ.யின் உடல்நலம் கெடாது என்றும் உறுதியளித்தார்.

குருநாதரின் சொல்லை மீற முடியாத தெ.பொ.மீ. காரம் மிகுந்த அந்த இட்லிகளை வழக்கத்தைவிட மிக அதிகமாகவே உண்டார். ஆனால் அன்று அவருக்கு வயிற்று வலி எதுவும் ஏற்படவில்லை.

அன்று மட்டும் அல்ல, அது முதல் என்றுமே அவருக்கு அந்த நோய் ஏற்படவில்லை. பகவானின் அருளால் முற்றிலும் நோய் நீங்கப் பெற்ற தெ.பொ.மீ., பகவானின் உன்னத ஆற்றலை உணர்ந்து அவரைத் தொழுதார். அவர்மீது அழகான பல பாடல்களைப் பாமாலையாகச் சூடினார்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.