Breaking News :

Sunday, December 22
.

ஆசைகளை அடக்க கற்றுக்கொள் - சிறுகதை


ஒரு நாட்டில் ஒரு மன்னர் இருந்தார். 

 

அவர் பக்கத்து நாட்டின் மீது படையெடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தார். 

 

அதையும் தன்னுடைய நாட்டோடு இணைத்து விட வேண்டும் என்பது அவரது ஆசை. 

 

எப்போது படை எடுக்கலாம் என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

 

இப்படி யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு பெரியவர் அவரை தேடி வந்தார். 

 

அவர் அடிக்கடி வருவார். 

மன்னரிடம் பேசிக் கொண்டிருப்பார். 

இப்போதும் அப்படித்தான் வந்தார்.

 

என்ன மன்னா யோசனை என்றார் இவர். 

 

தன்னுடைய யோசனையை சொன்னார் மன்னர். 

 

இந்த சமயத்தில் மன்னருக்கு தாகம் எடுத்தது. 

தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. 

உடனே அங்கே இருந்த ஒரு அரண்மனை பணியாளரை கூப்பிட்டார். 

போய் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்றார்.

 

அந்தப் பணியாளர் போனார். 

ஒரு குவளை  தண்ணீர் கொண்டு வந்தார். 

ராஜாவிடம் நீட்டினார். 

ராஜா அதை வாங்கி குடிப்பதற்காக வாய்க்கு அருகில் கொண்டு போனார்.

 

அந்த நேரம் பார்த்து மன்னா கொஞ்சம் பொறுங்கள் என்றார் இந்த பெரியவர்.

 

ஆவலோடு குடிக்க போன மன்னர் அப்படியே நிறுத்திக் கொண்டு பெரியவரை பார்த்தார்.

 

மன்னா இப்போது உங்களைவிட வலிமையுள்ள ஒரு சக்தி உங்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து விட்டால் அல்லது உங்களை குடிக்க விடாமல் தடுத்தால் இந்த குவளை தண்ணீரை என்ன விலை கொடுத்து வாங்குவீர்கள்? 

என்று கேட்டார்.

 

இப்போது எனக்கு இருக்கின்ற தாகத்துக்கு என்னுடைய அரசாங்கத்திலே பாதியாவது கொடுத்து இந்த தண்ணீரை வாங்கவும் தயங்க மாட்டேன் என்றார் மன்னர்.

 

சரி இப்போது  தண்ணீரை குடியுங்கள் என்றார் பெரியவர்.

 

மன்னர் ஆவலுடன் அந்த தண்ணீரை குடித்து முடித்தார். அதன் பிறகு கொஞ்ச நேரம் தன்னுடைய படையெடுப்பை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

 

சிறிது நேரம் கழித்து மறுபடியும் இந்த பெரியவர் கேட்டார். 

 

மன்னா நீங்கள் ஒரு குவளை தண்ணீரை குடித்து முடித்து விட்டீர்கள். 

இப்போது அந்த தண்ணீர் உங்கள் உடம்பை விட்டு வெளியே வரக்கூடிய பாதை அடைப்பட்டு போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம். 

அதை வெளியேற்றுவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள்? என்று கேட்டார். 

 

மன்னர் யோசித்தார் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டால் என்னுடைய அரசாங்கம் முழுவதையும் அதற்கு ஈடாகத் தரவும் தயங்க மாட்டேன் என்றார்.

 

இப்போது அந்த பெரியவர் சொன்னார். 

எந்த அரசாங்கத்தின் மதிப்பு ஒரு குவளை தண்ணீர் அளவுக்கு கூட இல்லையோ அந்த அரசாங்கத்தை அடைய வேண்டும் என்கிற பேராசையில் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்கள் கூடவே சண்டையிடுகிறார்கள். 

இதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றார்.

 

மன்னருக்கு இப்போது தான் அர்த்தம் புரிந்தது. 

மனதில் தெளிவு உண்டானது. 

தன் மனதில் உண்டான வெறியை விரட்டி அடித்தார். 

அதன் பிறகு நிம்மதியாக ஆட்சி புரிந்தார்.

 

ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.

 

அதாவது ஆசை பேராசையாக மாறுகிறது. 

அப்புறம் அது வெறியாகிறது. 

 

ஆசைகளை அடக்க கற்றுக் கொண்டாலே போதும் மனிதன் முழுமை அடைந்து விடுவான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.