இதமான குளிர் காற்றுடன் வானில் முழு நிலவு உலகை பார்க்க, அந்த சுகத்தை முழுவதுமாக பலரும் அனுபவித்து கொண்டிருக்கும் அந்த தருணம் சாந்தியை பொறுத்தவரை மனம் வெப்பமாக தகித்தது.
அடுத்த வாரம் இதே நாள்
24 வருடங்களாக வளர்த்த பெற்றோர்களையும், 14 வருடமாக தனக்குள் ஒன்றாக இருக்கும் தன் தங்கை வசந்தியையும் விட்டுவிட்டு திருமணம் என்ற ஒரு பந்தத்தில் அடுத்த வீட்டிற்கு வாழ போகும் தன்னை பற்றி நினைத்த சாந்திக்கு, எதுக்கு திருமணம் என்ற ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும், அப்படியே திருமணம் நடந்தாலும் எதற்கு பெண்கள் மட்டும் சொந்தங்களைவிட்டுவிட்டு புது சொந்தத்தில் இணைய வேண்டும். சே! என மனதில் எண்ணியதை வாயால் உச்சரித்ததை பக்கத்தில் இருந்த தன் அம்மா வந்ததை கவனிக்கவில்லை.
என்ன சாந்தி! ஏன் உன் முகம் இப்படி எள்ளும் கொள்ளும் வெடித்தது போலாகிறது என கேட்க, அம்மா, உனக்கு தெரியும்தானே.... எனக்கு கல்யாணம் செய்து அனுப்பிவிட்டால் அப்பா மட்டும் தனியாக இந்த குடும்பத்தை கவனிக்க வேண்டும். ஏற்கனவே பழய கடன்களை இன்னும் அடைக்க
முடியாமல் இருக்கும்போது என் கல்யாணத்திற்கு என புது கடன்.
எப்படிம்மா அப்பாவால் சமாளிக்க முடியும்? வசந்தி படிச்சு முடிச்சு வேலைக்கு போக இன்னும் குறைந்தது 5 அல்லது 6 வருஷம் ஆகும். அது வரை
எப்படிம்மா அப்பா சமாளிப்பார்?
சாந்தியின் கேள்விகளுக்கு சிரித்துககொண்டே பதில் அளித்த அவள் அம்மா கோமதி,
இங்கே பார் சாந்தி... வாழ்க்கை என்பது நீ நினைக்கிறமாதிரி அவ்வளவு சுலபமா வாழ முடியாது. நானும் உன் அப்பாவும் கல்யாணம் செய்து கொண்ட பின் எங்களுக்கு எவ்வளவு குழந்தைகள், ஆணா பெண்ணா... போன்ற கேள்விகளை கேட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லை. கல்யாணம் குழந்தைகள் என்பதெல்லாம் நம் கையில் இல்லை.
என் பெற்றோர்கள் தங்கள் கடமையை செய்ய என்னை உன் அப்பாவிற்கு கல்யாணம் செய்து தந்தனர்.
அதை தான் இப்போது நாங்கள் செய்கிறோம்.
இதயேதான் நீயும் செய்யப்போகிறாய்.உன் வயசுக்கு மேல நீ யோசிக்கிற.
பேசாம வந்து நிம்மதியா படுத்து தூங்கு என்ற தாயின் பேச்சை கேட்டு மனமில்லாமல் கீழே இறங்கி தன் பூசை அடைந்தாள்.
அம்மா ரொம்ப ஈஸியாக போய் தூங்கு என சொல்லி விட்டாள்.
தூக்கம் பக்கத்திலே வரமாட்டேன் என்கிறதே!
எப்படி அப்பாவுக்கு தான் செய்த கொண்டிருக்கும் கடமையை பாதியிலேயே விட்டுவிட்டு போவது???
சாந்தியின் குடும்பம் மிக நடுத்தரமான குடும்பம். தன் இரண்டு தம்பிகள் ஒரு தங்கையை படிக்க வைத்து திருமணம் செய்து தரும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சாந்தியின் தந்தை சண்முகம்.
தன்னை பிள்ளைக்கு சமமாக தைரியம் ஊக்கம் கொடுத்து நன்றாக படிக்க வைத்தார்.
சாந்திக்கு 14 வயது இருக்கும் போது தான் அவள் தங்கை வசந்தி பிறந்தாள். அதனால் தங்கை மீது அளவு கடந்த பாசத்தை வைத்தாள் சாந்தி.
தன்னுடைய சேமிப்பை முழுவதுமாக தன் தம்பிகள் தங்கைக்கு வாழ்விற்கு செலவழிக்க வேண்டி இருந்ததால் சாந்தியின் தந்தை சேமிப்பை பற்றி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. இதை நன்கு உணர்ந்த சாந்தி தன் படிப்பில் மீது அதிக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் படிப்பு முடித்த உடனே நல்ல ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க, அப்பாவின் குடும்ப பாரத்தை அவரோடு சேர்ந்து தானும் சுமக்க ஆரம்பித்தால் சாந்தி.
ஒவ்வொரு மாதமும் தன் சம்பளத்தை பெற்றோர்கள் கையில் தரும்போது அவள் அடையும்ஆனந்தம அளவிடமுடியாதது்.
இனிமேல் இது முடியாமல் போகுமே!
அப்பா பாவம்... எப்படி தனியாக குடும்பத்தை சமாளிக்க போகிறார். அப்படி அவரை கஷ்டபடுத்திவிட்டு தான் கல்யாணம் செய்வது சரிதானா? தன் தங்கை ஆசையாக அவள் வயதிற்கு ஏற்ற பொருளை ஆசையுடன் தன்னிடம் கேட்கும் போது, எவ்வளவு ஆசையுடன் வாங்கி தந்தேன். இனி அவளுக்கு எப்படி நான் வாங்கிதர முடியும்.
சே... என நினைத்தவள் எப்போ தூங்கினால் என அவளுக்கே தெரியாது.
கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
தன் கணவன் ராஜேஷ் மாமனார் மாமியார் மைத்துனன் இப்படி எல்லோரும் தன்னுடன் மிக அன்பாக இருப்பதை பார்க்க மனதிற்கு சந்தோஷமாக இருந்தாலும்
மனம் என்னவோ தன் வீடு பெற்றோர்கள் தங்கை இவர்களையே சுற்றி சுற்றி வந்தது.
ஆயிற்று... கல்யாணம் ஆகி 1 மாதம் ஆனது. கல்யாணத்திற்கு பிறகு வாங்கும் முதல் சம்பளம்.
அப்பாவின் ஞாபகம் வந்தது.
பட்ஜெட் போடும் வழக்கமுடைய தந்தையை நினைத்தாள்.
தன்னோட வருமானத்தை வரவில் வைக்கும் அப்பாவிற்கு இந்த மாதம் அது முடியாது.
தன் வருமானம் இல்லாத குடும்ப பட்ஜெட்டை அப்பா எப்படி சமாளிக்க போகிறார்?
இதே சிந்தனையுடன் தன் கடமையை செய்ய ககிச்சனுள் நுழைந்தாள் சாந்தி.
சாந்தி இங்கே வா.... என கூப்பிட்ட தன் குரலை கேட்டு ஹாலுக்கு வந்தாள் சாந்தி.
சாந்தி, அப்பா உன்கூட பேசனுமாம்... என்றவுடன்
மாமனார் பார்த்தாள் சாந்தி.
ஏம்மா.... இந்த மாத சம்பளம் வந்துவிட்டதா? என கேட்ட மாமனாரை, ஒருவித மனகசப்போடு பார்த்த சாந்தி,
ம்.. ம்... என தாடையில் சொல்ல,
அப்போ முதல்ல அந்த பணத்தை உன் அப்பா பேங்க அக்கவுண்டுக்கு அனுப்பு.....
என்ற வரை ஒன்றும் புரியாமல் பார்த்த சாந்தியை, என்ன பாக்குற சாந்தி, இந்த முடிவை நம் கல்யாணத்திற்கு முன்பே நான் என் அப்பா என் அம்மா முடிவு செய்துவிட்டோம் என்று சொன்ன தன் கணவனை பார்த்து, என்ன சொல்றீங்க.....
என கேட்ட சாந்தியை பார்த்து அவள் மாமியார், இதோ பார் சாந்தி, பணம் என்பது நமது செளகரியத்துக்காகத்தான்.
கடவுள் கிருபையில் இவரும் அவனும் அளவிற்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள். எங்களுக்கு இவன் ஒரே பையன் தான். ஊர்ல வேறு சொத்து இருக்கு.
பெண் பார்க்க நாங்கள் வந்து போது என் பையனிடம் நீ தனியாக பேசும்போது உங்கள் கல்யாண வாழ்க்கையை பற்றி கூட அதிகம் பேசாமல் உன் குடும்பத்தை பற்றியும் உன் பொறுப்பை பற்றியும் நீ பேசியதை அவன் எங்களிடம் சொன்னான்.
தன் பெற்றோரையும் கூடப் பிறந்த தங்கையின் வாழ்க்கையை பற்றி யோசிக்கும் இந்த பெண்தான் நம் வீட்டின் வர லஷ்மி என்றும் அவள் குடும்பத்திற்கு தேவையான நல்ல நிலை வரும்வரை அவள் சம்பளத்தை அப்படியே உங்க அப்பா கிட்ட கொடுக்க சொன்னோம்.
இப்போ உனக்கு திருப்தி தானா சாந்தி....
மருமகள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதானம்மா...
இன்னொரு வீட்டில் மகளாக இருந்த நீ இந்த வீட்டிற்கு விளக்கு ஏற்ற வந்த குல மகள்!
தன் பெற்றோர்களின் முகத்தை மாமனார் மாமியார் முகத்தில் கண்ட சாந்தி, ஓடி போய் அவர்கள் காலில் விழுந்தாள்!
படித்ததற்கு நன்றி......