அது ஒரு பழமையான கோவில். அங்கே கூட்டம் அதிகம் இருப்பதில்லை. ஒரு வயதான அர்ச்சகர் அங்கே பூஜை செய்து வந்தார்.
ஒரு நாள் நான் கோவிலுக்குப் போனபோது அர்ச்சகரைத் தவிர வேறு யாருமே இல்லை. அவரிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது.
கோவிலுக்கு வருபவர்கள் கடவுளிடம் பலவிதமாக வேண்டிக் கொள்வார்கள் - பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்பதிலிருந்து, தொந்தரவு கொடுக்கும் தொழில் கூட்டாளி சீக்கிரமே மண்டையைப் போட வேண்டும் என்பது வரை பலவித வேண்டுதல்கள்!
இந்தக் கோவில் அர்ச்சகர் என்ன வேண்டிக் கொள்வார்? பக்கத்தில் வேறு யாரும் இல்லாததால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடமே கேட்டு விட்டேன் "சாமி, கடவுளிடம் நீங்கள் என்ன வேண்டிக் கொள்வீர்கள்?"
அவர் என்னைக் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார். பிறகு என்னிடம் சொல்லலாம் என்று தோன்றியதாலோ என்னவோ, "எனக்கு நீண்ட ஆயுளைக் கொடு என்று வேண்டிக் கொள்வேன்" என்றார்.
"நீங்கள் சொல்வது விசித்திரமாக இருக்கிறதே. உங்களைப் போன்று ஆன்மீகத்தில் ஆழ்ந்தவர்கள் இறைவன் அடி சேர வேண்டும் அதாவது சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்றுதானே வேண்டிக் கொள்வார்கள்?" என்று என் சிற்றறிவில் உதித்த புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்டேன்!
"நான்தான் இறைவன் அடி சேர்ந்து விட்டேனே!" என்றார் அர்ச்சகர்.
"என்ன சொல்கிறீர்கள்?" என்றேன் சற்றே பயத்துடன். 'இறைவனடி சேர்ந்து விட்டேனே' என்று அவர் சொன்னது என் முன்னே நின்ற அவர் உருவத்தைப் பற்றிச் சில கற்பனைகளை உருவாக்கி ஒரு கணம் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி மனதில் மெலிதாக ஒரு அச்சத்தை எழுப்பியது.
"இறைவன் அடி சேர்வது என்றால் என்ன? இறைவனின் திருவடிகளை நம் மனத்தில் இருத்திக் கொள்வது என்று பொருள். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் கோவிலில் நான் பூசை செய்து வருகிறேன்.
"தினமும் பல மணி நேரம் கடவுளின் சன்னிதியிலேயே இருந்ததில் அவரது திருவுருவம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அவர் திருவடியில் நான் செய்த கோடிக்கும் மேற்பட்ட அர்ச்சனைகள் அவரது திருவடிகளை என் மனதில் ஆழப் பதிய வைத்து விட்டன.
"நான் கோவிலில் இல்லாத நேரங்களிலும் என் மனக்கண்ணில் இறைவனின் திருவுருவும், திருவடிகளும்தான் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. இதை விட மேலான இறை அனுபவம் வேறு என்ன வேண்டும்? இந்த அனுபவத்தை இன்னும் பல காலம் நான் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?"
என்னை அறியாமல் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினேன்.
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.
பொருள்:
மலராகிய நம் மனதில் வந்து அமர்ந்திருக்கும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தவர்கள் இவ்வுலகில் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ('நிலமிசை நீடு வாழ்வார்' என்பதற்குப் பரிமேலழகர் 'வீடு என்கிற சொர்க்கத்தில் நிலையாக வாழ்வா'ர் என்று பொருள் கூறி இருக்கிறார்.)