லவ்வர் மூவி விமர்சனம்

By Mini Cini

ஒரு சிறந்த படமாக வரவேண்டிய படம் சில திரைக்கதை சொதப்பல்களால் சுமாரான படமாக வந்துவிட்டது.

 

வாழ்க்கையில் செட்டில் ஆகாத/முடியாத ஒரு காதலன், சந்தேக குணத்துடன் தன் காதலியை எப்படி எல்லாம் உளரீதியாக டார்ச்சர் செய்கிறான், அந்த உறவு என்ன ஆனது என்பது தான் கதை. 

 

தற்காலத்துக்கு தேவையான ஒரு கதை தான், படமாக்கிய விதம், நடிகர்களின் நடிப்பு அத்தனையும் நன்றாக இருந்தும் மிக சிறப்பாக வரவேண்டிய  இந்தப்படம் திரைக்கதையில் செய்த தவறுகளால் சுமாரான படமாகிவிட்டது.

 

இம்மாதிரியான சிறிய கதைகளை இரண்டரை மணி நேர படமாக எடுக்கக்கூடாது, படத்தை இரண்டுமணி நேரம் அல்லது இரண்டு மணி ஐந்து நிமிடங்களில் சுருக்கி இருக்க வேண்டும்.

 

இம்மாதிரியான படங்களில் ரோலர் கோஸ்டர் எஃபெக்ட் என்பது முக்கியமான ஒன்று. ரோலர் கோஸ்டர் எஃபெக்ட் என்பது ஒரு பிரச்சினை அது முறிவுக்கு செல்லும் போது சமாதானம் ஆவது மீண்டும் பிரச்சினை ஆவது. இந்திய குடும்பங்களில் கணவன் மனைவியிடையே இந்த ரோலர் கோஸ்டர் எஃபெக்ட் என்பது இயல்பாகவே உள்ளது. இதை சரியாகவே இயக்குனர் பயன்படுத்தி இருந்தாலும் சரியாக படத்தின் 90வது நிமிடத்தில் அடப்போங்க டா என அயர்ற்சியை உண்டாக்குகிறது. இதற்கு காரணம் படத்தின் முதல் இரண்டு நிமிடங்களிலேயே திரைக்கதையின் நாயகனின் போராட்டம் (Strugle) ஆரம்பித்து விடுவதால் படத்தின் தொடக்கம் (introduction) இல்லாததால் பார்வையாளர்களுக்கு கதையினுள் போவதற்கோ புரிந்து கொள்ளவோ நேரமே கிடைக்கவில்லை. 

 

நாயகனின் கோபத்தை, அவனுடைய நடத்தையை நியாயம் செய்யவோ நாயகிக்கு நாயகன் மீது காதல் கொள்ளவோ காதலை தொடரவோ செய்ய தேவையான எந்த நியாயமான காரணமும் இல்லாததால் எப்படா இவனை பிரேக்கப் செய்வாள் என்றே தோன்றுகிறது.

 

படத்தின் மிகப்பெரிய மைனஸ் கதாநாயகனின் நிலையில் கதை முடியும் வரை எந்த மாற்றமும்(transformation) இல்லை. கிளைமாக்ஸ்க்கு பின் காட்டப்படும் மாற்றம் ஒரு கிளிஷே மட்டுமேயொழிய படத்திற்கு அது எந்த விதத்திலும் உதவவில்லை.

 

கதையின் நாயகனாக மணிகண்டன் சிறப்பாக நடித்திருந்தாலும் அவரை பார்க்கும்போது காண்டாகிறதேயொழிய பரிதாப உணர்ச்சியோ நல்ல எண்ணமோ வரவில்லை. உளவியல் ரீதியாக கூட ஒரு நல்ல அழகான, அப்பர் மிடில்கிளாஸ் பொண்ணுக்கு இப்படி ஒரு லவ்வரா என படம் பார்ப்பவர்களின் உளவியல் அந்த கேரக்டர் மீது வெறுப்பை தான் தூண்டுகிறதேயொழிய பரிதாபத்தை அல்ல. குணா படத்தில் கமல் கேரக்டர் மீது பரிதாபம் ஏற்படாததால் தான் அந்தப்படம் வெற்றியடையவில்லை, ஆனால் அதே கதை கொண்டு எடுக்கப்பட்ட காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் கேரக்டர் மீது ஏற்படும் பரிதாபம் தான் அப்படத்தை வெற்றியடையச்செய்தது.

 

இயக்குனர்கள் திரைக்கதை எழுதிய உடனேயே ஷூட்டிங்கிற்கு செல்லாமல் கதையை சரிபார்க்க (validate) வேண்டும்.

.
மேலும்