பாடகர் கண்டசாலா உலக மாயத்தைப் பாடலில் வடித்த குரல்!

By Mini Cini

இசைப் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்தவர் கண்டசாலா வெங்கடேஷ்வர ராவ். சிறுவயதிலேயே இவருக்கு இசையின் மீது அபரிமிதமான ஈடுபாடு இருந்தது. விஜயநகரத்தில் இருந்த இசைப் பள்ளியில் முறையாக இசை படித்தார். கூடவே நாட்டுப்பற்றும் அபரிமிதமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் அனுபவித்தார். நாடு விடுதலை அடைந்த பிறகே இசையில் முழு மனதாக ஈடுபட்டார். அகில இந்திய வானொலி நிலையத்தில் சில இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ஹெச்எம்வி. இசைத் தட்டில் இவர் பாடிய பாடல் வெளியானது. முதன்முதலாக `லக்ஸ்மம்மா' என்னும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கண்டசாலாவுக்கு வந்தது.

பாதாள பைரவி’, ‘மாயக்குதிரை’, ‘லவகுசா’, ‘மாயா பஜார்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கண்டசாலாவின் நேர்த்தியான இசையும் காத்திரமான குரலிலான பாடல்களும் ரசிக நெஞ்சங்களை மகிழ்வித்தன. கண்டசாலாவின் இசைப் பயணம் தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து சகாப்தம் கண்டது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்திய கண்டசாலாவுக்கு ஐநா சபையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.கண்டசாலா பாடும் பாடல்களில், ஒரு பாடல் எத்தகைய உணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கிறதோ அந்த உணர்ச்சி அவரின் குரலிலும் உரிய முறையில் வெளிப்படும். இது எல்லா பாடகர்களிடமும் வெளிப்படும் பொது அம்சமாக இருந்தாலும் கண்டசாலாவின் வித்தியாசமான குரல் வளம்,

பொதுவான அம்சத்தின் உச்சமாக இருக்கும். குரலில் கிரீடம் சூடியவர் கண்டசாலா. அவர் பாடும் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளும் அநாயசமாக வெளிப்படும். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் கண்டசாலா. இசைத் துறையில் தன்னைவிட வயதில் சிறந்தவர்களை `நாயனா’, என்றும் `பாபு’ என்றும் வாஞ்சையோடு அழைப்பார் கண்டசாலா. பண்டிதர்களால் மட்டுமே பாடப்பட்டுவந்த பகவத் கீதை, தெலுங்கில் கண்டசாலாவின் குரலில் ஒலிக்கத் தொடங்கியதும் அதில் வெளிப்பட்ட உச்சரிப்பு நேர்த்தி, சாமானியர்களின் உதடுகளும் பாடும் வரிகளாகின.

கலைத் துறையில் ஈடுபடுவதும் அதில் நீடிப்பதும் மிகப் பெரிய சவால். ஆனால் அதிலும் தனக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு அதில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் வாழ்ந்தவர். அதனால் தனக்கு எவ்வளவு பெரிய புகழும் பணமும் கிடைப்பதாக இருந்தாலும் தான் வகுத்துக்கொண்ட கொள்கைகளிலிருந்து சிறிதும் விலகாமல் இருந்தவர்.

மாயா பஜார்' திரைப்படத்திற்கு இசையமைத்த சல்லூரி ராஜேஸ்வர ராவ், படத்திற்காக சில பாடல்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், ஏதோ சில காரணங்களுக்காக படத்திலிருந்து பாதியிலேயே விலகினார். இதைச் சற்றும் எதிர்பாராத படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சக்கரபாணியும் கே.வி.ரெட்டியும் திரைப்படத்தின் இசையமைப்பாளராக கண்டசாலாவைப் பொறுப்பேற்க கேட்டுக்கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட கண்டசாலா ஒரு நிபந்தனையும் விதித்தார். இந்தப் படத்துக்காக புதிதாக எத்தனை பாடல்களை வேண்டுமானாலும் உருவாக்கித் தருகிறேன். ஆனால் ஏற்கெனவே இன்னொரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களுக்கு மாற்றாக நான் இசையமைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் `சுவர்ண சுந்தரி’ எனும் திரைப்படத்தில் முகம்மது ரஃபி ஒரு பாடலைப் பாடியிருந்தார். அந்தப் பாடலுக்கு ரஃபியின் குரல் வளத்தில் ஏதோ நெருடலை உணர்ந்தார் லதா மங்கேஷ்கர். ஆகவே கண்டசாலவை அந்தக் குறிப்பிட்ட பாடலைப் பாடச் சொன்னார். ஆனால் கண்டசாலா, “ரஃபியின் மனம் இதனால் புண்படும். அதனால் நான் பாடமாட்டேன்” என்று லதாவின் கோரிக்கையை அன்பாக மறுத்துவிட்டார். வாய்ப்புகளுக்காக எதுவும் செய்வதற்குத் தயாராக இருக்கும் காலத்தில், இதுபோன்ற மிகவும் அரிதான பண்போடு திரைத் துறையில் கலையின் மாண்பைக் காத்ததுடன் சக கலைஞரின் மாண்பையும் குறைக்காமல் செயல்பட்டவர் கண்டசாலா.

திரைத் துறையில் பாடகராகத் தொடங்கிப் பல திரைப்படங்களைத் தயாரித்து, இசையமைப்பாளராகி பலருக்கும் இசை குருவாக விளங்கியவர் கண்டசாலா. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் துளு ஆகிய பல மொழிகளில் இவர் குரல் ஒலித்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணிப் பாடகராக வலம் வந்த கண்டசாலா, இசை மேதை எம்.பி.சீனிவாசனோடு இணைந்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்ததோடு, அதற்குத் தலைவராகவும் பதவி வகித்தவர். தனது இசையாலும் குரலாலும் லட்சக்கணக்கானவர்களை மகிழ்வித்த கண்டசாலா 52 வயதிலேயே மறைந்தார்.

.
மேலும்