இரண்டாவது முறை காதல் வருமா?

By saravanan

வரும் .. நிச்சயமாக .. ஆனால் முதல் காதல் போல் இருக்காது . முதல் காதல் செய்யும் போது உள்ளே ஏற்பட்ட உணர்வுகள் மற்றும் வெளியே செய்த செயல்பாடுகள் , இரண்டாம் காதலில் இருந்து வேறுபடும் .

முதல் காதல் கவிதை போன்றது . வழுவான மந்திரம் போன்றது . மாயம் செய்திருக்கும் .  யாரென்று தெரியாத ஒரு அந்நியனைக் கண்மூடித்தனமாக நம்ப வைத்திருக்கும் . அலைபேசியை அணைத்துக் கொண்டு தூங்க வைத்திருக்கும்.

பேசா மடந்தையைப் பாட வைத்திருக்கும் . நாம் அழகென்றும் , அந்த அழகை விரசமின்றி ஒரு அந்நிய ஆணின் கண்களால் இரசிக்க முடியும் என்று அறிய வைத்திருக்கும்.

பக்குவமான பெண் என்ற பெயரெடுத்தவளைக் குழந்தை போல் குறும்பு செய்யவும் ,அடம் பிடிக்கவும் வைத்திருக்கும். தனியாக சிரிக்க வைத்திருக்கும் . கண்ணாடி பார்க்கும் போது காதுகள் சூடேறி கன்னக்கதுப்புகளைக் காரணமின்றி சிவக்க வைத்திருக்கும்.

பொருந்தப் பொய் பேச வைத்திருக்கும். கண்களின் கீழ் இருந்த கருவளையங்கள் கவலை தராமல் களிப்பில் ஆழ்ந்திருக்கும்.

தன் வயதொத்த ஒருவரின் பசியும் சோர்வும் தரும் தவிப்பு தனக்குள் இருந்த தாய்மையை உணர வைத்திருக்கும். கருப்புப் சட்டையும் , கண்கள் சுருங்க சிரிக்கும் சிரிப்பும் , கள்ளப்பார்வை கொண்டு இரசிக்க கற்றுக் கொடுத்திருக்கும்.

அன்பார்ந்த விளிப்புகள் ஒரு அடி உயரம் கூடிய உணர்வு தந்திருக்கும். திரைப்படப் பாடல் எல்லாம் எனக்காகவே என்று எண்ண வைத்திருக்கும்.

குரலும் மணமும் டோபமைன்,செரடோனின் சுரக்க வைத்திருக்கும்,பாகாய் உருக வைத்திருக்கும் .  வழித்துணையாய் வருகிறேன் என்று மறுக்க மறுக்க ஐநூறு கிலோமீட்டரோ ஐந்து கிலோமீட்டரோ உடன் வந்த வேளைகள் , கனவிலும் காணாத இனிமையை நிஜத்தில் நிறைத்திருக்கும்.

நமது "பேசமாட்டேன்" என்ற ஒற்றை வார்த்தையும் ஒரு சொட்டு கண்ணீரும் எதற்கும் அசராத ஒருவரைக் கைப்பாவையாக மாற்றும் திறன் கண்டு வியக்கவைத்திருக்கும்.

ஒரு அழைபேசி அழைப்பு நிராகரிப்பு கூட அழ வைத்திருக்கும். அதிர்ந்து பேசிப் பழக்கமற்ற நமக்கு அறிமுகமில்லாத ஒருத்தி மீது அர்த்தமற்ற கோபம் வந்து சண்டை போட தூண்டி இருக்கும்.

ஒரே நேரத்தில் கண்களுக்குள் வைத்து தாங்கிக்கொள்ளவும் , கைகளுக்குள் புகுந்து மறைந்து கொள்ளவும் தோன்ற வைத்திருக்கும். முதல் காதல் கவிதை என்றால் இரண்டாவது காதல் இலக்கியம்…

முதல் காதல் அழகானது தான் . இரண்டாவது அர்த்தமும் உடையது. முதல் காதல் அடுத்த படி என்ன என்று தெரியாத சுவாரசியமான வீடியோ கேம் . இரண்டாவது முழுமையாக வழி தெரிந்து கொண்டு செல்லும் பயணம் .

முதல் காதல் குழந்தையின் மழலை மொழி, இரண்டாம் காதல் தமிழறிஞர் உரை . கண்ணைக் கட்டிக் கொண்டு ஒருவர் பின்னால் போக நினைக்கும் முதல் காதல் .. ஒருவர் கைகள் கோர்த்து காலம் முழுவதும் வாழ நினைக்கும் இரண்டாம் காதல் .

முதல் காதல் கேளிக்கை பூங்காவில் சாகசங்கள் என்றால் இரண்டாவது மெல்லிய இசையோடு கூடிய இயற்கையின் எழில். மனிதனின் மனதில் எண்ணவோட்டங்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஒருவர் மீதே இரண்டு முறை காதல் வரும் . முதல் காதல் என்பது பால் பற்கள் போல் ,அது விழுந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக நிரந்தர பற்கள் முளைக்கும் . அதே போல்தான் காதலும் .

முதல் காதலின் மாயவலை அறுந்த பின்னர் மீண்டும் நிஜத்தில் ஒரு காதல் இருவருக்கும் உறுதியாக வரவேண்டும். அந்த உறுதியான காதல் ஒருவருக்கு வராது போனாலும் அந்த உறவு நீடிக்காது. அப்போது இரண்டாம் முறை வேறு ஒரு காதல் வருவது இயற்கை . நிரந்தர பற்கள் பால் பற்கள் இருந்த இடத்தில் இருந்து மாறி முளைத்தாலும் உறுதியாக இருக்கும் .

அதனால் இரண்டாம் முறை காதல் வரும் , அதில் தவறேதும் இல்லை.

.
மேலும்