நடிகைகளின் கதை!

By News Room

யுவகிருஷ்ணா  எழுதிய 'நடிகைகளின் கதை'  புத்தகம் படித்து முடித்தேன். பலவிதமான உணர்வுகளை புத்தகம் .எழுப்பியது. ஒரு புத்தக முன்னுரையில் பாலு மகேந்திரா எழுதிய வாசகம் நினைவுக்கு வந்தது. '' கலைஞர்கள் எரி நட்சத்திரம் போன்றவர்கள். மிக பிரகாசமாக எரிந்து  வந்த தடத்தை விட்டுவிட்டு கீழே விழுந்துவிடுவார்கள்’’ என்பது அந்த வாசகம் . இதில் இடம் பெற்றிருக்கும் பல நடிகைகளின் வாழ்க்கையை பார்க்கும் போது அவரது வாசகம் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது.

முதல்  பகுதியாக   நடிகை ஷகிலாவின் நேர்காணல்  உள்ளது. அவர் இந்த புகழை பெறுவதற்காக வாழ்க்கையில் இழந்த விஷயங்களை கவலையுடன் பட்டியலிடுகிறார். புத்தகத்தின் இறுதியான கட்டுரையாக சில்க் ஸ்மிதாவின்  பழைய பேட்டி ஒன்றை மீள்பிரசுரம் செய்து இருக்கிறார்கள். சில்க் தான் வாழும் காலத்தில் எவ்வளவு கெத்தாக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு இந்த பேட்டியே சிறந்த உதாரணம் . அவரது மரணமும் இன்றளவும் மர்மமாக தான் நீடிக்கிறது.

பல நடிகைகளின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களுக்கு அருகே கொண்டு இந்த புத்தகம் நிறுத்துகிறது. எடுத்துக்காட்டாக எழுபதுகளின் இந்தி சினிமாவின் கனவுக்கன்னி பர்வீன் பாபி மெதுமெதுவாக மரணத்தை நோக்கி சென்றது துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

20 வயதுக்குள்ளே டோலிவுட்டையும், பாலிவுட்டையும் கலக்கிய திவ்யபாரதியின் மரணம் நடிகைகளின் துயர்மிகு வாழ்க்கைக்கு இன்னொரு உதாரணம்.தொண்ணூறுகளில் கனவுக்கன்னியாக இருந்த மம்தா குல்கர்னி , மாபிஃயாக்களின் கையில் மாட்டுவதையும் அவரை பற்றிய கட்டுரை அப்பட்டமாக விவரிக்கிறது.

இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை  கவர்ச்சிபுயல்  அனு அகர்வால் பற்றியது. அவர் திருடா திருடா படத்தில் நடித்ததையும் நாம் அறிவோம். அவர் அறிமுகமான காலகட்டத்தில் இந்தியாவின் செக்ஸ் சிம்பலாக கொண்டாடினார்கள். சில ஹாலிவுட் பட வாய்ப்புகள் கூட அவருக்கு வந்தன. அப்படி நடித்த ஒரு படத்தில் அவர் காட்டிய கிளாமரே பின்பு அவருக்கு அது மாதிரியான படங்கள் அதுவும் பி கிரேட் படங்கள் மட்டும் வர காரணமாக அமைந்தன.

சில காலங்கள் கழித்து அனு அகர்வால் எங்கு போனார்? எனத் தெரியவில்லை. நான் கல்லூரி படிக்கும் காலங்களில் அவர் இறந்துவிட்டதாக கூட வதந்திகள் உண்டு. ஆனால் அவர் உயிருக்கு ஆபத்தான ஒரு விபத்தில் மாட்டி மீண்டு இருக்கிறார். இப்போது யோகா ஆசிரியராக பீஹாரில் பணிபுரிகிறார் என்ற தகவலை அவரை பற்றிய கட்டுரை மூலமாக தெரிந்துகொண்டேன்.

நடிகையாகவும், மாடலாகவும் இருந்து பிற்காலத்தில் சோபிக்காமல் போன லிசா ரே, பூஜா பத்ரா இருவரை பற்றிய கட்டுரையை இந்த புத்தகத்தில் எதிர்பார்த்தேன்.  அது இல்லாதது சற்று ஏமாற்றம் தான். பூஜா பத்ரா எல்லா திறமைகளும் இருந்து பாலிவுட்டால் கண்டுகொள்ளாமல் போய் கடைசியாக பி கிரேட் படங்களில் நடித்து ஓய்ந்தவர். லிசா ரே மாடலாக இருந்து பின்பு ஹாலிவுட் படங்கள் வரை செய்தவர்.

கேன்சரை போராடி வென்றவர். மற்றபடி இந்த புத்தகம் பல நடிகைகளின் வாழ்க்கையின் துயர் தரும் பக்கங்களையும், அவர்களின் வெற்றிகள், தோல்விகள், சறுக்கல்கள் அனைத்தையும் எந்த பாவனைகளுமின்றி பதிவு செய்திருக்கிறது. யுவகிருஷ்ணா இதில் எழுதியிருக்கும் மொழி பாராட்டுக்குரியது. தங்கு தடைகள் எதுவுமின்றி ஒரே மூச்சில் வாசிக்கும் படி உள்ளது. கட்டுரைகளுக்கு உரித்தான நடையும், புனைகதைகளுக்கு உரித்தான சம்பவங்களையும் சமமாக கலந்து கட்டுரைகள் அமைந்திருப்பது வாசிப்பு சுவரஸ்யத்தை கூட்டுகிறது.

நடிகைகளின் கதை கட்டுரைகள் யுவகிருஷ்ணா/ சூரியன் பதிப்பகம்  விலை 150 ரூபாய்

.
மேலும்