காமத்திப்பூ - பெண்களின் அகவுணர்வுகள்!

By saravanan

எழுத்தாளர்: சுகிர்தாரணி காலச்சுவடு பதிப்பகம்

மனிதனின் உள்ளத்து உணர்வுகளை சிறு சிறு கச்சிதமான சொல்லாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் கலையாக கவிதை இலக்கியம் இருக்கிறது.. கவிஞர் சுகிர்தாரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுகிறார்.. நாம் வாழும் சமூக சூழலில் பெண்களின் அகவுணர்வுகள், ஆசைகள், தாபம், காதல், காமம் இவற்றை வெளிப்படுத்த காலம் காலமாய் கட்டுப்பாடுகள் உண்டு.. "காமத்திப்பூ" என்ற இவருடைய கவிதை தொகுப்பில் மிக நுணுக்கமாக பேசப்படும் உடல் அரசியல் அட்டகாசமாக, அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

"தேங்கி கிடக்கும் காதலை எப்படி அடைவது மிதந்து கொண்டிருக்கும் காமத்தை பருகாமல்!"

மூன்று வரிகளில் அடங்கும் இந்த முதல் கவிதை சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது.. பெண்ணின் உடல் புனிதமாக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது.. அவளின் அந்த உடல் சார்ந்த , காமம் சார்ந்த தாபம் பற்றி என்றுமே யாருக்குமே அக்கறை இருந்திருக்குமா என தெரியவில்லை.

சமூகத்தைப் (ஆணை) பொறுத்த வரையில் அவள் உடல் ஒரு போகப்பொருள்.. அப்படி இருக்கையில் மிதந்து கொண்டிருக்கும் காமத்தை பருகாமல் காதலை அடைவது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கிறார்.. பொதுவெளியில் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை இப்படி மூன்றே வரிகளில் போட்டு உடைத்த கவிஞருக்கு ஒரு சபாஷ் போடலாம்..

காமம் என்ற வார்த்தையை பொதுவெளியில் உபயோகிப்பது பெண்களைப் பொறுத்தவரையில் அசிங்கம், அப்படி பேசும் பெண்கள் தரங்கெட்டவர்கள் என்ற நிலையில் இருக்கும்போது, ஆண் பெண் இருவரின் கூடலுக்குப் பிறகு திருப்தியடையாத பெண்ணின் மனதை போட்டு உடைக்கிறார் இந்த வரிகளில்..

"பறந்து கொண்டே எச்சமிடும் பறவையின் கடும் அலட்சியத்தை போல படுக்கையின் நீண்ட சமவெளியில் தன் உடலை கிடத்துகிறான் திமில்களில் நீரை சேமித்து வைத்திருக்கும் ஒட்டகம் தன் கண்ணெதிரே பாயும் நீரை அசட்டையுடன் கடந்தேகுவதை போல அவன் உடலை கடக்கவே விரும்புகிறேன் ஆயினும் அவன் மார்பின் அடர்ந்த காடுகள் மழை மேகத்தை உண்டு பண்ண காமத்தின் கூத்தை ஒற்றை ஆளாய் ஆடி முடிக்கிறேன்"

மாதவிலக்கு காலமும், குழந்தைகளுக்கு பாலூட்டும் முலைகளின் வலியும் பெண் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல என்பதை உணராத ஆண்களை சாபம் இடுகிறார் கவிஞர்.. இவரின் சொற் கையாடல் என்னை மலைத்துவிட செய்கிறது.

".....பெருகியிருக்கும் நம் சந்ததிகளின் நமுட்டு வாய்களில் ஊறிக் கொண்டிருக்கும் என் முலைகள் எப்போதும் பால் சுரப்பை உள்ளெழுத்துக்கொள்வது இல்லை என்பதை நீ அறியாத ஒரு கணத்தில் மூடப்படும் தீயின் கங்குகள் என் கருவின் நாளங்களை ஊதி வெடித்து ரணமாக்குகின்றன......... .... இளம் குழந்தையின் நினைவு தப்பிய இதயத்தில் இருந்து சாபமிடுகிறேன் உன்னுடைய மலட்டு முலைகள் உதிரக் கடவது."

தன் உடலை கொண்டு பிழைக்கும் ஒரு விலைமாதுவின் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஒரு கவிதை "நாட்காட்டி தேவைப்படாத எனதறை". அவளின் உள்ளக் குமுறல்களை தாங்கிய வரிகளின் கணம் சில மணி நேரங்களை அதிலேயே தொக்கிக் கொண்டிருக்க வைத்தது.. .... உடலை பருகக் கொடுப்பதற்கும் காலத்தை அறிந்து கொள்வதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்....

...... அவர்கள் என் ஆடைகளை களையும் போது வெட்கப்படுவது போலவும் உச்சத்தில் முனகுவது போலவும் நான் பாவனை செய்தாக வேண்டும்....... ......... கன்றிச் சிவந்த பற்காயங்களில் அவர்களின் நுரைத்துப் பொங்கும் விந்துவை உறைய வைக்கிறார்கள்.......... ..... கீழரையில் உறங்கும் எனதிரு குழந்தைகளுக்கு எந்த அனுபவத்தை போதிப்பது மிருகங்களோடு பழகுவது குறித்தும் அவற்றை பழக்குவது குறித்தும் சொல்வது எளிது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்னுடைய குழந்தைகள்தான் அடிக்கடி நச்சரிக்கிறார்கள் நாள்காட்டி தேவைப்படாத எனது அறையில் சிதறி கிடக்கும் ஆணுறைகளை ஊதித்தரச் சொல்லி.

காதலையும் காதலர்கள் கடந்து வரும் இன்பமான நிமிடங்களையும் வாசிப்பவர்களுக்குள் கடத்திவிடுகிறது "ஓராயிரம் குறுவாள்கள்" தலைப்பிடப்பட்ட கவிதை.. காதலர்களுக்கு தாங்கள் தனித்திருக்கும் நிமிடங்களில் அவர்களின் தொடுதல்கள் ஓராயிரம் குறுவாள்கள் போல இன்பமாய் குத்துகிறதாம்.. இனிமையான வரிகள்..

"ஒரு தொடுதலில் உயிர் உருக்கும் வித்தை வியப்பில் ஆழ்த்துகிறது வெகுநேரம் நம்மை பரிமாறிக் கொண்டு திரும்புகையில் உன்னுள்ளும் என்னுள்ளும் தளும்புகின்றன ஓராயிரம் குறுவாள்கள்."

காதல் உணர்வுகளை அட்டகாசமாக வெளிப்படுத்தும் இன்னொரு கவிதையும் இருக்கிறது.. ஒரு பெண்ணின் காதலையும் காமத்தையும் இவ்வளவு வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்.. "இடப்புறத் திருப்பம்" என்ற கவிதையைப் படிக்கும் போது அந்த காதல் பரவசம் தீண்டத் தான் செய்கிறது.. ஆனால் முடிவு என்னவோ அந்த பெண்ணின் முற்று பெறாத தாபத்தை கனவுபோல் காட்டி ஒட்டுமொத்த பெண்களின் ஏக்கமாக இறக்கி வைக்கிறார்..

..... இருவருக்கிடையே மௌனம் பேருருக் கொள்ளக் கொள்ள வார்த்தைகள் கரைந்தபடி இருந்தன சிறகு கோதியபோது உதிர்ந்த ஒற்றை இறகின் மென்மையோடு மழை கசிய ஆரம்பித்தது உணர்வற்று உயிர் வழிய நிற்கையில் அவன் முத்தத்தை பருக தந்தான் மது கோப்பையின் பனிக்கட்டியாய் மிதந்த உடலை பற்றியிழுத்துப் பரவசத்தை மூளைக்குள் கிடத்தினேன் மரித்தலின் கணமும் இதுதானோ காதலின் உப்பைச் சுவைத்துக் கண் விழித்துப் பார்க்கிறேன் பாலையின் இடப்புற திருப்பத்தில் அவன் காணாமல் போயிருந்தான்.

வெந்து தணியாத பசலை, மதுவின் வாசனை, எதுவும் மற்ற சொல் போன்ற கவிதைகள் எல்லாம் ஏதேதோ காரணங்களுக்காக பெண்ணை விட்டு விலகி சென்ற காதலன் பிரிவு ஏற்படுத்தும் ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன..

"அருகில் இருக்கும் தாழைப்புதரில் இருந்து வெளி கிளம்பும் வாசனையால் பித்துப் பிடித்தவள் போலாகிறேன் துன்பத்தை பகிர இயலாதது அதைவிடக் கொடியது எந்தன் கழிப்படர் காமமும் உயிரிலிருந்து விலகி நிற்பதை எந்த ஓலையில் எழுதி வைப்பேன் பிரிந்து சென்றவன் வாராதொழிவானோ நிமித்தமின்றி வானம் இருள்கிறது அவ்விடத்திலிருந்து அகல்கிறேன் வெந்து தணியாத பசலையை என் உடலுக்குள் இறுக்கியபடி."

ஒவ்வொரு கவிதையையும் படிக்கும் போது எவ்வளவு மனத்தைரியம் கொண்ட பெண்ணாக இருக்கிறார் கவிஞர் என்று சொல்ல வைக்கிறது.. அனைத்து கவிதைகளின் கருப்பொருளும் ஒரு பெண்ணின் காதல், காமத்தின் போதாமையைப் பேசுகிறது.. பெண்ணின் உடலை போகப் பொருளாக மட்டும் நினைக்கும் ஆண்கள் உணர வேண்டிய பெண்களின் மன உளவியலை பேசுகிறது..  

எதையெல்லாம் கற்பு நெறி என்றும் ஒழுக்கம் என்றும் பெண்கள் தன் உடல் இச்சைகளை பேசக்கூடாது என்று வரையறுக்கப்பட்டதோ அத்தனையையும் பேசுகிறது.. பரிந்துரைக்கப்பட்ட பாரம்பரிய விழுமியங்களை உடைத்தெறிந்து வெளிப்படையாக இவரின் ஒவ்வொரு கவிதைகளும் இருக்கிறது...

.
மேலும்