கோவில்வெண்ணி கரும்பேசுவரர் திருக்கோவில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்

By Tejas

திருஞான சம்பந்தரும், அப்பர் பெருமானும் ஒரு தலத்தைப் பற்றி பதிகம் பாடியுள்ளனர் என்றால், அது அவர்கள் வாழ்ந்த காலமாகிய நூற்றாண்டுக்கு முன் பிருந்தே சிறப்புற்று விளங்கிக் கொண்டிருக்கும் தலம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

 

அப்படி ஒரு சிறப்பு மிக்க தலம்தான் கோவில்வெண்ணி கரும்பேசுவரர் திருக்கோவில்.

 

வினைதீர்க்கும் வெண்ணித் தொன்னகர், வெண்ணியூர் என்று அழைக்கப்பட்ட ஊர், இன்று கோவில் வெண்ணி என்ற சிற்றூராக இருக்கிறது.

 

கி.பி. முதலாம் நூற்றாண்டில் சோழ வளநாட்டை ஆண்ட மன்னன் கரிகால் பெருவளத்தான், 16 வயது இளைஞனாக இருந்தபோதே அரியணை ஏறினான். மேலும் சேர, பாண்டிய மன்னர்களோடு, 11 வேளிர்குல சிற்றரசர்களையும் வென்று பேரரசனாக முடி சூட்டிக்கொண்டான்.

 

அவன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்ட இடம், ‘வெண்ணிப்பறந்தலை’ என்று இலக்கியங்களால் புகழப்பட்ட இன்றைய கோவில்வெண்ணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

பழங்காலத்தில் இந்தத் தலம் இருந்த இடம் கரும்புக் காடாக இருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரையாக இங்கு வந்தனர். அப்போது கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனி இருப்பதை கண்டு அதனை பூஜித்து வழிபட்டனர். 

 

அவர்களில் ஒருவர், இங்குள்ள தல விருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவட்டம் என்றும் வாதிட்டனர். 

 

அப்போது இறைவன் அசரீரியாக தோன்றி, ‘எனது பெயரில் கரும்பும், தல விருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்’ என்று அருளினார். அன்று முதல் இத்தல இறைவன் கரும்பேசுவரர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

 

பெயருக்கு ஏற்றாற்போலவே, சுயம்பு உருவான இத்தல லிங்கத்திருமேனியின் பாணத்தில், கரும்பு கட்டாக இருப்பது போன்ற தோற்றத்தில் மேடு பள்ளமாக காட்சி தருவது பெரும் சிறப்பம்சமாகும்.

 

இறைவனின் பெயர் கரும்பேசுவரர் சரி.. அது என்ன வெண்ணி...

 

வெண்ணி என்பது வெண்ணிற மலர்கள் பூக்கும் நந்தியாவட்டம் செடியாகும். இதுதான் இத்திருக்கோவிலின் தல விருட்சமாகும். சிவனுக்குரிய அர்ச்சனை மலர்களில் மிக முக்கியமானது இந்த மலர்.

 

சுவாமியின் பெயரும், ஊரின் பெயரும் மலரின் பெயராலேயே ‘வெண்ணி’ என்று அமைந்திருப்பது, தாவரங்களுக்கும் தமிழர்கள் கொடுத்த தனித்துவமாகும்.

 

விண்ணவர்கள் கூட தொழும் வெண்ணி கரும்பேசுவரர் கோவிலுக்கு, கோவில்வெண்ணி பஸ் நிலையத்தில் இருந்து நடந்தேசெல்லலாம். பசுமையான கரும்புக்காடும், நெல் வயல் களும் சூழ்ந்த வழியே செல்லும்போது, ஒரு மரத்தடியில் கரிகாலன் இங்கு நடந்த போரின் போது வழிபட்டதாகச் சொல்லப்படும் பிடாரி அம்மன் திருஉருவம் காணப்படுகிறது. அதற்கு ஒரு வீர வணக்கம் செலுத்தி சற்றுதூரம் சென்றால் தீர்த்தகுளம் உள்ளது.

 

அதன் எதிரே மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் நம்மை வரவேற்கிறது. கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன.

 

கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் வெண்ணிக் கரும்பேசுவரர் அருள்பாலிக்கிறார். அதே பெருமண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் சவுந்தர நாயகி என்னும் அழகிய அம்மை நின்ற கோலத்தி காட்சி தருகிறார். இறைவன் சன்னிதிக்கும், இறைவி சன்னிதிக்கு இடையே நடராஜ சபை இருக்கிறது. 

 

இத்தல அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. கோவில் இருக்கும் ஊர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களில் திருமணமாகி கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தங்களுக்கு வளைகாப்பு முடிந்ததும், கொஞ்சம் வளையல்களை எடுத்து வந்து அம்மனின் சன்னிதிக்கு எதிரே கட்டி விட்டு, தமக்கு பிரசவம் எளிதாக நடக்க வேண்டும் என்று வேண்டிச் செல்கின்றனர். 

 

சர்க்கரை நோய் :

 

சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், வெண்ணி கரும்பேசுவரர் சன்னிதிக்கு வந்து, வெள்ளை சர்க்கரையும், ரவையும் கலந்து, பிரகாரத்தைச் சுற்றி போட்டு விட்டு வலம் வர வேண்டும். 

 

அதனை எறும்புகள் சாப்பிட்டு விடுவதால், போட்ட சர்க்கரை காணாமல் போனது போல, நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயும்நீங்கி விடும் என்பது இந்த ஆலயத்தின் ஐதீகமாக உள்ளது. 

 

பிறகு 18 அல்லது 24 அல்லது 48 முறை கோவிலை வலம் வந்து, வெண்ணி கரும்பேசுவரருக்கும் அழகிய நாயகி அம்பிகைக்கும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மிகவும் பழமை வாய்ந்த இத்தலத்து இறைவனை, 4 யுகங்களிலும் பலரும் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. பங்குனி மாதத்தில் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள், சிவனின் திருமேனி மீது சூரியஒளி படர்ந்து சூரிய பூஜை நடத்துகிறது.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், தஞ்சாவூரில் இருந்து செல்லும் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்கு கிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கோவில்வெண்ணி திருத்தலம். இந்த இடத்திற்கு தனி பஸ்நிலையமும், ரெயில் நிலையமும் இருக்கிறது.

.
மேலும்