திருமாலே அருவமாக தினமும் வந்து தாயம் விளையாடும் கோவில்?

By News Room

ஏழுமலைகள் ஏறிச் சென்று அந்த “ஸ்ரீநிவாஸனை” தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை அந்த திருமலை வாசன் வழங்குவதை நாம் அறிவோம். அப்படி தன் மீது உண்மையான பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தூய பக்தியின் மேன்மையை எல்லோரும் அறிய அந்த வேங்கடவன் ஆடிய திருவிளையாடல்கள் பல உண்டு. அப்படியான ஒரு உண்மை பக்தரின் கதை தான் இது.

வட இந்தியாவில் பிறந்தவரான 'ஆசா ராம்' என்ற துறவி இவ்வேழுமலையான் கோவிலுக்கு வந்து அவரை தரிசித்த போது, அவர் மீது ஏற்பட்ட தீவிர பக்தியின் காரணமாக திருமலையிலேயே மடம் அமைத்து தங்கி ஏழுமலையானை வழிபட்டு வந்தார்.

கோவிலுக்கு ஒருநாளில் பலமுறை வந்து இவர் ஏழுமலையானை தரிசித்ததால் எரிச்சலடைந்த அர்ச்சகர்கள் இவரை கோவிலுக்குள் அதன் பின் நுழையாதவாறு தடுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த ஆசா ராம் தன் மடத்திற்கு திரும்பினார். ஆசா ராமின் பக்திக்கு மனமிறங்கிய ஸ்ரீநிவாசன் அன்றிரவு ஆசா ராமின் மடத்திற்கே சென்று அவருக்கு காட்சி தந்தார். இதைக் கண்டு ஆசா ராம் பேரானந்தம் அடைந்தார். மேலும் ஆசா ராமுடன் பொழுதைக் கழிக்க விரும்பிய பெருமாள் அவருடன் தாயம் விளையாட்டையும் ஆடினார்.

இந்நிகழ்வு தினமும் நடைபெற தொடங்கியது. ஒருமுறை ஆசா ராமுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்த வெங்கடேசப்பெருமாள் அதிக நேரம் கடந்து விட்டதை எண்ணி, தன் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க அவசரமாக தான் செல்ல வேண்டியிருப்பதாக ஆசா ராமிடம் விடைப் பெற்று தன் இருப்பிடமான 'ஆனந்த நிலையம்' திரும்பினார்.

அப்படி அவர் போகும் போது தன் வைரத் தோடு ஒன்றை ஆசா ராமின் மடத்திலேயே தவற விட்டுச் சென்றார். மறுநாள் கருவறை நடை திறந்து பெருமாளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கிய அர்ச்சகர்கள் பெருமாளின் வைரத்தோடு ஒன்று இல்லாததைக் கண்டு அதிர்ந்தனர்.

எல்லா இடத்தில் தேடியபின் இறுதியில் அது ஆசா ராமின் மடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ஆசா ராம் தான் அதைத் திருடினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு மன்னர் முன்பு நிறுத்தப்பட்டார். மன்னரும் இவரைச் சிறையிலடைத்து 1000 கரும்புகளை இவர் ஒரே இரவில் தின்று முடிக்க வேண்டுமென்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பின்படி ஆசா ராம் சிறையிலடைக்கப்பட்டு அவர் உண்ண 1000 கரும்புகளும் கொடுக்கப்பட்டது. இதெல்லாம் அந்த ஏழுமலையானின் திருவிளையாடல் என்றெண்ணி அவரைப் பிராத்தித்தார் ஆசா ராம். அப்போது அவர் இருந்த அறையில் ஒரு யானை தோன்றி அந்த  கரும்புகளையெல்லாம் தின்று மறைந்தது. மறுநாள் காலை ஆசா ராம் சிறை வைக்கப்பட்ட அறைக்கு வந்த மன்னன் கரும்புகலெல்லாம் தின்று முடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தான். ஆசா ராமின் தவசக்தியை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

அப்போது அங்கே அனைவருக்கும் காட்சி தந்த பெருமாள் தான் ஆசா ராமின் பக்திக்கு இறங்கி ஆசா ராமுடன் தினமும் தாயம் விளையாடியதாகவும், அப்போது ஒரு சமயம் கிளம்பும் அவசரத்தில் தானே தன்னுடைய வைரத்தோடை ஆசா ராமின் மடத்தில் தவற விட்டதாகவும், ஆசா ராம் குற்றமற்றவர் என்றும் கூறினார்.

இதைக் கண்ட அங்கிருந்தோர்கள் அனைவரும் ஆசா ராமின் பக்தியை மெச்சினர். பெருமாளே இவருக்காக யானை உரு கொண்டு வந்து உதவியதால் வடமொழியில் யானை என்பதற்கான வார்த்தை “ஹாத்தி” இவரது பெயரான “ராமுடன்” சேர்த்து “ஹாத்தி ராம் பாபா” என்றழைக்கப்பட்டார்.

இத்திருமலையிலேயே சமாதி அடைந்துவிட்ட பாபாவுடன் திருமால் இன்றும் அருவமாக தாயம் விளையாடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மடத்திலிருக்கும் ஒரு அறையில் இரவு நேரங்களில் தாயம் விளையாட்டுப்பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த அறைப் பூட்டப்பட்டு, அனைவரும் வெளியேறிவிடுவதாகவும், மறுநாள் காலை அந்த அறை திறக்கப்படும் போது அங்கு தாயம் விளையாடப்பட்ட அறிகுறிகள் இருப்பதை எண்ணி பக்தர்கள் மெய்சிலிர்க்கின்றனர்.

.
மேலும்