வாஸ்து தோஷ நிவர்த்தி தலம் - சொந்த வீடு யோகம் தரும் வீரட்டானேசுவரர்!
அட்டவீரட்ட தலங்களில் 5 வது தலம் திருவிற்குடி . திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் இருவரால் பாடல் பெற்ற தலம் இது. திருஞானசம்பந்தர் பதிகம்... வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர் விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம் அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே.
மனிதர்கள் செய்யக்கூடிய தீய வினைகளில் இருந்து பக்தர்களைக் காப்பவர் சிவபெருமான் என ஆன்மீகம் கூறுகிறது. அப்படி தீய வினைகளைத் தீர்க்கக்கூடிய திருத்தலமாக விளங்கக்கூடியது விற்குடியில் உள்ள வீரட்டானேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயில் நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் அமைந்துள்ளது.
கோயில் சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ள இந்த கோயில் எதிரே சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் குறிப்பாக நாகலிங்க சிற்பம் ஒன்று உள்ளது. அந்த சிற்பம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். உள் பிரகாரத்தில் வலது புறமாக மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனி பகவான் உள்ளிட்டோர் காட்சியளிக்கின்றனர்.
மேலும் நவகிரகங்கள், சந்திரன், சூரியன், பைரவர், ஞான தீர்த்தம் என அழைக்கப்படும் கிணறு உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் தினமும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த கோயிலில் வழிபட்டால் சொந்த வீடு வாங்குவதற்கான பாக்கியம் கிடைக்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கும் பொழுது தடைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, கல் ஒன்று எடுத்துச் சென்று இந்த கோயிலில் வழிபட்டு விட்டு அந்த கல்லை வைத்து வீடு கட்ட தொடங்கினால் எந்த தடைகளும் ஏற்படாது என கூறப்படுகிறது.
பித்ரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.
இந்த கோயிலில் அம்மனாகப் பரிமள நாயகி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோயிலின் தலை விருட்சமாகத் துளசி விளங்குகிறது. மேலும் இது வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகப் போற்றப்படுகிறது.
தேவர்களின் தலைவன் இந்திரன் ஒருசமயம் கயிலை மலை வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முதியவர் வேடம் தாங்கி வழியில் நின்று கொண்டிருந்தார். தான் வருவதை அறிந்தும், ஒரு முதியவர் வழியில் நிற்பதை உணர்ந்த இந்திரன், அவர் மீது கோபம் கொண்டு அவர் மீது வச்சிராயுதத்தை ஏவினார். ஆனால், வச்சிராயுதம், பொடிப் பொடியாக விழுந்தது.
வச்சிராயுதத்தை ஒருவர் பொடியாக்கிவிட்டார் என்றால், அவர் நிச்சயமாக சாதாரணமானவராக இருக்க முடியாது. தான் சென்ற வழியில் குறுக்கே நின்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த இந்திரன், அவரிடம் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்து விட்டதாக, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். சிவபெருமானும் இந்திரனை மன்னித்தருளினார்.
இந்திரன் சிவபெருமானை வச்சிராயுதத்தால் தாக்கிய சமயம், ஏற்பட்ட சினம், வியர்வைத் துளிகளாக, சிவபெருமானின் மேனியில் இருந்தது. சிவபெருமான் வியர்வைத் துளியை வழித்து எறிந்தார். அந்த வியர்வைத் துளி, கடலில் விழுந்து, ஓர் அசுரனாக உருவம் பெற்றது. சமுத்திர ராஜனும் அந்த அசுரனை தன் மகனாக எண்ணி வளர்த்து வந்தார். ஜலத்தில் இருந்து பிறந்ததால் அசுரனுக்கு ‘ஜலந்தரன்’ என்று பெயர் சூட்டினார்.
சிறந்த வல்லமை படைத்தவனாக ஜலந்தரன் வளர்ந்து வந்தான். தனக்கென்று ஒரு நகரத்தை அமைத்துக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். தக்க வயதில் காலநேமி என்பவருடைய பெண் பிருந்தையை மணந்தான். அனைத்து வளங்களையும் பெற்றிருந்ததால், ஆணவம் கொண்டான் ஜலந்தரன். தானாக வலியச் சென்று தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமானையும் வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.
அந்த எண்ணத்தை நிறைவேற்ற கயிலையை நோக்கி பயணித்தான். ஜலந்தரன் வருவதை அறிந்த முனிவர்கள் ஓடி ஒளிந்தனர். இனி கொடியவனால் என்ன நேருமோ என்று அஞ்சினர். அப்போது வேதியர் வேடம் தாங்கி சிவபெருமான், ஜலந்தரன் செல்லும் பாதையில் அவனை நோக்கி வந்தார். யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்? என்று ஜலந்தரனைப் பார்த்து வினவினார் சிவபெருமான். அதற்கு, தன் பெயர் ஜலந்தரன் என்றும், சிவபெருமானுடன் போரிட்டு அவரை வெல்லச் செல்வதாகவும் ஆணவத்துடன் கூறினான். வேதியரும், முதலில் தன்னை வென்றுவிட்டு, பிறகு சிவபெருமானுடன் போரிடச் செல்லுமாறு பணித்தார். இதைக் கேட்டு சிரித்தான் ஜலந்தரன். “தேவாதி தேவர்களே என்னிடம் தோற்று விட்டார்கள். நீயா என்னை வெல்லப் போகிறாய்?” என்று வேதியரைப் பார்த்து ஏளனம் செய்தான். வேதியரும், தேவாதி தேவர்களை வெற்றி கண்டதுபோல, தன்னிடமும் போரிட்டு, அதில் வெற்றி பெற்றுவிட்டு சிவபெருமானுடன் போரிடச் செல்லலாம் என்று கூறினார்.
கோபம் கொண்ட ஜலந்தரன், வேதியரை நோக்கி, “இனி எமலோகம் செல்லப் போகிறாய்” என்று கர்ஜித்தான். உடனே வேதியர் தன் கால் கட்டை விரலால் ஒரு சக்கரத்தை வரைந்தார். பூமியில் வரையப்பட்ட அந்த சக்கரத்தை தூக்கிவிட்டு, சிவபெருமானிடம் போர் புரியலாம் என்று ஜலந்தரனை அறிவுறுத்தினார் வேதியர்.
அந்த சக்கரத்தை அலட்சியமாக எண்ணி, ஜலந்தரன் தூக்கத் தொடங்கினான். முழு பலத்தையும் உபயோகித்து அதை தூக்கியபோது, அந்த சக்கரம் அவனை இரு துண்டுகளாக்கியது. இப்படி, ஆணவத்துடன் செயல்பட்ட ஜலந்தரனை, சிவபெருமான் அழித்து, முனிவர்களையும் தேவர்களையும் காத்த இடம் என்பதால், இந்த இடம் திருவிற்குடி என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பில் சிறந்த பிருந்தையை விஷ்ணு பகவான் ஏமாற்றியதன் காரணமாகச் சிவபெருமான் பிருந்தையின் கணவர் ஜலந்தராசுரனை சிவபெருமான் வதம் செய்தார். சோகத்தில் மூழ்கிய பிருந்தை என்னைப்போல் நீயும் மனைவியை இழந்து தவிர்க்க வேண்டும் என விஷ்ணு பகவானுக்குச் சாபம் கொடுத்த காரணத்தினால் அவர் ராம அவதாரம் எடுக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது.
அதன் காரணமாகவே மனைவி சீதையை ராமபிரான் பிரிந்து வாழ்ந்து தவித்தார் எனப் புராணம் கூறுகிறது.
இங்குள்ள காலசஹாரமூர்த்தியின் கையில் சக்கரம் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த யந்திரம் இவரருகில் உள்ளது. இக்கோயில் தற்போது பள்ளத்தூர் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பராமரிப்பில் உள்ளது.