அச்சு அசல் ஒரு கிராமத்து படம். தயாரிப்பாளர் தான் நாயகன் என்றதும், அவர் ஆசைக்கு தான் படத்தை எடுத்திருப்பாரோ என்று முதலில் எண்ணினேன். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நாம் நினைத்தது தவறு என்று புரிந்தது. படத்தின் பாடல்களையும் எழுதியிருக்கிறார். எடிட்டர் வேலையும் செய்திருக்கிறார்!
அவருக்கு ஜோடியாக இஸ்மத் பானு நடித்திருக்கிறார். தனுஷின் அசுரன் படத்தில் சிறு வேடத்தில் பார்த்த ஞாபகம். அவரின் பின்னணி குரலும் கிராமத்து கொச்சை மொழியும் அட்டகாசமாய் இருந்தது. இருவரும் அவரவர்களின் தேர்ந்த நடிப்பின் மூலம் முழு படத்தையும் தாங்கியிருக்கிறார்கள்.
திருமணமாகி ஐந்து வருடங்களாகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்கிற பிரச்னையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது திரைக்கதை. கொஞ்சம் விட்டால் ஒரு அழுவாச்சி காவியமாய் ஆகியிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள படம். இயக்குனரின் திறமையால், எந்தவொரு இடையூறும் இல்லாமல் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவையுடன் சீராய் நகர்கிறது திரைக்கதை.
அதற்கு எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரமும் நன்கு ஒத்துழைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இயக்குனர் குற்றம் கடிதல் அசோஸியேட் மற்றும் சூழல் வெப் சீரிஸிலும் பணிபுரிந்திருக்கிறார் என்று படித்தேன். அவருக்கு சினிமா திரைமொழி நன்றாய் கை வருகிறது.
சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்களும் சரி பின்னணியிசையும் சரி கவர்கிறது.
அறிவியல் கூடங்களின் ஆய்வின்படி அணுகாமல் மனித உணர்வுகளின் படி அணுகவும் என்பது போல ஒரு பொறுப்பு துறப்பை படத்தின் ஆரம்பத்திலேயே போட்டிருந்தார்கள். ஏன் என்று முதலில் புரியவில்லை. செயற்கை கருத்தரிப்பு பற்றிய நீண்ட விளக்கமில்லாமல் மேம்போக்காய் கதைக்கு பயன்படுத்தியது, பிறகு கதாநாயகன் மாட்டிற்குச் செயற்கை கருத்தரிப்பு செய்வதால்தான் அவருக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பது போல சித்தரித்திருந்தது போன்ற காரணங்களினால் தான் அந்த முன்ஜாமீன் என்று நினைக்கிறேன்.
கணவனும் மனைவிக்குமான படுக்கையறை காட்சிகளின் நீளம் மிக அதிகம். நிற்க. நீங்கள் நினைப்பது போல அல்ல அது. இருவருக்குமான ஊடல்களை சித்தரிக்கும் வசன காட்சிகள் அடிக்கடி வருகின்றன. திரைக்கதையுடன் ஒன்றி பார்க்கும் போது அவைகள் பெரிதாய் சிரமத்தை கொடுக்கவில்லை. சிலருக்கு மட்டும் அந்த காட்சிகள் திரும்ப திரும்ப வருவதாக தோன்றலாம்.
மலையாள சினிமா குடி புகை என்று குத்தாட்டம் போடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும். நாயகன் குடித்து விட்டு வருவதாக அமைய கூடிய காட்சிகள் இருந்தும் குடியை சுத்தமாய் தவிர்த்திருக்கிறார்கள்.
படத்தில் சில காட்சிகள் கொஞ்சம் விட்டாலும் 'cringe' -காயிருக்க வேண்டியது. அப்படி ஆகாவண்ணம் அந்த இடங்களிலெல்லாம் நகைச்சுவையை புகுத்தியோ கத்தரித்தோ பார்த்துக் கொண்டார்கள். அந்த விஷயத்தில் இந்த படம் எனக்கு பிடித்திருந்தது.