வகைமை: சிறுகதைகள்
ஆசிரியர்: பெரு.முருகன்
வெளியீடு: வானவில் பதிப்பகம்
பக்கங்கள்: 80
ஒரு புதிய எழுத்தை வாசிக்க வேண்டுமென்றத் தூண்டலில்தான் இந்த தொகுப்பை இன்று வாசிக்க கையிலெடுத்தேன். அனைத்தும் சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் வாழ்வியல்புகளையும், வாழ்வியல் மாற்றங்களையும், ஆசைகளையும், சவால்களையும், வெளியாட்களும் கூட அனுக்கமாகும் எதார்த்தங்களையும் பேசுகின்றன.
முதல் கதையாக வரும் 'தன்னிரக்கம்' கடந்து வந்த பாதையையும், நிகழ்காலத்தையும் அசைப்போட்டபடி நடக்கும் தன் கூட்டத்தோடும், ஒரு காலத்தில் தன்னை தாழ்த்திப்பார்க்கப்பட்ட மற்றவர்களோடும் சரிவர அண்ட முடியாமல் ஒரு படித்த இளைஞனின் மனோநிலையையும், இருப்புச் சார்ந்த உளவியலையும் கடத்தி இனிய காலை நேர பயணம் போலச் சென்றது. புனைவிற்கான வடிவம் குறைவே என்றாலும், கவிநயமும் நகைச்சுவையும் இழையோடும் எழுத்து நடை இரசிக்க வைக்கிறது. சில இடங்களில் சிரிப்பையும் புன்முறுவலையும் ஏற்படுத்தியது.
'பிரம்ம வித்தை' கதை, ஓரிரு நடைமுறை மீறல்களை மீறி சும்மா ஜிலுஜிலுவென்று முக்கால்வாசி வரை சென்றது. உண்மையிலேயே இதை வாசித்தபோது ஆசிரியர் கையாளும் வர்ணனைகளையும், காட்சிக்கோணங்களையும் நாற்பதுகளில் உள்ளவனையும் பதின்மத்திற்கு இழுத்துச் செல்லும் எழுத்து ஜாலங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. கதையின் இறுதிப்பகுதியும், அதில் கையாளப்பட்ட இரு நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்களும் சினிமாக்கதை போன்றுச் சென்றதை எதார்த்த வரையறைகளுக்குள் அடைத்து அல்லது கொண்டுவந்து கதைக்களத்திற்கு நியாயம் சேர்த்துவிட்டது.
அடுத்து 'செருப்பு' கதையும் இரசிச்சி சிரிச்சி, நோகுற இரகம்தான். சென்னைக்கான பேச்சு வழக்கில் இதுவரையில் நான் வாசித்திருக்கும் முழு நீளக் கதையும் கூட. மிகவும் சுவாரசியமாகச் சென்றது. பல இடங்களில் நாயகனின் புலம்பல்களும், கலாய்ப்பான வர்ணனைகளும் பக்கென சிரிக்க வைத்தன. நல்லதொரு 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' வகையறா.
தொகுப்பின் நான்காவது கதையாக வரும் 'அறுதி உண்மை' செய்திகளில் அவ்வப்போது கண்ணில்பட்டுச் செல்லும் 'என்கவுன்ட்டர்' சப்ஜெக்ட் கதை, போலீசால் என்கவுன்ட்டர் செய்யப்பட முக்கியப்புள்ளியின் அபிமானியின் பார்வையிலிலிருந்தும், உணர்ச்சிப்பெருக்கிலிருந்தும் பயணப்பட்டாலும், சென்னையின் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் வாழ்வியலையும் நுண்ணியமாகப் பேசுகிறது. ஒரு பரபரப்பான சினிமாக்கதை போன்று நகர்ந்தாலும், இந்த கதையும் இயல்புவாத அடிப்படையிலேயே முற்றும் பெறுகிறது. கதையின் முடிவில் கதாசிரியருக்கே உரிய அழகான உவமை அசர வைக்கிறது.
'முக்கோணத்தின் பக்கங்கள்' என்ற கதையில், 'பிரம்ம வித்தை' மற்றும் 'செருப்பு' கதைகளின் சாரங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. என்றாலும் கதை, மூன்று பேரின் கோணங்களில் பயணிப்பதால் புதிய அனுபவத்தை தரவல்லது. அந்த இரண்டு நிமிட மேட்டருக்கு மட்டும் சனாதனம் குறிப்பிட்ட ஆட்கள் பார்ப்பதில்லை என்ற பகுதியை கற்பனைக் கதையாகப் பார்க்க முடியவில்லை. இதிலுள்ள எல்லா கதைகளிலும் உண்மை நிகழ்வுகள் ஒளிந்துள்ளதாகவேக் கருதுகிறேன்.
'முக்கோணப் பக்கங்கள்' கதைப்படி மனைவியை இழந்த, ஜோசியம் பார்க்கும் பார்ப்பனரொருவர், தனது ஒற்றை மகனை படிக்க வைத்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க அவனோ அங்கேயே வெள்ளைக்காரப் பெண்ணொருத்தியை மணந்து, தகப்பனை இங்கே தனியே விட்டுவிடுகிறான். மறுபுறம் ஒரு முரட்டு மீனவ இளைஞன் ஒரு பிராமணப்பெண்ணை ஒரு தலையாய் காதலித்தப்படி (?) சரி, கொலைவெறி கிறக்கத்தோடு சைட் அடித்தபடி நிதமும் அவளையேச் சுற்றிவருகிறான்.
பயந்தபடியும் பாரா முகமாகவும் செல்லும் அவளை தன் வழிக்கு கொண்டு வர அந்த இளைஞன், முன்சொன்ன ஜோசிய ஐயரிடம் 'கயிறு' வாங்கி கட்டிக் கொள்ள, அதுவோ எதிர்பாராத வேறொரு விபத்தில் முடிகிறது. கடைசியில் உடம்பு இளைக்காமலேயே அந்த குண்டு மங்கை, தான் விரும்பியவனைக் கரம் பிடித்து அமெரிக்காவிற்கு சந்தோசமாக பறந்துச் செல்ல, துன்பியலுக்கு உள்ளான ஐயர் மற்றும் அந்த இளைஞனின் கதி நம்மை சற்று பாவப்பட வைத்தாலும், நிறைய யோசிக்க வைக்கவில்லை. எல்லாமே நடப்புகள்தான், அவரவர் விதிதான் என்று வாசிப்பவரையும் எதார்த்தப்போக்கோடுக் கடக்க வைக்கிறது.
மொத்தம் எட்டு கதைகளே என்றாலும் எல்லாமே வாசிக்கத் தகுந்தவை. இதுவரை நான் வாசித்திராத ஒரு புதிய எழுத்தை வாசிக்க நினைத்துதான் இந்த தொகுப்பைத் தொட்டேன். ஏமாற்றவில்லை. கதைகள் பேசும் வாழ்வியலுக்கும், கடத்தும் உணர்வுகளுக்கும், சென்னை பேச்சு வழக்கு, ஆசிரியரின் நகைச்சுவை இழையோடும் சரளமான எழுத்து நடை, பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும் வர்ணனைகள், இரசனையான மொழி நடையெல்லாம் இந்த தொகுப்பின் பலம்.
குறிப்பிட்ட உயர்மட்ட சமூகம் தலைக்காட்டும் கதைகள் உட்பட எல்லாக் கதைகளிலும் மீன் வாசம் கலந்திருக்கிறது. அதுவும் 'பிரம்ம வித்தை' கதை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.