Breaking News :

Saturday, April 12
.

வெள்ளைக்கார துரையை அதிர்ச்சியடைய வைத்த ஏரிகாத்த ராமர் கோவில்


செ ன்னை பேருந்துகளாலும், ரயில் போக்குவரத்தினாலும் வசதியாகச் செல்லுமாறு அமைந்த தலம். ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது. கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது.

விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில்  தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது. ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம். 5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம். ஆழ்வார்களில் பக்திசாரர் என்றழைக்கப்பட்ட திருமழிசை ஆழ்வார்முக்தி அடைந்த தலம் இதுவே. சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.

ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம். வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ தீ¬க்ஷயாகிய  ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான். மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம். இதற்கு அதனால் த்வயம் விளைந்த பூமி என்ற பெயரும் உண்டு. 1967-ம்ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது ஒரு சுரங்கத்தில் நவநீதக் கண்ணமூர்த்தியும், பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்சஸமஸ்காரத்திற்கு அவரது ஆசாரியர் பெரிய நம்பியால் உபயோகப்படுத்தப்பட்டவையாகும் என்பதால் இன்றும் அவை ராமானுஜரின் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக் காலங்களில் உடைத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவித்துவந்தது. கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் பலமுறை கரையைச் சீர்படுத்தியும் பலனில்லை. எனவே 1825-ம் ஆண்டில் அவர் இம்முறை மழைகாலத்தில் ஏரி உடையாமல் இக்கோவிலில் உறையும் ராமர் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் என்ற தாயாரின் ஸந்நிதையைக் கம்பெனி செலவிலேயே கட்டித் தருவதாக வாக்களித்தார்.

பெருமழை பெய்து ஏரி நிரம்பி வழிந்தபோது இரவில் ராமரும் லக்ஷ்மணரும் நடந்து சென்று அதனை உடையாமல் பாதுகாப்பதைக் கண்டு பரவசமடைந்த அந்த துரை ஜனகவல்லித் தாயார் ஸந்நிதியைக் கட்டிக் கொடுத்தார். இன்றும் தாயார் ஸந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து ராமபிரானை ஏரி காத்த ராமர் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார். விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார். இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம். கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். இவரது ஸந்நிதிதான் கலெக்டர் துரையால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே. ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.

 கோவிலின் கோபுரத்தில் வடகலைத் திருமண் அடையாளமும் ஸ்ரீராமா என்ற எழுத்துக்களும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன. ஆனிமாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை.
இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சேராவிட்டாலும் மிகுந்த புகழ் பெற்றது.

ராம ராம ராம ராம ராம ராம ராம
ராமர் வழிபட்ட மல்லிகார்ஜுனேஸ்வரர்! - தனித்துவமான தருமபுரி கோட்டைக் கோயில்
சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட துக்கம் மேலிட, மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ராமன், காடு, மலை என அலைந்து திரிந்தார். 'அண்ணன் ராமரின் துயரத்தைப் போக்க வேண்டும்' என்று நினைத்த லட்சுமணன் நாரதரிடம் சென்று, தன் அண்ணனின் துன்பம் தீர்க்க வழி கேட்டான். நாரதர், லட்சுமணனை அகத்தியரிடம் சென்று கேட்கும்படி கூறினார்.

ஆனால் அகத்தியரோ, லட்சுமணனை ஹயக்ரீவரிடம் சென்று கேட்கும்படிக் கூறியனுப்பிவிட்டார். லட்சுமணனும் சளைக்காமல் ஹயக்ரீவரிடம் சென்றான். லட்சுமணன் தான் வந்த  காரணத்தை ஹயக்ரீவரிடம் தெரிவித்தான். ஹயக்ரீவர், 'உன் அண்ணன் ராமரின் துன்பம் நீங்கவேண்டுமென்றால், சிவனைவிடவும் சக்தி உயர்ந்திருக்கும் தலத்துக்குச் சென்று வழிபட்டால், ராமரின் துன்பம் நீங்கும்' என்று கூறினார்.

ஹயக்ரீவர் கூறியபடி ராமர் வழிபட்ட தலம்தான் தருமபுரியில், 'கோட்டைக் கோயில்' என்று அழைக்கப்படும் அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்.

சிவபக்தரான பிருங்கி முனிவர், எப்போதும் சிவனை மட்டுமே வழிபடுபவர். அவர் தன்னையும் வழிபட வேண்டும் என்பதற்காக, பார்வதி சிவனுடன் இணைந்து காட்சி தந்தபோது, பிருங்கி முனிவர் வண்டாக மாறி, சிவனை மட்டும் வலம்வந்து வழிபட்டார். சினம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரின் சக்தி முழுவதையும் அகற்றிவிட்டாள். தன் பக்தன் பிருங்கிக்கு ஈசன் மூன்றாவது கால் கொடுத்து நிற்கச் செய்கிறார். 'தன்னைவிட பக்தன் முக்கியமா?' என்று சினம் கொண்ட பார்வதி சிவனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதன் காரணமாக பூமியின் இயக்கம் நின்றுவிட்டது. தம்மால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று எண்ணிய பிருங்கி முனிவரும், தேவர்களும், முனிவர்களும் பிரார்த்தித்துக்கொண்டதால், சிவனும் சக்தியும் இணைந்தார்கள்.

தேவியின் மகிமையை உலகத்தவர்க்கு உணர்த்தும்விதமாக சிவபெருமான், அம்பிகைக்கு இந்தத் தலத்தில் உயர்வான இடத்தை வழங்கியிருக்கிறார். ஆம். இறைவனின் சந்நிதியைவிட மிக உயரத்தில் அம்பிகையின் சந்நிதி அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில்தான் ராமர், சிவ சக்தியரை வழிபட்டு, மனத்துயரம் நீங்கப் பெற்றார். ராமர் இந்தத் தலத்தில் வழிபட்டதை நினைவுகூரும் வகையில், அம்பாள் சந்நிதியின் கீழ் ராமாயணக் காட்சிகளைச் சித்திரிக்கும் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

சக்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்தக் கோயிலில் நவராத்திரி விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் கௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்ற விரதங்களும் கோயிலில் வைத்துக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஶ்ரீராமர் அம்பிகையை வழிபட்ட காலம் வசந்த நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ராமருக்கு மட்டுமல்லாமல், பாண்டவர்களுக்கும் அருள்புரிந்த அன்னை, இந்தக் கோயிலில் அருளும் கல்யாண காமாட்சி அம்மன். 18 கோணம், 18 யானை, 18 திருப்படிகள் கொண்டதாக அமைந்திருக்கிறது அம்பிகையின் சந்நிதி. சுவாமி விமானத்தைவிடவும் அம்பிகையின் விமானம் உயர்ந்து காணப்படுவது, சக்தியின் பெருமையை நமக்குப் பறைசாற்றுவதாக இருக்கிறது.

சூலினி ராஜதுர்கை :
காமாட்சி அம்மன் சந்நிதியிலேயே ஶ்ரீராஜ துர்கை சந்நிதிகொண்டிருக்கிறாள். மிகவும் அழகிய திருக்கோலத்தில் காட்சி தரும் ராஜ துர்கையை மகாபாரத தர்மபுத்திரர் முதல் வரலாற்றுக் கால அதியமான் வரை பலரும் வழிபட்டிருக்கிறார்கள்.

எண்திசைக் காவலர்கள் :
மண்டபத்தின் விதானத்தில் எண்திசைக் காவலர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விதானம் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மையப் பகுதியில் சிவன் எட்டுக் கரங்களுடன் நடராஜர் வடிவத்தில் காட்சிதருகிறார். நடராஜரின் கரங்களில் சூலம், உடுக்கை, பாசம், அக்னி காணப்படுகின்றன. நடராஜரைச் சுற்றிலும் எட்டு திசைகளின் காவலர்கள் தங்களுடைய வாகனங்களில் அமர்ந்தநிலையில் காட்சிதருகின்றனர். திசைக் காவலர்களில் இந்திரன் மட்டும் இந்திராணி தேவியுடன் காட்சிதருகிறார்.

மிகவும் புராதனமான இந்தக் கோயில் காலப் போக்கில் மறைந்துவிட்டது. கி.பி.9-ம் நூற்றாண்டில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்த நுளம்பா மன்னரின் பார்வையில் வேளாள மரத்தினடியில் சிவபெருமான் லிங்க வடிவத்தில் தேவியுடன் காட்சிதந்தார். தனக்குக் காட்சி தந்த இறைவனுக்கும் இறைவிக்கும் சிற்பக்கலையின் உச்சம் என்று சொல்லும்படி இந்தக் கோயிலை மிகவும் எழிலுடன் எழுப்பி, மானியங்களும் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.