Breaking News :

Thursday, November 21
.

ஆடி மாதம் சிறப்புகள்


தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், அம்பாள் மாதம் என்றும் சிறப்பாக கூறுவர்.

ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும் என்பதை முன்னோர்கள் கணித்து ஆடிப்பட்டம் தேடி விதை என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடிப்பட்டம் எப்போது வரும்? என காத்திருப்பர்.

இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. அதுபோல ஆடி பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடிப் பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்?

ஆடி மாதம் முதல் நாளான்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையானது மகாபாரதப் போருடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றது. இந்தப் போரானது ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று மகாபாரதப் போர் ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது.

இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1ஆம் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி பூஜை செய்கிறார்கள். மேலும், இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், புதியதாக திருமணமான தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக அகற்றிவிட்டு நல்ல எண்ணங்களை விதைத்து மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்கவும், செல்வம் பெருகவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தின் சிறப்புகள் :

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் இது.

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாக இருக்கின்றன.

ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

நன்றி: கு பண்பரசு

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.