செயற்கையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்கு முன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்தான் போய் விடுகிறோம்.
எங்கும் எதிலும் அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத கேள்விகள் நிறைய இருக்கிறது .
அப்படிப்பட்ட கேள்விகளில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).
விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் .
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக் கோவில்.
இந்துக்களின் புராண இதிகாசங்களின் படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பனி லிங்க வடிவத்துக்கு என்ன விசேஷம்! ஹிமவான் மகளான உமா மகேஸ்வரிக்கு ஒரு பெரிய சந்தேகம்! உலகுக்கே தந்தையான தாங்கள், கழுத்தில் பல கபாலங்கள் கோர்க்கப்பட்ட மாலையை ஏன் தரித்திருக்கிறீர்கள்? என்று. தாக்ஷாயணி ஒவ்வொரு முறையும் நீ மறைந்து மறுபடி அவதரிக்கும் போது ஒரு கபாலத்தை மாலையில் சேர்த்துக் கொள்வேன் என்றார்.
பொன்னார் மேனியன்! அப்படியா! நான் அடிக்கடி மறைந்து விடுகிறேன், தாங்கள் மட்டும் நிலைத்து இருப்பது எப்படி? என்றாள் பாலாம்பிகை. இது சிருஷ்டி ரகசியம்! சமயம் வரும் போது உனக்கு எடுத்துரைப்பேன் என்றார் நமசிவாயமூர்த்தி!
காலங்கள் உருண்டோடின. மதி அணி சூலினியான தேவிக்கு சிருஷ்டி ரகசியத்தை உபதேசிக்க எண்ணினார். ஈசன்!
ஈசன், பார்வதி, விநாயகர் சகிதமான நந்தி வாகனத்தில் கயிலை மலையை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். சிவபெருமான் உன்னதமான பிறப்புத் தத்துவத்தை எடுத்துரைக்கும் போது சதிதேவி மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.
செல்லும் வழியில் தன்னிடமிருந்து ஒவ்வொரு பொருளையும் களைந்தார்!
அப்படி, நந்தி தேவரை (காளையை) விட்ட இடம் பெயில் காவுன் (ஹிந்தியில் நந்திக் கிராமம்). இதுதான் திரிந்து பெஹல்காம். சந்திரனை விட்ட இடம் சேஷநாக். விநாயகரை நிறுத்திய இடம் மஹா கணேஷ் பர்லத்- மஹா குணாஸ். பஞ்ச பூதங்களைத் துறந்த இடம்- பஞ்சதாரணி. குகைக்கு அருகில் கங்கா நதியைத் துறந்த இடத்திலிருந்து அமராவதி வருகிறது. உலகின் பற்றுக்களை துறந்து இறைத் தாண்டவம் ஆடிய சிவ சக்தி ஸ்வரூபங்கள் குகையை அடைந்தனர். மான் தோலை ஆசனமாக இட்டு அதன் மேல் தான் அமர்ந்து அருகில் தன்னில் பாதியான மங்கை நல்லாளையும் அமர வைத்துக் கொண்டு சிருஷ்டி தத்துவத்தை விளக்கினார் பிறையணிச் சடையன்.
குகையைச் சுற்றி உள்ள உயிரினங்கள் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதால் இறைவன் பெரிய தீயை (காலாக்னி) உருவாக்கினார். மான் தோலுக்கு அடியில் ஒரு புறா முட்டை இருந்தது. முட்டை காலக்னியால் அழியவில்லை. அதிலிருந்த இரு உயிர்களும் கயிலை மலையான் அளித்த விளக்கங்களைக் கேட்டு, சாகாவரம் பெற்றன!
குகையில் லிங்க வடிவங்களாக சூட்சுமப் பொருளாக உலகை ரட்சிக்க பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சி தருகின்றனர். பிருகு முனிவர்தான் முதன் முதலில் அமர்நாத் தரிசனம் செய்திருக்கிறார். பிருகு ஸம்ஹிதையில் இந்த வரலாறு இடம் பெற்றிருக்கிறது.
இந்தக் குகைக் கோயிலின் வரலாறு 5000 வருடங்களுக்கும் மேலானது போலும்! கி.மு. 300-ல் ஆரிய குல அரசர்களால் பூஜிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 11-ம் நூற்றாண்டில் சூரிய மதி என்ற ஒரு ராணி இந்தக் கோயிலுக்கு திரிசூலங்கள், பூஜைப் பொருட்கள் போன்றவற்றை அளித்ததாக வரலாறு.
15-ம் நூற்றாண்டில் பூட்டா மாலிக் என்ற இஸ்லாமியச் சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் பெரியவர் ஒருவர் கூடை நிறைய நிலக்கரியைக் கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் செல் என்றாராம். தமது இல்லத்தை அடைந்த சிறுவனுக்கு ஆச்சரியம்! கூடையில் தங்கக் காசுகள்! பூட்டா மாலிக்குடன் ஊர் மக்களும் சேர்ந்து மறுபடியும் மலை மேல் ஏறிப் பார்த்தனர். யாரையும் காணவில்லை! அங்கு ஒரு குகையில் 3 பனி லிங்க வடிவங்கள் மட்டும் காட்சி அளித்தனவாம். அன்றிலிருந்துதான் இத்தல ஈசனை மக்கள் தரிசிக்க ஆரம்பித்தனர்.
இந்துக்களின் சிவ வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு
சென்றிருக்கிறார்கள். என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.
இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam) என்ற இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு. இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலையின் அடிவாரத்திலிருந்து அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு நாட்களில் கால்
நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.
சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான், வியப்பதிற்கில்லை. ஆனால் இங்கே ஆண்டு தோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான் இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.
இங்கே இன்னுமொரு அதிசயம் காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம் விஞ்ஞானத்தால் இன்று வரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்று வரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.
அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப் போன வெகு சொற்ப இடங்களில் அமர்நாத்தும் ஒன்று. என்பதே உண்மை.